(Reading time: 15 - 29 minutes)

மேற்கொண்டு அவள் கற்பனை உலகில் நுழையாமல் சீக்கிரமாகவே சமையலை முடித்து டைனிங் டேபிளில் கொண்டுவந்து வைத்தாள். நிலா மட்டுமே ஹாலில் அமர்ந்திருந்தாள். அமேலியாவைக் காணவில்லை.

"நிலா, அக்கா எங்கே?"

"தெரியலம்மா, இங்க தான் இருந்தாங்க. இப்போ காணும்"

"அமேலியா! அமேலியா" என அழைத்தபடி மேகலா தேடினாள்.

அமேலியாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

நாராயணனின் அறை திறந்திருப்பதைப் பார்த்து அங்கு சென்றாள் மேகலா. அவள் பார்த்த காட்சி, அதிர்ச்சியைக் கொடுத்து ஒரு நிமிடம் இதயமே நின்று விட்டதைப் போல தோன்றியது.

அமேலியா வசந்தின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அமேலியாவிற்கு தெரியாமல் அவள் பின்னால் வந்து நின்ற மேகலாவின் முகத்தில் குழப்பம் படர்ந்தது.

வசந்தின் புகைப்படம் மட்டும் இல்லாமல் மேகலா, நிலாவின் புகைப்படங்களையும் அமேலியா பார்த்துக்கொண்டிருந்தாள். எதற்காக அவள் வெவ்வேறு அறைகளில் இருந்த புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று மேகலாவுக்கு புரியவில்லை.

"அமேலியா"

கனவில் இருந்து விழித்தவள் போல திடுக்கிட்ட அமேலியா மேகலாவை நோக்கினாள். "என்ன பாத்துட்டு இருக்க?" என்று குனிந்து தன் புகைப்படத்தை எடுத்தாள் மேகலா. அப்பொழுது அமேலியா மேகலாவின் கன்னங்களை மெதுவாக வருடிப் பார்த்தாள்.

அமேலியா திடீரென அவ்வாறு நடந்துகொண்ட விதத்திற்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று மேகலாவுக்கு தெரியவில்லை. அமேலியா புன்னகைத்தாள்  அந்த புன்னகையில் இருந்த சிறுபிள்ளைத்தனம் மேகலாவின் இதழிலும் புன்னகையை மலரச் செய்தது.

"வா, சாப்பிடலாம்" என்று அவளை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றாள் மேகலா. அமேலியாவிற்கு இரண்டு சப்பாத்திகளைப் பரிமாறிய மேகலா தானும் அமர்ந்து சாப்பிட்டாள். சாப்பிடும்போது அவள் மனதில் ஒரே கேள்வி மட்டும் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தது.

'எதற்காக அவள் எங்களின் புகைப்படங்களை பார்த்தபடி இருந்தாள்? ஒரு வேளை வசந்தின் புகைப்படத்தை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாளா?'

மேகலாவின் கண்கள் அமேலியாவை நோக்க்கின. குழந்தை போல் உண்டுகொண்டிருந்த அவள் மேல் சந்தேகம் வருவதற்கு பதில் கருணையே வந்தது.

'இவளைப் பார்த்தால் தவறு செய்பவளைப் போல் தெரியவில்லை. புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருப்பதில் என்ன இருக்கிறது?' என தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டாலும் குழப்பத்துடனேயே பரிதவித்தாள் மேகலா.

ரவு நேரங்களில் வசந்த் மருத்துவமனையில் தங்கி தன் தந்தையைக் கவனித்துக்கொண்டிருந்தான். நாராயணனுக்கும் வசந்த்திற்கும் ஏற்கனவே ஒத்துப்போகாததால் அவர்களுக்குள் உரையாடல் பெரிதளவு இல்லை.

மிஞ்சி மிஞ்சி போனால் 'அக்கா எப்போ வருவா? நிலா ஸ்கூலுக்கு ஒழுங்கா போறாளா? நீ சாப்பிட்டியா? புதுசா வந்த பொண்ணை எப்போ வெளிய அனுப்ப போறிங்க? நாம எப்போ வீட்டுக்கு போறோம்? டாக்டர் என்ன சொல்லுறாரு?' இப்படி தான் அவர்களுக்குள் உரையாடல் இருந்தது.

வசந்திற்கு அமேலியாவை நினைக்க நேரமில்லை. சில நாட்களாகவே அவனுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தது. மருத்துவனை விட்டால் வீடு, வீட்டை விட்டால் அலுவலகம், அலுவலகத்தில் கொடுக்கும் வேலை என அவன் சமீப நாட்களாகவே பம்பரம் போல் வேலை செய்துகொண்டிருந்தான். அதையும் மீறி அவனுக்கு நேரமிருந்தால் வீட்டிற்கு சென்று சிறிது ஓய்வெடுப்பான்.

வசந்த் வீட்டிற்கு வந்தாலே அமேலியா  தன் அறையிலேயே இருப்பாள். வெளியே வரவே மாட்டாள். வசந்திற்கு அவள் மேல் எந்த கோபமும் இல்லை. அவள் மேல் திடீரென எதனால் ஈர்ப்பு ஏற்பட்டது? தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டோம்? என்று வசந்த்திற்கும் புரியவில்லை. அமேலியாவின் மேல் இருந்த ஈர்ப்பு தற்போது வசந்த்திடம் வெகுவாக குறைந்திருந்தது.

அன்றும் அலுவல் விஷயமாக ஓவியரை சந்திக்க சென்று கொண்டிருந்தான். என்றும் இல்லாத நாளாக அன்று அவன் ட்ராபிக்கில் நெடு நேரமாக காக்க வேண்டி இருந்தது.

'நான் ஏதாச்சும் முக்கியமான வேலை பாக்க போனா எப்படி தான் கடவுளுக்கு தெரிஞ்சு, இப்படி முட்டுக்கட்டை போடுறாரோ' என சலித்துக்கொண்ட வசந்த்தின் காரில் இளையராஜா பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது

சூரிய வெளிச்சம் மெல்ல குறைந்து இருள் படரும் நேரம் வந்துவிட்டது. கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான் வசந்த். 'ஹாஸ்பிடல் வேற போகணும்' என தனக்குள்ளாகவே கூறிக்கொண்டான் .

சரியாக பதினைந்து நிமிடத்தில் ட்ராபிக் கலைய ஆரம்பித்ததில் நிம்மதி அடைந்த வசந்த், ஒரு மணி நேர பயண முடிவில் ஓவியரின் வீட்டை அடைந்தான்.

மலைப் பிரதேசங்களில் காணப்படும் அழகான இயற்கை காட்சியை தன்னையே மறந்த நிலையில் வரைந்து கொண்டிருந்தார் ஓவியர்.

வசந்த் தான் வந்ததற்கு அடையாளமாக காலிங் பெல்லை ஒலிக்க விட்டது ஓவியருக்கு கோபத்தைத் தந்தது. கதவைத் திறந்தார். வசந்தைக் கண்டதும் போலியான மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.