(Reading time: 12 - 24 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 05 - வத்ஸலா

Vivek Srinivasan

மாலை நேர சூரிய கதிர்களுடன் செல்ல சண்டை போட்டுக்கொண்டே விசாகப்பட்டினம் பறந்துக்கொண்டிருந்தான் விவேக்.  அதே நேரத்தில் அங்கே பயணிகள் பகுதியில் சுவாசத்துக்கு தடுமாறிக்கொண்டிருந்தார் சுதர்ஷனின் அப்பா.

உடல் நலம் சரி இல்லாத நேரத்தில் இந்த விமான பயணத்தை தவிர்த்து இருக்கலாம் அவர். செய்யவில்லையே!!!  விமான பணிப்பெண்கள் உடனே அவர் அருகில் வர அவருக்கு சட்டென ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டதது. இரண்டு நிமிடங்கள் கழிந்தும் சுவாசம் சீராகவில்லை.

விமான பணிப்பெண்கள் அவசரமாக பயணிகள் மத்தியில் யாரேனும் மருத்துவர்கள் இருக்கிறர்களா என்று தெரிந்துக்கொள்ளும் வகையில் அறிவிக்க அந்த அறிவிப்பு அவன் அணிந்திருந்த ஹெட் போன் வழியே விவேக்கின் காதையும் தொட்டது.

‘யாருக்கு என்ன என்ற லேசான தவிப்பு அவனிடம் தொற்றிக்கொண்டது. ஒரு முறை திரும்பி சக விமானி வைபவை பார்த்துக்கொண்டான் விவேக்.

பொதுவாக விமானத்தில் இருக்கும் வரை எல்லா பயணிகளுக்கும் அவனே பொறுப்பு என்ற உணர்வு விவேக்குக்கு அதிகம். அதுவும் அப்பா கற்றுக்கொடுத்த பாடம்தான்.

முன்பு ஒரு முறை இந்த விமானத்துறையில் சேர்ந்த புதிதில் கேட்டார் அப்பா

‘எப்படிடா போகுது உன்னோட வேலையெல்லாம்..’

‘செம.. பா..’. என்றான் அவன். ‘இட் இஸ் அ ஃபன் டு ஃப்ளை யூ நோ...’ அவன் உற்சாகமாக சொல்ல கோபம் வந்து விட்டிருந்தது அப்பாவுக்கு.

‘என்னது ஃபன்னா.. உன்னை நம்பி அங்கே எத்தனை உயிர் இருக்கு தெரியுமா.. விளையாட்டு இல்லை விவேக் உன் வேலை..’ என்றார் சற்றே கடினமான குரலில்.

‘இல்லப்பா.. நான் அப்படி சொல்லலை..’ 

‘நீ எப்படி சொன்னியோ எனக்கு தெரியாது. ஆனா உன்னோட ஃபளைட்லே ட்ராவெல் பண்ற எல்லாரோட உயிரும் அப்பா உயிருக்கு சமம். அதை மட்டும் எப்பவும் உனக்கு சொல்லிக்கோ...’’ சொல்லி முடித்துவிட்டார் அவர்.

இப்போதும் அந்த வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன!!! அடுத்து என்ன செய்ய வேண்டுமென அவன் மனது கணக்கு போட்டுக்கொண்டிருக்க,

சுதர்ஷன் அப்பாவின் துரதிர்ஷ்டமோ என்னவோ அங்கே பயணிகள் பகுதியில் மருத்துவர்கள் யாரும் இல்லை. இரண்டு மூன்று முறை அறிவித்த பிறகும் தோல்வியே பதிலாக கிடைக்க பரிதவித்துப்போனான் சுதர்ஷன்.

‘ப்ளீஸ்... டூ சம்திங்... ‘ அவன் படபடக்க விமான பணிப்பெண்கள் காக்பிட்டை நோக்கி செல்வதற்குள் விமான கட்டுப்பாட்டை வைபவிடம் விட்டுவிட்டு காக்பிட்டை திறந்துக்கொண்டு வெளியே வந்திருந்தான் விவேக்.

குச் ப்ராப்ளம் ஹை க்யா?’ அவர்களிடம் ஹிந்தியில் கேட்டபடியே விவேக் சுதர்ஷனின் இருக்கை நோக்கி வர இவனை பார்த்து அவன் அதிர்ந்து எழுந்துக்கொள்ள உடலும் மனமும் ஒரே நொடியில் இறுகி செயலற்றுப்போனதைப்போல் நின்றிருந்தான் விவேக்.

இந்த விமானத்துறைக்கு வருவதற்கு முன்பு கல்லூரியில் இவன் இளங்கலை படித்த காலத்தில் இவனும் ஹரிணியும் படித்த அதே கல்லூரியில் படித்தவன்தான் இந்த சுதர்ஷன். அப்போது இவனுக்கு உயிர் நண்பன் சுதர்ஷன். இவனது அப்பாவை ‘அப்பா.. அப்பா... ‘ என அழைத்துக்கொண்டு திரிந்தவன். ஆனால்...

நினைக்க நினைக்க உயிர் வரை பற்றி எரிந்தது விவேக்குக்கு.

‘ஆயுள் முழுவதும் இவனை கண் கொண்டு காணக்கூடாது..’ என்ற ஒரு வேண்டுதல் விவேக்குக்கு எப்போதும் உண்டு.

‘இன்று காலம் இரக்கமில்லாமல் மறுபடியும் என்னை இவன் எதிரில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறதே!!! என் இதய சுவர்களை பழைய நினைவுகள் துண்டு துண்டாய் கிழிக்கிறதே!!!’ சுவாசம் இறுகி அழுந்தியது விவேக்குக்கு.

இப்போது அவன் விழிகள் சுதர்ஷன் அப்பா மீது நிலைக்கொள்ள நெஞ்சை பிடித்துக்கொண்டு துடித்துக்கொண்டிருந்த அவர் நிலை அவனை உலுக்கியது.

‘விவேக் அப்பாவுக்கு ரொம்ப முடியலை எதாவது பண்ணு விவேக்...’ அவன் கெஞ்ச

‘ம்???’ என்றபடி விவேக் விழி நிமிர்த்த விவேக்கின் கத்தி முனை பார்வை அவன் மனசாட்சியை கூறு போட கண்களை தாழ்த்திக்கொண்டான் சுதர்ஷன்.

பார்வையை அவன் அப்பாவிடமிருந்து திருப்பிக்கொண்டு இதயத்தை கல்லாய் சமைத்துக்கொண்டு சொன்னான் விவேக் ‘இன்னும் ஒண்ணே முக்கால் மணி நேரத்திலே வைசாக் போயிடும். அங்கே லேண்ட் ஆனதும் ஏதாவது பார்த்துக்கோ..’

‘விவேக்.... உயிருக்கு போரடறார். ப்ளீஸ்... விவேக் ஏதாவது செய்... உலகத்திலே மனித உயிரை விட முக்கியம் வேறெதுவுமே இல்லை...’ அவன் படபடவென சொல்ல

‘அப்படியா???’ என்றபடி மெல்ல சிரித்தான் விவேக். அவன் என்ன நினைத்து சிரிக்கிறான் என சுதர்ஷனுக்கு புரியாமலும் இல்லை.  

‘எனக்கு அதெல்லாம் தெரியாது... ஃபளைட் கரெக்ட் டைமுக்கு வைசாக் போகணும் அதுதான் எனக்கு முக்கியம்..’ சொல்லிவிட்டு அவன் அழைப்பை காதில் வாங்காமல் நடந்தான் விவேக்.

‘அவருக்கு என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். எதை பற்றியும் எனக்கு கவலை இல்லை. நான் இப்படி செய்வதில் நூறு சதவிகித நியாயம் இருக்கிறது’ என்று தனக்குதானே சொல்லிக்கொண்டான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.