(Reading time: 13 - 26 minutes)

மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு முன்பு, அந்த வார விடுமுறையை எந்த கடையின் லாபமாக மாற்றலாம் என தீவிரமாக யோசித்து, அனைத்திற்கும் முடிந்த அளவு சொத்தை எழுதி வைத்துவிட்டதால், இந்த வாரம் தீம்பார்க் செல்லலாம் என முடிவெடுத்தனர்.  அதன் படி, எம்.ஜி.எம்மை தேர்ந்தெடுத்து சென்றனர்.

ஆரம்பத்தில் நால்வரும் ஒன்றாகவே இருந்தனர்.  ஒரு கட்டத்தில் வர்ஷினி ஒரு ரைட் செல்ல வேண்டும் என அடம்பிடிக்க, அவள் தொல்லை தாங்காமல் யாதவ் அழைத்துச் சென்றுவிட்டான்.  ப்ரியா நீச்சல் குளத்தை விட்டு நகரவே மாட்டேன் என்றிருக்க, அவள் வரும் வரை ப்ரனிஷ் அவளுக்குத் துணையாக அமர்ந்திருந்தான்.

பசி என்னும் ஒன்று வந்து தனக்கு உணவு வேண்டும் என்று அவள் வயிறு கூப்பாடு போடும்வரை ப்ரியா நகரவே இல்லை.  வேண்டா வெறுப்பாக கரை ஏறியவள், அப்போதுதான் வர்ஷினியும் யாதவும் மிஸ்ஸிங் எனக் கண்டு ப்ரனிஷிடம் கேட்டாள்.  அவன், இருவரும் தனியே சென்றுள்ளதாகக் கூற, இருவரும் உணவருந்திவிட்டு ட்ரை கேம்ஸ் பக்கம் பார்வையை செலுத்தினர்.

எதை விளையாடலாம் என அங்கிருந்த மேப்பில் பார்த்துக்கொண்டிருக்க, அப்போது ப்ரனிஷின் கண்ணில் பட்டது அந்த ரோலிங் தண்டர்.  சட்டென ஒரு யோசனை வந்தது ப்ரனிஷுக்கு.

“ப்ரியா… நீ இங்கேயே இரு… நான் ஹாஃப் அன் ஹவர்ல வரேன்” என ப்ரனிஷ் எங்கோ செல்ல ஆயத்தமாக, ஏற்கனவே யாதவும் வர்ஷினியும் அருகில் இல்லை.  இதில் இவன் வேறு எங்கேனும் சென்றால், நான் மட்டும் தனியேவா? என நினைத்த ப்ரியா, “நானும் வருவேன்” என உடன் நின்றாள்.  அவளின் பயந்து போன முகத்தைப் பார்த்த ப்ரனிஷ், சிரிப்பை அடக்கிக்கொண்டே, “நான் ஒரு விளையாட்டு விளையாடப் போகிறேன்… அது உன்னைப் போல சின்னப் பெண்களுக்கு இல்லை” என வெறுப்பேற்றினான்.

“நான் ஒன்னும் சின்னப் பெண் இல்லை.  நீயே விளையாடும்போது நானும் விளையாடுவேன்” என்று தானே மாட்டினாள் ப்ரியா.  உடனே ப்ரியாவைக் கூப்பிட்டுக் கொண்டு சென்றால் ப்ரனிஷின் குட்டு வெளிப்பட்டு விடுமல்லவா?  எனவே அவனும் சிறிது நேரம் “வேண்டாம்” புராணம் பாடிவிட்டு, அவளைத் தன்னுடன் வேறு வழி இல்லாதது போல் அழைத்துச் சென்றான்.

ப்ரனிஷோடு கர்வமோடு சென்றவள் “அம்மாடியோவ்…” என பயந்துவிட்டாள் அதனைப் பார்த்து.  அடிவயிற்றில் பயப் பந்து ஒன்று அப்போதே ஓடியது ப்ரியாவிற்கு.  இருந்தும் ப்ரனிஷின் கேலியை சந்திப்பதற்கு இது மேல் என்று நினைத்து, அவனோடு அமைதியாக சென்றாள்.  அவள் மனம் மட்டும், “நான் சின்னதா இருக்குற நாலு பெட்டி ஆடினப்பவே ஊரைக் கூட்டுனவடா… இப்போ என்னென்ன பண்ணப்போறேனோ??” என ஊமையாய் அழுதது.

அவர்கள் அமர்ந்த பெட்டி நகர ஆரம்பித்தது மட்டுமே அவளுக்குத் தெரியும்.  அடுத்த ஐந்தாவது செக்கண்டில் பயத்தில் ப்ரனிஷின் கையைப் பற்றித் தோள் சாய்ந்து அவனை விட்டால் பறந்து போய் வங்காள விரிகுடாவில் விழுந்து விடுவோம் என்னும் அளவுக்கு அமர்ந்து கண்களை இறுக்க மூடிக்கொண்டிருந்தாள்.  முடியவே முடியாதா என அவள் பயந்த ஆட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வர, அது தெரிந்தாலும், அவனை விட மனமில்லாமல் பயத்தோடு அவனையே பற்றியபடி இருந்தாள்.  ஆனால், அவள் காதில் கேட்ட அந்த சிரிப்பு சத்தம் அவளைக் கண்களைத் திறக்க வைத்தது.

கண்கள் இரண்டும் சிரிக்க, இதழ்கள் அவற்றோடு இணையாக விரிய, வெகு அருகில் அவன் முகம். மெய்மறந்து பார்த்திருந்தாள் ப்ரியா.  அந்த நொடி, சரியாக அந்த நொடி, ப்ரியாவின் மனதை ஒரே அடியில் எட்டி, சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டான் ப்ரனிஷ்.  தன்னைக் கவர்ந்த அந்த கள்வனையே விழியகலாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரியா.

அவள் பார்வையை கவனித்தானோ என்னவோ… ப்ரியாவின் அருகே மெதுவாக குனிந்தான் அவன்.

ப்ரனிஷ் ப்ரியாவின் காதோரம் தன் இதழ்கள் உரச குனிய, அவளுக்கு ஒரு நிமிடம் மூச்சு நின்றுதான் போனது.  ஆனால், அடுத்த நிமிடமே அவளுக்கு எல்லையில்லா ஆத்திரம் பொங்கியது ப்ரனிஷின் “இன்னொரு ரவுண்ட் போலாமா?” என்ற கேள்வியில்.  அவனைத் தாறுமாறாக அடித்தவாறே அங்கிருந்து வந்தவள், அத்தனை அடியையும் வாங்கியும் புன்னகை மாறாமல் நின்ற தன் கண்ணனைக் கண்டவள் மனம் மீண்டும் கொள்ளை போனது.

அந்த தினத்திற்குப் பின், ப்ரியா தன் காதலை வெளிப்படுத்த நினைத்து தோல்வியே கண்டாள்.  அவனிடம் பேசுவதற்காகவே உப்பு சப்பில்லாத காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்தது அவள் நெஞ்சம்.  தனக்குத் தெரிந்த டெக்னிக்கையெல்லாம் உபயோகப்படுத்தி ஒன்றை மட்டும் கண்டுபிடித்தாள்.  அவனுக்குத் தன்மேல் நட்பைத் தவிற வேறு எந்த உணர்வும் இல்லை என்பதே அது.

எப்படியேனும் அவனிடம் தன் காதலை உரைத்திடவேண்டும் என அவள் எண்ண, அதற்கு சிக்கல் அவள் வீட்டில் இருந்து வந்தது.  இதையே ஓர் வாய்ப்பாக எண்ணி, ப்ரனிஷிடம் பேசிப் பார்த்தபோது, அவனுக்குத் தன்மீது சிறிதும் விருப்பம் இல்லை எனக் கண்டவள் சோர்ந்துதான் போனாள்.  எங்கே அவனிடம் கெஞ்சி விடுவோமோ என்ற பயத்திலும், இவனை விட வீட்டில் உள்ளவர்களை சமாளிப்பது அவசியம் என்றுணர்ந்து அங்கே சென்றாள் ப்ரியா.  அதற்காக, அவள் ப்ரனிஷிடம் கூறிய காரணத்தையே இங்கும் கூறிக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.