(Reading time: 10 - 19 minutes)

06. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

ந்தா தன் சொந்த ஊருக்கு கிளம்பி வந்து சேர, அவளைப் பார்த்த மாத்திரத்தில் ஓடி வந்தார் அவளின் அன்னை..

“ரேணு… பாரு யார் வந்திருக்கான்னு…”

அவர் திரும்பி உள்ளே குரல் கொடுக்க, “என்ன பாட்டி…..” என்ற கூக்குரலோடு வந்த ரேணு, சந்தாவினைக் கண்டதும், ஓடிச்சென்று அவளின் காலினைக் கட்டிக்கொண்டாள்…

“சித்தி…. நீ ஏன் இவ்வளவு நாள் வரலை?....” என ஏக்கத்துடன் கேட்டவளை தூக்கி முத்தமிட அவள் விழைய, அதற்குள் ரேணு முத்தமிட்டாள் சந்தாவினை….

“ஏன்ம்மா வர்றதா ஒரு போன் பண்ணி முன்னாடியெ சொல்லியிருக்கலாம்ல...."

சந்தாவின் அன்னை அன்புக்கரசி அவளிடம் கேட்க, அவளோ சிறு புன்னகையுடன் உள்ளே சென்றாள் அமைதியாக...

சற்று நேரத்தில் அவளின் சிறிய தம்பி வந்தான்...

"எப்படிடா இருக்குற?..."

"இதுவரை நல்லாதான் இருந்தேன்... அதான் இப்ப நீ வந்துட்டல்ல..."

அவன் முகத்தை திருப்பிக்கொண்டு கூறியதும், மனமோ படாதபாடு பட்டது... அடுத்து அவன் பேசுவதற்குள் அவர்களின் அன்னை வந்துவிட, சட்டென உள்ளே சென்றான் அவன்...

அவன் செல்லும் திசையினையப் பார்த்துக்கொண்டிருந்த சந்தாவிடத்தில்

"வா அக்கா.. சாப்பிட்டியா?... வர்றதா சொல்லியிருந்தா நான் பஸ்ஸ்டாண்ட் வந்துருப்பேன்ல..."

முகம் எங்கும் மலர்ச்சியுடன் அவளிடம் நலம் விசாரித்தான் சந்தாவின் முதல் தம்பி...

ந்தா சாதாரண நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவள்... அவளுடன் அம்மா, அப்பா, அக்கா, இரண்டு தம்பிகள், என சொந்தங்கள் இருந்த போதிலும் அவள் பெரும்பாலும் தனிமையைத்தான் நாடினாள்...

பல மாதங்கள் கழித்து சொந்த வீட்டிற்கு வந்தபோதும், அவளை வா என அழைக்கவில்லை அவளின் தம்பி...

பெரியவன் ஆனந்தனோ அதிகம் வாய் பேசாத அப்பிராணி... சந்தாவின் மேல் அக்கறை அதிகம்... சின்னவன் வெற்றி அதற்கும் மேல்... சந்தாவின் மீது அதீத பிரியம் வைத்திருந்தான்... ஆனால் இப்பொழுது அதெல்லாம் இருந்த தடம் தெரியவில்லை...

அவனுக்கு இருக்கும் முதல் எதிரியே அவள்தான் என்பது போல் வார்த்தைகளால் அவளை சாகடித்தான்… இதனாலேயே அவள் இங்கே அதிகம் வர விரும்பமாட்டாள்…

பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும் பார்க்க நினைக்கும் மனம், வீட்டிற்கு வந்ததும் வெந்து சாவதை எண்ணியே, அவள் தன் வீட்டிற்கு வருவதனையே தவிர்த்தாள்…

இது அனைத்திலும் அவளுக்கு ஆறுதல் அவளின் அக்கா பிள்ளைகள் ரேணு மற்றும் ஜெகன் தான்…

னதறையில் வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவளின் முன் வந்து நின்றாள் அவளது அக்கா இளவரசி…

“வா… சந்தா… எப்படி இருக்குற?... ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல… மாமாவை அங்க வர சொல்லியிருப்பேன்ல…”

“பரவாயில்லைக்கா… மாமாக்கு எதுக்கு கஷ்டம்?...”

“நீ இப்படி சொல்லுறது தான் கஷ்டம்…”

குரல் கேட்டு திரும்பி பார்க்க அங்கே நின்றான் அவளது அக்கா இளவரசியின் கணவன் சுதாகர்…

“எப்படி இருக்குறீங்க மாமா… நல்லா இருக்குறீங்களா?...”

“ஹ்ம்ம்… நினைவெல்லாம் இருக்கா?... பரவாயில்லை அப்போ….”

“என்ன மாமா?,,,”

“பின்ன என்ன?... ஒரு போன் பண்ணா கூட எடுக்க மாட்டிக்குற… என் பிள்ளைங்க கிட்ட மட்டும் பேசுற…”

“அப்படி எல்லாம் எதுவும் இல்ல மாமா…”

அவள் சமாளித்துக்கொண்டிருக்கையிலே, “சரி சரி… உங்க விசாரணையை அப்புறம் வைச்சிக்கலாம்… இப்ப அவ ரெஸ்ட் எடுக்கட்டும்… நீங்க வாங்க…” என கணவனை இழுத்துச் சென்றாள் இளவரசி…

அவளது அறைக்கு வெளியே, “ஏங்க அவளே இப்போதான் வீட்டுக்கு வந்திருக்கா… இதுல நீங்க வேற ஏங்க… இப்படி பேசுறீங்க?... அவ மனசு கஷ்டப்படாதா?...” இளவரசி தன் கணவனிடம் கேட்க,

“பின்ன என்ன இளவரசி, இங்க நாம எல்லாரும் இருந்தும் அவ யாரோ போல வந்துட்டு போறா வீட்டுக்கு அதுவும் ஆறுமாசத்துக்கு ஒருதடவை….”

“உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமேங்க… தெரிஞ்சே இப்படி பேசினா எப்படிங்க…”

“பழசையே நினைச்சு கஷ்டப்படுறது தான் சரின்னு சொல்லுறீயா நீ?...”

“அவ அதை மறக்க மாட்டிக்குறா... அது போதாதுன்னு வாழவும் மாட்டிக்குறா… பின்ன என்ன தாங்க செய்ய?....”

“இப்படியே விட்டா, அவ இதே போல தான் பண்ணிட்டிருப்பா… அதனால இந்த தடவை ஒரு முடிவை எடுக்குறது தான் நல்லது…” என்றவன், தன் மாமனார் வேலுச்சாமி எப்போது வருவார் என்று கேட்டான்…

“அப்பா இன்னைக்கு நைட் வந்தாலும் வருவாருங்க… அப்பவே கிளம்பிட்டேன்னு சொன்னாரு…”

“அப்போ சரி…” என்றவன் அதற்கு மேலும் அங்கே நின்று மனைவியோடு வாதம் புரியவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.