(Reading time: 15 - 29 minutes)

ஜான் மூன்று நாட்களாக கண்ணில் தென்படவில்லை. அதை எண்ணி அவள் கவலைப்படவில்லை. அவன் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறது என்று ஜெஸிகா மகிழ்ந்தாள்.

குளித்து முடித்துவிட்டு அலுவலகத்துக்கு தயாரானாள். காலை உணவாக முந்தின இரவு செய்த இறைச்சியையே உண்டாள். அந்த உணவு கெட்டுப்போனது போல் தோன்றியதால் முழுவதுமாக உண்ண முடிவில்லை மீதியை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு அலுவலக பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

அவள் கண்கள் ஜான் வீட்டின் கதவையே நோக்கின. சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்து சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்தாள். பிறகு, பக்கத்து வீட்டின் கதவை தட்டினாள்.

"ஹாய் ஆன்ட்டி"

"என்ன வேணும்?"

"நேத்து என்னை பார்க்க யாராச்சும் வந்தார்களா?"

"நான் என்ன உன் வீட்டு வாட்சமனா? என்ன கேக்குற?"

"இல்லை, நேத்து ஒரு முக்கியமான விஐபி வரதா சொன்னாங்க .

 நான் வீடு திரும்ப லேட் ஆயிடுச்சு. அதான் உங்க கிட்ட வந்து விசாரிச்சாங்களானு கேட்டேன்"

"அப்படி யாரும் வரல"

"சரி ஆண்ட்டி, ஜான் என்ன மூணு நாளா ஆளையே காணும்?"

"அவன் வீட்டை காலி பண்ணிட்டான்"

"அப்படியா, ஏன்?"

"அவனை தான் கேக்கணும்" என்று கதவை படாரென ஜெஸிகாவின் முகத்தில் அறைந்தது போல் சாத்தினாள் அந்த பெண்.

தான் வந்த வேலையை முடித்துவிட்ட திருப்தியில்.ஜானிடம் இருந்த விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டே அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு சென்றாள் ஜெஸிகா.

பத்து நிமிட காத்திருப்புக்கு பின் பேருந்து வந்தது. அதில் ஏறினாள். ஜன்னல் ஓரமாக இருக்கையும் கிடைத்து விட்டது. சாலை ஓரத்தை வெறித்தபடியே அவள் தன் கடந்த காலங்களை எண்ணிப் பார்த்தாள்.

அநாதை ஆசிரமத்தில் பல பிள்ளைகளின் மத்தியில் அனாதையாக வாழ்ந்த நாட்களை நினைவுகூர்ந்தாள். பல இரவுகள் தூங்காமல் அழுதிருக்கிறாள்.

தன்னுடைய பெற்றோர்களைப் பற்றி அவளுக்கு சரி வர தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் அவளுக்கு நன்றாக தெரியும்  அவள் அம்மா இறந்த பிறகு யாரும் அவளுக்கு உதவ

முன்வரவில்லை. அவளுடைய தேவைகளை யாரும் பூர்த்தி செய்யவில்லை, அதனால்  தான் அநாதை ஆக்கப்பட்டோம் என்று.

அவளுடைய  அம்மா மனநலம் பாதிக்கப்பட்டு இறந்தவர் என்பதால் ஜெஸிகாவும் பைத்தியம் என மற்ற பிள்ளைகளால் கேலிப்பொருள் ஆக்கப்பட்டாள். அவளது நடவடிக்கைகளும் சில நேரங்களில் அப்படித்தான் இருக்கும். தன்னைக் கேலி செய்பவர்களிடம் கோபமாக கத்துவாள், சண்டை பிடிப்பாள். அவளுக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது என்று பிள்ளைகள் பேசிக்கொண்டனர். தானும் மனநலம் பாதிக்கப்பட்டவளா? என்று பல முறை அவள் தன்னைத் தானே கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

பருவ காலத்தில், பட்டப்படிப்பை முடித்து தனக்கென ஒரு வேலையும் தேடிக்கொண்டு மகிழ்ச்சியோடு சென்றுகொண்டிருந்த அவளுடைய  வாழ்க்கையில் ஒருவன் நுழைந்தான். 

ஆரம்பத்தில் நட்போடு பழகிய அவர்கள் நாளடைவில் தங்களை அறியாமலேயே காதல் வயப்பட்டதை  உணர்ந்தார்கள். அது நாள் வரை தனிமையில் வாழ்ந்து வந்த ஜெஸிகா தனக்கென ஒரு துணை கிடைத்ததும் மகிழ்ச்சி கடலில் தத்தளித்தாள். உலகமே அவளுக்காக உருவாக்கப்பட்டது போல தோன்றியது.

ஒவ்வொரு நாளையும் வித விதமான மகிழ்ச்சியோடு கடந்து சென்றார்கள். ஆனால், காதலனின் பணி காதலுக்கு இடையூறானது.  கப்பலில் நாடு நாடாக சுற்றியவன் ஜெஸிகாவிடம் இருந்து விலக ஆரம்பித்தான்.

காதல் என்ற பெயரில் தான் முட்டாள் ஆக்கப்பட்டிருக்கிறோம், இவ்வுலகில் எல்லோரும் சுயநலவாதிகளே. அவரவர் வேலைகளே அவர்களுக்கு முக்கியம். அன்பு, பாசம், கருணை எல்லாம்  வெறும் வார்த்தைகளுடனே நின்றுவிட்டன என்பது ஜெஸிகாவிற்கு புரிந்தது.

அவள் தனிமையில் வாழ்ந்திருந்தாலும் காதலனைப் பிரிந்த தனிமை அவளை மிகவும் வேதனைப்படுத்தியது. இது போன்று வேதனை தரும் சொந்தங்கள் தன் வாழ்க்கையில் இனி இருக்கவே கூடாது, எந்தத் துணையும் தனக்கு தேவையில்லை, நான் தனியாகவே வாழ்கிறேன், என் வாழ்க்கைக்கு நானே எஜமானி என அவள் உறுதியோடு வாழ்ந்து வந்தாள். 

ஆனால், மீண்டும் ஜானின் வடிவில் விதி அவள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது. முதல் காதலின் ரணமே இன்னும் ஆறாத நிலையில், மீண்டும் வேறொரு வடிவில் விதி தன்னை ஏமாற்ற வந்திருப்பதை எண்ணி வெறுப்படைந்தாள்.

ஜானும் கப்பலில் பணிபுரிபவன் என்பதால் ஜெஸிகாவை மேலும் அவனை வெறுக்க வைத்தது. அதனால் தான் ஜானால் ஜெஸிகாவின் மனதில் இடம் பெறவே முடியவில்லை.

ஜானை வெறுத்தாலும் அவன் மேல் இனம் புரியா ஏதோ ஓர் அன்பு ஜெஸிகாவிற்கு இருந்தது. ஆனால், நிச்சயம் அது காதல் இல்லை. 'ஜானிற்கு நல்ல பெண் மனைவியாக அமைந்து அவன் வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும்' என்று மட்டுமே அந்த அன்பு விரும்பியது.

தொடரும்...

Episode # 19

Episode # 21

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.