(Reading time: 13 - 25 minutes)

அமேலியா - 19 - சிவாஜிதாசன்

Ameliya

சந்த் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து கொண்டிருந்தான். இரவு நேரமாதலால் பனி சற்று அதிகமாகவே இருந்தது. தன் கைகளை சூடு பரப்ப தேய்த்துக்கொண்ட வசந்த் மருத்துவமனையை விட்டு கீழிறங்கி அருகில் இருக்கும் தேனீர் கடைக்கு சென்று தேனீரை ஆர்டர் செய்தான்.

அந்தக் கடையில் கூட்டமொன்றும் பெரிதாக இல்லை. காதல் ஜோடி ஒன்று தங்களை மறந்து பேசிக்கொண்டிருந்தது. காதல் ஜோடிகள் செய்யும் லீலைகளைப் பார்த்த வசந்த்திற்கு புன்னகை அரும்பியது.

வசந்த் ஆர்டர் செய்த தேனீர் வந்தது.

"வேற ஏதாவது வேணுமா சார்?" சர்வர் பவ்வியமாக கேட்டான்.

"வேண்டாம்"

தேநீரின் இளஞ்சூடு வசந்தின் தொண்டைக்கு ஒத்தடம் கொடுப்பதைப் போல் இருந்தது. அவன் மனம் காலையில் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தன.

அமேலியாவின் சமையலை சாப்பிட முடியாமல் விழித்துக் கொண்டிருந்த தன் அக்காவைக் கண்ட வசந்த், "இந்த சமையலை நீ முழுசா சாப்பிட்டா, அப்பாவ அட்மிட் பண்ணிருக்க  ஹாஸ்பிட்டல்ல உனக்கும் ஒரு படுக்கையை தயார் செஞ்சிட வேண்டியது தான்" என நகைச்சுவையாய் கூறி தான் கொண்டு வந்த உணவை மேகலாவிடம் கொடுத்தான். கொடுக்கும்போது அவன் கண்கள் அமேலியாவை நோக்கியதை மேகலாவும் கண்டுகொண்டாள்.

தந்தையின் உடல் நலத்தைப் பற்றி சிறிது நேரம் விசாரித்துவிட்டு, வசந்த் ஹாலிலேயே அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தான். பத்திரிக்கை படித்தான், பாடல்கள் கேட்டான்.

மேகலாவின் அறையினுள் நுழைந்த அமேலியா வெளியே வரவேயில்லை. வசந்த் ஹாலிலேயே தவம் கிடந்ததும் அவன் கண்கள் அவ்வப்போது அமேலியா இருக்கும் அறையை நோட்டமிட்டதும் மேகலாவுக்கு கலக்கத்தை உண்டாக்கியது. வசந்தின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.

நாராயணன் சொன்னது போல் 'இளமை எதையும் செய்யும் சக்தி படைத்தவையாக இருக்குமோ' என தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டாள் மேகலா.

"வசந்த்"

"சொல்லு அக்கா"

"இன்னைல இருந்து இரவு நேரத்துல நீ ஹாஸ்பிடல்ல அப்பாவுக்கு துணையா இரு"

வசந்த் திருதிருவென விழித்தான். "அக்கா காலைல நான் ஆபீஸ் போகணுமே"

"ஒரு வாரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா"

"என்ன அக்கா இப்படி சொல்லுற. நீ அப்பா கூட இரு. நான் வீட்டை பாத்துக்குறேன்"

"அது சரிப்பட்டு வராதுடா. நான் வீட்டுல இருக்கிறது தான் சரி"

வசந்த் புரியாமல் விழித்தான்.

"நேத்து அமேலியா ரொம்பவே சிரமப்பட்டிருக்கா"

"ஆமா மயக்கம் போட்டு என்ன படாதபாடு படுத்திட்டா"

"அது மட்டும் இல்ல வேற ஒண்ணும் இருக்கு"

"நேத்து அவளுக்கு வயித்து வலி"

"மயக்கம் தான வந்துச்சி"

"எல்லாத்தையும் உன்கிட்ட விவரமா சொல்லிட்டு இருக்க முடியாது. புரிஞ்சிக்கோ. அத எப்படி கையாளனு தெரியாம தவிச்சிருக்கா. இது போன்ற சமயத்துல இன்னொரு பெண் பக்கத்துல இருந்திருந்தா அவளுக்கு ஆறுதலா இருந்திருக்கும்"

எல்லாவற்றையும் யோசித்தபடியே தேனீரை சுவைத்து முடித்தான் வசந்த்.

ராக்கில் இயங்கி வரும் அமெரிக்க முகாமில் கர்னல் ஜார்ஜ் மிகவும் கோபத்தோடு வாக்கி டாக்கியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அவரது குரல் கர்ஜனையோடு ஒலித்தது.

"எந்த காரணமும் எனக்கு வேண்டாம். அமெரிக்க அரசாங்கத்துக்கு என்னால பதில் சொல்ல முடியலை"

எதிர்முனையில் இருந்து அவருக்கான பதில் வந்தும் அது கர்னலுக்கு ஆறுதலைத் தரவில்லை. கர்னல் ஜார்ஜிற்கு பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. இதுவரை பல அமெரிக்கர்கள் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட அனைவருமே பத்திரிகையாளர்கள். இனி அப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது என மனதிற்குள் கூறிக் கொண்டிருந்த வேளையில், அவர் முன் வந்து நின்றார் வாட்சன்.

"கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் உடல் கிழக்குல இருக்க ஒரு கிராமத்து வீதியில கிடைச்சிருக்கு சார்"

"அந்த கிராமத்துல இருக்கவங்களை விசாரிச்சீங்களா?"

"பிரயோஜனம் இல்லை சார். நமக்கான பதில் கிடைக்காது. கொலை எங்கயோ நடந்திருக்கு. நம்மை குழப்புறதுக்கு அங்க கொண்டு வந்து போட்டு இருக்கலாம்"

கர்னல் ஆமோதிப்பதாய் தலையசைத்தார். "கொல்லப்பட்ட பத்திரிகைகாரங்க ரொம்பவே அனுபவம் வாய்ந்தவங்க. ஒரு இடத்துக்கு போகணும்னா ரொம்பவே கவனமா இருப்பாங்க அதுவும் இது போன்ற இடத்துல அவங்க எப்படி நடந்திருக்கணும் ?"

"சென்சேஷனல் நியூஸ் கிடைக்கும்னா கடல்ல கூட குதிக்கிறவங்க தான் சார் பத்திரிகைகாரங்க  அது அவங்க தொழில் வழக்கம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.