"கண்ணைத் திற!"-மூடியிருந்த விழிகளை திறந்தவள்,இறைவனின் அற்புத கலையினை கண்டு ஸ்தம்பித்து நின்றாள்.
அவளது விழிகள்அந்த நீர்வீழ்ச்சியை அகல மறுத்தது.
ஜோசப் பின்னாலிருந்தப்படி மென்மையாக அவளை அணைத்துக் கொண்டான்.
அவளது கவனம் முழுதும் அவனிடம் செல்லவில்லை.
"ஏ...ஹேப்பி பர்த்டே பேபி!"-அவளது செவிகளில் மிக மென்மையாக கிசுகிசுத்தான்.ஏதோ நினைவு வந்தவளாய்,அதிர்ச்சியோடு அவனை திரும்பி பார்த்தாள் அவள்.
"அதனால தான் லேட் நைட் உன்னை இங்கே அவசரமா கூட்டிட்டு வந்தேன்!மற்றப்படி,உன் தூக்கத்தை கெடுக்க நினைக்கலை!"-அவளது முகத்தில் காதல் பெருக்கெடுத்தது.
அவன் ஒரு அழகிய பென்டன்டை அவளது கழுத்தில் சூட்டினான்.
"இப்போ தான் இது அழகா இருக்கு!இது எப்போதும் கழற்றாதே!"-அவளுக்கு என்ன பதிலுரைப்பது என்றே புரியவில்லை.
நிலை தடுமாறி நின்றாள்.
"என்னடி அப்படி பார்க்கிற?"-என்றவனின் வினாவிற்கு விடையளிக்காமல் அவளை இறுக அணைத்துக் கொண்டாள் நிர்பயா.சில நொடிகள் அவனிடமிருந்து பேச்சில்லை!மென்மையாக அவளை தழுவிக் கொண்டான் அவன்.
"என்னடி நான் உனக்கு சர்ப்ரைஸ் தர நினைத்தால்,நீ எனக்கு சர்ப்ரைஸ் தர?"-அவளிடமிருந்து விசும்பல் சப்தம் கேட்டது.
"ஏ..என்னாச்சு?"
"ம்ஹூம்..!"
"பர்த்டே அதுவுமா அழுற?இன்னிக்கு முழுக்க உன்னை திட்டக்கூடாதுன்னு ஆசைப்படுறேன்.திட்டு வாங்கிக்காதே!" -அவள் இமைக்காமல் அவனது முகத்தையே பார்த்தாள்.
"ஏ...என்ன லூசு?"
"சீக்கிரமா என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க!"-அவனிடம் பெரும் அதிர்ச்சி!!
"வா!பண்ணிக்கலாம்!"
"இந்த நடு ராத்திரியிலா?"
"நீ தானே கல்யாணம் பண்ணிக்க சொன்ன?"
"அதுக்கு??ரொம்ப ஆசை தான் உங்களுக்கு!"
"எனக்கா?உனக்கா?"-அவளது முகத்தில் அவ்வளவு நாணம்!!
ஜோசப் அவளது நெற்றியில் இதமாக முத்தமிட்டான்.
கடந்த கால நினைவுகள் அவளது முகத்தை மலர வைத்தன.புன்னகையோடு தன் சங்கு கழுத்தை உரசிக் கொண்டிருக்கும் சங்கலியை தொட்டு பார்த்தாள் நிர்பயா.
சில நொடிகள் கடந்திருக்கலாம்...
"வேணும்னா உன் கூட இருந்த சில நிமிடங்களோட பெனால்டியை நான் தந்துடுறேன்!"-மறு நிமிடமே அவன் கூறியது நினைவு வந்தது.சட்டென அந்தச் சங்கிலியில் இருந்து தன் கரத்தை எடுத்துக் கொண்டாள்.
முகம் இறுகிப்போனது!!
இன்னும் எவ்வளவு துன்பங்கள் சந்தித்தும்,ஆறுதலுக்காக ஏங்கும் மனதின் சூத்திரம் விளங்கவில்லை அவளுக்கு!!
"எவ்வளவு கேவலமாக நினைத்தான் என்னை?அதற்காக நிச்சயம் அனுபவிப்பான்!ச்சே..!"-தன்னை தானே நொந்து அங்கிருந்து திரும்பியவளின் எதிரே நின்றான் ஜோசப்!!
சட்டென கிட்டிய தரிசனம் அவள் மனதை திடுக்கிட வைத்தது.
சில மௌனங்கள் மௌனமாய் சம்பாஷணை நிகழ்த்த தொடங்கின.அவனது நேத்திரங்களில் அவ்வளவு ஏக்கம்!!!
அவன் ஏதோ பேச வாயெடுக்க நினைக்க,அதற்கு சந்தர்ப்பம் கொடுக்க விரும்பாதவள்,அவனை கடந்து நகர எத்தானித்தாள்.ஆனால்,அதற்கு வாய்ப்பளிக்காமல் அவளது கரத்தைப் பற்றி தடுத்தது ஜோசப்.பல நாட்களுக்கு பின் கிட்டிய ஸ்பரிசம்!அவனது கரங்களை உதறும் துணிவு அவளுக்குள் எழவில்லை!!
"அம்மூ!"
"என் கையை விடுங்க!"
".............."-நிலையை விளக்கும் வாய்ப்புக் கிட்டியதாய் எண்ணியவன்,அவளது வார்த்தைகளால் ஏமாற்றமடைந்தான்.
"நான் சொல்றதைக் கேளும்மா!"
"என் கையை விடுங்கன்னு சொன்னேன்!"
"ப்ளீஸ்..!நா.."
"என் கையை விடுங்க!எனக்கு அருவருப்பா இருக்கு!"-அவளது வார்த்தைகளில் பெரும் வலி அவனை ஆட்கொண்டது.
சட்டென அவளது கரத்தினை தியாகித்தான்.
"பேசுறது எல்லாத்தையும் பேசிட்டிங்க!இனி எதையும் கேட்க நான் தயாரா இல்லை!எப்படி என் வாழ்க்கையில வந்தீங்களோ,அப்படியே திரும்பி போயிடுங்க!என்னால நீங்க இல்லாமலும் வாழ முடியும்.ரொம்ப சந்தோஷமா இருக்கு!இத்தனை வருஷமா,ஒருத்தனோட மனசை அவன் காதலை மறுத்து காயப்படுத்திட்டோமோன்னு துடிச்சிட்டு இருந்தேன்.உங்களால அதுக்கு ஒரு விடை கிடைத்தது!"