(Reading time: 15 - 29 minutes)

அமேலியா - 20 - சிவாஜிதாசன்

Ameliya

நீண்ட நேரமாக அமைதியின் பிடியில் அந்த ஜன்னல் ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தான் ஜான். எவ்வளவு நேரம் அப்படியே நின்று கொண்டிருப்பது என்று அவன் சிந்திக்கவில்லை. தூரத்தில் தெரியும் கடலையே பார்த்துக்கொண்டிருந்ததில் ஜானின் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

அவன் வீடு மாறி வந்து அரை நாள் கடந்து விட்டது. கொண்டு வந்த பொருட்களை இன்னும் பிரிக்காமல் சிலையைப் போல் நின்றுகொண்டிருந்தான்.

ஜெஸிகாவிடம் இனி காதலை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது

என முடிவெடுத்து இரண்டு மூன்று நாட்கள் கடந்து விட்டன. அவளை மறக்க எண்ணி மனோதத்துவ நிபுணரை சந்தித்தான் ஜான். அவர் கொடுத்த யோசனையின் பேரிலேயே வீட்டை மாற்றினான்.

கடற்கரையின் ஓரத்தில் அமைதியான இடத்தில் தனிமையான வீடு ஒன்று தனக்கு கிடைக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை. தன் மனதில் உள்ள காயங்களுக்கு அவ்விடம் ஓர் ஆறுதலாக இருக்கும் என எண்ணினான் ஜான்.

தனிமை அவனுக்கு புதிதல்ல. சிறுவயது முதலே தனிமையிலேயே வாழ்ந்து வந்திருக்கிறான் ஜான். வீழ்ந்தாலும்  எழுந்தாலும் அவனைத் தாங்கிப் பிடிக்க ஆள் இல்லை. நண்பர்கள் என சிலர் இருந்தாலும் எத்தனை நாட்கள் அவர்கள் வருவார்கள்.

நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததில் ஜானிற்கு கால்கள் வலித்தன. வீட்டின் விளக்குகளுக்கு உயிரூட்டி இருக்கையில் அமர்ந்து, தான் வாங்கி வந்த புதிய காமெராவை எடுத்துப் பார்த்தான். மனோதத்துவ நிபுணர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது.

"ஜான், இல்லாத ஒரு பொருளைத் தேடி அலைவது போல நீங்க அலைஞ்சிட்டு இருக்கீங்க. ஜெஸிகாவை தொந்தரவு செய்து காதல வரவைக்கணும்னு நினைக்கிறது உங்க மேல வெறுப்பை தான் அதிகரிக்கும். சரி, அதையும் மீறி ஜெஸிகாவோடு உங்களுக்கு திருமணம் நடக்குதுன்னு வச்சிக்கோங்க, அந்த மணவாழ்க்கை மகிழ்ச்சியாதான் போகும்னு உங்களால தீர்க்கமா சொல்ல முடியுமா?"

ஜான் பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தான்.

"உங்களால பதில் சொல்ல முடியாது ஜான். நிச்சயம் அந்த மணவாழ்க்கை விவாகரத்துல தான் முடியம். சந்தோசமே தராத  வாழ்க்கையை எண்ணி நீங்க கவலைப்படுறதுல என்ன அர்த்தமிருக்கு? உங்க காதலை மறந்துட்டு உங்களுக்குனு புதிய பாதையை வகுத்துக்கோங்க. அதுல நிச்சயம் உங்க பழைய காதல் இடம்பெறக்கூடாது"

"அது எப்படி டாக்டர் திடீர்னு எல்லாத்தையும் மறந்திட முடியும்?"

"ஆரம்பத்துல கஷ்டமா தான் இருக்கும். ஆனா நாளடைவில எல்லாம் மாத்திக்க முடியும். உங்களுடைய லட்சியம் என்ன?"

ஜான் சிரித்தான். "அப்படின்னு எதுவும் இல்லை டாக்டர்"

"முதல்ல உங்களுக்குனு ஒரு குறிக்கோளை உருவாக்கிக்கோங்க. அடுத்த அஞ்சு வருஷத்துல நான் இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு நினைச்சு அதை நோக்கி பயணம் போங்க. உங்களுக்குனு ஹாபிஸ் வளத்துக்கோங்க.  உதாரணத்துக்கு, அரிய புகைப்படங்களை சேகரிக்கிறது, போட்டோ எடுக்குறது, பீங்கான் தட்டுக்கள், கோப்புக்கள் செய்யுறது இப்படி பல விஷயம் இருக்கு"

"சரிங்க டாக்டர், நீங்க சொல்லுறது போல முயற்சி பண்ணி பாக்குறேன்"

ஜான் காமெராவையே வெறித்துக்கொண்டிருந்தான். உட்கார்ந்தபடியே வீட்டின் சுவர்களை புகைப்படம் எடுத்தான். 'ம்ம் இதுவும் நல்லா தான் இருக்கு' என தனக்கு தானே கூறிக் கொண்டவன், .தான் கொண்டு வந்த பொருட்களை வீட்டில் அடுக்கி வைக்கத் தொடங்கினான்.

மூன்று மணி நேரமாக வேலை செய்து சோர்வடைந்த ஜான், சிறிது நேரம் இளைப்பாற சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தான். காதல் பாடல்கள் அணிவகுத்தன. ஒவ்வொரு சேனலும் ஏதோ ஒரு வகையில் ஜெஸிகாவை நினைவுபடுத்தின.

'என்னடா தொந்தரவா போச்சே' என சலித்துக்கொண்டவன் மீதமிருக்கும் பொருட்களையும் அடுக்கிவைக்க பெட்டியைத் திறந்தான். ஜெஸிகாவிற்கு பரிசாக கொடுக்க எண்ணி அவன் வாங்கிய பொருட்கள் இருந்தன. படாரென பெட்டியை மூடிய ஜான், "எங்க போனாலும் விடமாட்டா போல இருக்கே" என நொந்துகொண்டான்.

மீண்டும் அவன் நினைவில் ஜெஸிகா வந்தாள். அவளை நினைவில் இருந்து அகற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் ஜானால் முடியவில்லை. அவளை மறக்க வேறு வழியின்றி மது அருந்தினான்.

ணி ஒன்பதைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. நிலா வீட்டுப் பாடத்தை செய்துகொண்டிருந்தாள். காலையில் மருத்துவமனைக்குச் சென்று தன் தந்தையைப் பார்த்துவிட்டு மாலை வேளையில் தான் மேகலா வீடு வந்து சேர்ந்தாள். உடலில் களைப்பு இருந்தாலும் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு சமையல் செய்து கொண்டிருந்தாள்.

அவள் மனம் அமேலியாவையும் வசந்தையும் மாறி மாறி நினைத்துக் கொண்டிருந்தது.

 'இருவருக்குள்ளும் காதல் உணர்வுகள் துளிர் விட்டிருக்குமோ? சே சே அமேலியா வந்து ஒரு வாரம் கூட ஆகலை. அது மட்டும் இல்லாம ஒரு நாள் தான் நான் வீட்டுல இல்லை. அந்த ஒரு நாளுல எப்படி காதல் வர முடியும்'

குக்கரின் விசில் அவள் சிந்தனையைக் கலைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.