10. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி
இரு தினங்களாய் யாரிடமும் உரையாடவுமில்லை!சீராக உண்ணவுமில்லை!தனிமையை நாடி கொண்டிருந்தார் காயத்ரி.
"ஏ..காயு!சொன்னாக் கேளுடி!எதாவது சாப்பிடு!"
"எனக்கு பசிக்கலை!என்னைக் கொஞ்சம் தனியா விடு!"
-பற்றிய தோழியின் கரத்தினை தட்டிவிட்டார் காயத்ரி.
"காயத்ரி!உனக்கு போன் வந்திருக்கு பார்!"-விடுதி பாதுகாவலாளரின் குரல் செவிகளில் ஒலித்தது.
"அப்பாவா இருக்கப் போகுது!போய் பாரு!"-தோழியின் பரிந்துரையை ஏற்றவர்,கண்களை துடைத்துக் கொண்டு கீழே சென்றார்.
"போன் வந்திருக்கு பாரும்மா!"-தொலைப்பேசியை அவர் பக்கமாய் தள்ளினார் ஒரு பெண்மணி.
"சொல்லுங்கப்பா!"
"............."
"ஹலோ!கேட்குதாப்பா?"
"ஏன்?உனக்கு அப்பா மட்டும் தான் போன் பண்ணுவாரா?"-பேசிய தோரணையில் இருந்தே மறைந்திருந்த குரலின் திரை விலகியது.
"நீங்களா?"
"பரவாயில்லை..அடையாளம் தெரியுதே!"
"என்ன விஷயம்?"
"உன்கிட்ட பேசணும்!கோவிலுக்கு வர முடியுமா?"
"என்ன விஷயமா பேசணும்?"
"ம்...பேசணும்னு சொன்னா புரிந்துக்கணும்!அதுதான் புத்திசாலிப் பொண்ணுக்கு அழகு!!"
"வரேன்!"-இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
அழைத்தக் காரணம் யாதாக இருக்கும் என்பதிலே அவர் எண்ணம் குடிக் கொண்டிருந்தது.
உடனடியாக கிளம்பி இறைவனின் ஆலயத்திற்கு சென்றார் அவர்.
விழிகள் தன்னை மறந்து அங்கு குறித்த ஒருவரையே தேடிக் கொண்டிருந்தன.
"ம்கூம்!"-பின்னால் இருந்து குரல் வர,திடுக்கிட்டு திரும்பினார் காயத்ரி.
"யாரையோ தேடுறீங்க போலிருக்கு?"-விழிகளில் குறும்பு மின்ன வினவினார் மகேந்திரன்.
"எதுக்காக வர சொன்னீங்க?"
"அப்படி வாங்க பேசலாம்!"-தனது இடக்கரத்தை குளக்கரை நோக்கி நீட்டினார் அவர்.காயத்ரியின் மனம் சிறிதும் தயக்கம் கொள்ளாமல் நடந்தது.
"சொல்லுங்க!"
"ம்கூம்!என் பெயர் மகேந்திர குமார்!இந்த சென்னையில தான் மூணு வருடமா கமிஷ்னரா இருக்கேன்!சொந்த ஊர் மகேந்திரகிரி!அம்மா நான் பிறந்த உடனே இறந்துட்டாங்க!அப்பாவும் இரண்டு வருடத்திற்கு முன்னாடி போயிட்டார்!அக்கா,அண்ணான்னு யாரும் கிடையாது!எனக்கு உறவுன்னு சொல்லிக்க ஒருத்தரும் இல்லை.எனக்கு இருக்கிற துணை எல்லாம் அதோ அந்த சிவன் மட்டும் தான்!நிறைய கோபப்படுவேன்!உங்களை மாதிரி சுத்த சைவம் எல்லாம் கிடையாது!எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை.வொர்க் அதிகமா இருந்தா வீட்டுக்கு கொஞ்சம் லேட்டா கூட வருவேன்!ராத்திரி நேரத்துல கூட கிளம்பி போவேன்!இதை எல்லாம் கேட்ட அப்பறம் மனசுல உருவான காதல் உங்களுக்கு அப்படியே இருந்தா,கல்யாணம் பண்ணிக்கலாம்!"-மிக நிதானமாய் பேசியவரை விழிகள் அசையாமல் பார்த்தார் காயத்ரி.
"அப்படின்னா கல்யாணத்துக்கு அப்பறம் உங்களுக்காக அசைவம் சமைக்க கற்றுக்கொள்ளணுமா?"-அப்பாவியாய் வினவிய காயத்ரியை பார்த்து முகம் மலர்ந்தார் மகேந்திரன்.
"ம்..நாட் நெசசரி!எனக்கு சமைக்க தெரியும்!எந்த விதத்திலும் உங்களை நான் கட்டாயப்படுத்த மாட்டேன்!என் கூட என்னோட கையை பிடித்துட்டு வர சம்மதமா?"-காயத்ரியின் முகம் சிவந்துப்போய்,நிலம் நோக்கியது.மகேந்திரன் அந்த ஆதவனை சாட்சியாக்கி,காயத்ரியை நோக்கி தனது கரத்தினை காண்பித்தார்.பெண்மைக்கு மட்டும் உரிதான குணங்களில் ஏதோ ஒன்று அவரை முழுதுமாக ஆட்கொள்ள,பெரும் பயிர்ப்போடு துணை வரப்போகும் கரத்தினை பற்றினார் காயத்ரி.
காலம் கடந்தவண்ணம் அந்த இளங்காதலை அழகாய் கனிய வைத்திருந்திருந்தது.ஊடல் என்ற பேச்சிற்கு இருவரும் துளியும் இடம் அளிக்கவில்லை.அது எட்டிப் பார்த்தாலும்,அவர்களின் உயர்ந்த அன்பு அவர்களின் ஊடலை சுக்கலாய் உடைத்துப்போகும்!!
அன்றொரு நாள்...
தனது இல்லத்தின் அழைப்புமணி ஒலிக்கும் சப்தம் செவியை அடைந்ததால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவர் உறக்கம் கலைந்து எழுந்து வந்தார்.விழிகள் நெருப்பாய் தகித்தன.
"ஹச்!"என்ற தும்பலை போட்டப்படி கதவை திறந்தார் மகேந்திரன்.
"ஏ..காயு!நீ என்னம்மா இங்கே?"
"தள்ளுங்க!"-அவரை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தார் காயத்ரி.
"இரண்டு நாளா உடம்பு சரியில்லை!ஒரு போன் பண்ணி சொல்லணும்னு கூட தோணலையா உங்களுக்கு?"