(Reading time: 15 - 29 minutes)

"வாங்க வசந்த். சீக்கிரமாவே வருவீங்கன்னு நினச்சேன்"

"டிராபிக்ல மாட்டிகிட்டேன் சார். ஓவியத்தை வரஞ்சிட்டீங்களா?"

"ஓ எஸ் வாங்க" என்று ஓர் அறைக்குள் அழைத்து சென்றார் ஓவியர்.

"இந்த ஓவியத்தால என்னுடைய கனவே சிதைஞ்சி போயிருக்கும் சார்"

"ஏன் அப்படி சொல்லுறீங்க?"

"அது ஒரு பெரிய கதை சார். முதல்ல ஓவியத்தை காட்டுங்க. அதை பார்த்தா தான் எனக்கு நிம்மதி"

மாடியில் இருக்கும் ஓர் அறைக்கு வசந்தை அழைத்து சென்றார் ஓவியர். அந்த அறையே ஓவியங்களால் நிரம்பி இருந்தது. எண்ணற்ற ஓவியங்கள்! எதை ரசிப்பது எதை விடுவது என்று வசந்த்திற்கே குழப்பம் வந்துவிட்டது. அழகு; வறுமை, ஆணவம், தாய்மை, பாசம் என ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு கதையைக் கூறியது.

"உங்க ஓவியங்கள் ரொம்பவே அழகா இருக்கு சார்"

"நன்றி வசந்த். இந்தாங்க நீங்க கேட்ட ஓவியம்" என சுருட்டி வைத்திருந்த காகிதத்தைப் பிரித்து வசந்த்திடம் கொடுத்தார் ஓவியர்.

அந்த ஓவியத்தை வசந்த் உற்றுப் பார்த்தான்.

ராணி ஒருத்தி இரவு நேரத்தில் சோலைகளின் நடுவே வெள்ளை

 நிற ஆடையில் திமிரோடும் அலட்சியத்தோடும் நிலவினை நோக்குவது போலிருந்தது ஓவியம்.

ஓவியம் தத்ரூபமாக இருந்தது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், வசந்த்திற்கு ஏனோ உறுத்தலாகவே இருந்தது. அதை ஓவியரும் கண்டு கொண்டார்.

"நீங்க எதிர்பார்த்தது போல ஓவியம் இருக்கா?"

வசந்த் ஓவியரை நோக்கி பின்பு மீண்டும் ஓவியத்தை நோக்கினான். "சொல்ல தெரியல சார். ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுறது போல தோணுது"

"எதை மிஸ் பண்ணுறீங்க?"

"அதை சொல்ல தெரியல சார். நிலவை விட தான் அழகா இருக்கிறதா அந்த பொண்ணு நினைக்கிறா. ஆனா இந்த ஓவியத்துல அந்த பெண் அவ்வளவு அழகா தெரியலையே"

ஓவியருக்கு கோபம் வந்தது. இதுவரை அவர் வரைந்த ஓவியத்தை யாரும் குற்றம் சொன்னதில்லை. முதன் முதலில் வசந்த் அவ்வாறு சொன்னது அவரின் திறமைக்கு இழுக்கு என்று எண்ணினார்.

"நீங்க நினைக்கிறது தவறு வசந்த். அந்த பெண் நிலாவை விட அழகா தான் இருக்கா. இதுக்கு மேல இந்த ஓவியத்தை வரையவே முடியாது. உண்மைய சொல்லப்போனா இது வரை நான் வரைஞ்ச ஓவியத்திலயே இது தான் உச்சம்னு சொல்லலாம்"

மேற்கொண்டு அவரிடம் வாக்குவாதம் செய்ய விருப்பமில்லாமல் அரைமனதோடு அங்கிருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் வசந்த்.

நாராயணனை கவனித்துக்கொள்ளும் நர்ஸ் அங்கு வந்தாள். ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்த வசந்த் ஓவியத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து நின்றான்.

"அப்பாவை என்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க சிஸ்டர்?"

"பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சிட்டு நாளைக்கு ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம் சார்"

"தேங் யு சிஸ்டர்"

"மிஸ்டர் நாராயணன் உங்க மேல கோவமா இருக்காரு"

"எதுக்கு?"

"நீங்க வர தாமதம் ஆனதால இருக்கலாம். நீங்க வந்தா அவரை வந்து பாக்க சொன்னாரு" 

நாராயணன் இருக்கும் அறைக்கு சென்றான் வசந்த். நாராயணன் படுத்திருந்தார். 

"கூப்பிட்டீங்களாமே"

நாராயணன் கண் விழித்து வசந்த்தை நோக்கினார்.

"இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த?"

"ஒரு வேலை இருந்துச்சி"

"ஆங்கிலம் தெரியாம இங்க நான் படுற கஷ்டம் உனக்கு தெரியுமா? சாயந்திரத்தில இருந்து நெஞ்சு லேசா வலிச்சிட்டு இருக்கு. வேதனையா இருக்கு. என்னுடைய வேதனையை யார் கிட்டயும் சொல்ல முடியல"

வசந்த் அமைதியாக நின்றான்.

"வேண்டாவெறுப்பா ஹாஸ்ப்பிட்டல் வர. இல்லனா வர கூட மாட்ட. இதெல்லாம் நான் என்னைக்கு செஞ்ச பாவமோ" என நெஞ்சை தேய்த்தபடி வேதனையோடு முனங்கினார் நாராயணன்.

அங்கிருந்த டாக்டரிடம் தன் தந்தைக்கு ஏற்பட்ட வலியை  கூறிய வசந்த் சோகமான முகத்தோடு வெளியே வந்து அமர்ந்தான். அவன் கண்கள் லேசாக கலங்கி இருந்தன. 

காலையில் ஜாகிங்கை முடித்துவிட்டு தனது அபார்ட்மெண்டிற்கு வந்து சேர்ந்தாள் ஜெஸிகா. அதிகமாக மூச்சு வாங்கியதால் அவள் நெஞ்சம் விம்மி விம்மி எழுந்தது. தனது வீட்டிற்கு செல்லும் பொழுது பூட்டி இருந்த ஜானின் வீட்டைக் கவனிக்க அவள் தவறவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.