(Reading time: 13 - 25 minutes)

"ங்க எத்தனை அமெரிக்கர்கள் தங்கி இருக்காங்க?" என்று ராணுவ வீரன் ஹோட்டல் மேலாளரிடம் கேட்டான்.

"ஒருத்தர் தான் சார்"

"அவர் பேரு என்ன?" 

"கெவின். அதோ! அவரே வராரே" என்று கெவினை சுட்டிக் காட்டினார் மேலாளர்.

'ஹக்கீம் எங்கே போய் தொலைந்தான்' என்று நாலாபுறமும் கண்களை சுழலவிட்டபடி வந்தான் கெவின். அவனிடம் சென்றான் ராணுவ வீரன்.

"கெவின் நீங்க தான?"

"ஆமா"

"நீங்க எங்களோட வரணும்"

"எதுக்கு?"

"அமெரிக்கர்களுக்கு இங்க பாதுகாப்பு இல்லை. உங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு போகணும். உங்களுடைய பாஸ்போர்ட் கொடுக்க முடியுமா?"

கெவின் தன் பாஸ்போர்ட்டை ராணுவ வீரனிடம் கொடுத்தான்.

"நீங்க எதுக்கு ஈராக்கிற்கு வந்திருக்கீங்க?"

"நான் பத்திரிகைக்காரன். டாக்குமெண்ட்ரி பிலிம் எடுக்க வந்திருக்கேன்"

ராணுவ வீரனின் கண்கள் லேசான அதிர்ச்சியைக் கக்கின.

"இப்போ நீங்க எங்க போறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?" 

"இந்த ஊருல இருக்க முக்கியமான இடத்தை சுத்தி பாக்கலாம்னு போறேன்"

"தனியாவா போறிங்க?"

"இல்லை, ஒரு சின்ன பையன் துணைக்கு வரான்"

"யார் அவன்?"

"இந்த ஊர் காரன் தான். என் கூட தான் வந்தான். திடீர்னு காணாம போய்ட்டான்"

"அவனை தேடி பாருங்க" என்று சக ராணுவத்தினருக்கு கட்டளையிட்டான் ராணுவ வீரன்.

அவர்கள் ஹோட்டல் முழுக்க சோதனையிட்டார்கள். ஹக்கீம் கிடைக்கவே இல்லை. எதற்காக ராணுவவீரர்கள் அப்படி  நடந்து கொள்கிறார்கள் என கெவினுக்கும் புரியவில்லை.

கெவினை தங்களோடு ராணுவத்தினர் அழைத்து செல்வதை தூரத்தில் இருந்து ஒளிந்து கொண்டு பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ஹக்கீம்.

க்கீமிற்கு அந்த நாள் புதுமையாக இருந்தது. இதுவரை எத்தனையோ அமெரிக்ககாரர்களை தீவிரவாதிகளிடம் சிக்க வைத்த போது இல்லாத பயம் அன்று ஏனோ அவனுள் வந்தது.

அவன் முகம் முழுவதும் வியர்வை முத்துக்கள் நிரம்பி இருந்தன,.ஹோட்டலில் ராணுவ வீரர்கள் நாலா புறமும் தேடியது தன்னைத் தானோ என்று எண்ணியவன் சுற்றும் முற்றும் பார்த்தபடியே நடந்தான். சாலையில் செல்வோர் எல்லோரும் தன்னை விசித்திரமாய் பார்ப்பது போல் தோன்றியது அவனுக்கு.

"ஹக்கீம்" ஒரு குரல் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தான்.

இருளில் நின்றிருந்த ஒருவன் வெளிச்சத்திற்கு வந்து மீண்டும் இருளிற்குள் சென்றான்.

அவன் இருந்த திசையை நோக்கி ஹக்கீம் நடந்து இருளில் கலந்தான்.

"எங்க அந்த அமெரிக்ககாரன்?"

"அவனை கூட்டிட்டு வர முடியல"

"ஏன்?"

"திடீர்னு அமெரிக்க மிலிட்டரிகாரங்க வந்து அவனை கூட்டிட்டு போய்ட்டாங்க"

ஹக்கீம் சொன்னதைக் கேட்டதும் எதிரில் நின்றவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. "சரி என்னுடன் வா" என அவன் ஹக்கீமை அழைத்துச் சென்றான்.

அவர்கள் சென்ற பாதை இருளாகவே இருந்தது. இரண்டு மூன்று சந்துகளில் மட்டுமே சிறிய விளக்குகள் இருந்தன. தங்களை யாரேனும் பின் தொடர்கிறார்களா என அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடியே நடந்தனர் இருவரும்.

இருபது நிமிட நடைப் பயணம் முடிந்ததும், இருளான ஒரு பங்களாவிற்கு அவர்கள் வந்து சேர்ந்தனர். அந்த பங்களா சிதிலமடைந்து பயங்கரமாக காட்சியளித்தது. ஆங்காங்கே எரிந்துகொண்டிருந்த தீப்பந்தங்கள் மட்டுமே தங்களால் முடிந்த அளவுக்கு ஒளியூட்டிக்கொண்டிருந்தன.

ஹக்கீமை அழைத்து வந்தவன், ஹக்கீமை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். காவல் காத்துக்கொண்டிருந்த தீவிரவாதிகளின் கண்கள் ஹக்கீமை துளைத்தெடுத்த விதம் ஹக்கீமின் பயத்தை அதிகரித்தது. அவர்கள் அனைவருமே தங்கள் முகத்தை மறைத்திருந்தார்கள். இதற்கு முன் மூன்று முறை அந்த இடத்திற்கு வந்திருந்த ஹக்கீம் இதுவரை அவர்கள் முகத்தை பார்த்ததில்லை.

"ஹக்கீம் உள்ளே வா" என்றான் அழைத்து வந்தவன்.

ஹக்கீம் உள்ளே சென்றான். மாளிகைக்குள் பெரிய வராண்டாவில் ஆழ்ந்த அமைதியில் தனிமையில் ஒருவன் அமர்ந்திருந்தான். இதுவரை ஹக்கீம் அவனை சந்தித்ததில்லை. ஆறடியைத் தாண்டி வளர்ந்திருந்த அந்த தீவிரவாதியும் முகத்தை மறைத்திருந்தான்.

"எப்படி இருக்க ஹக்கீம்?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.