(Reading time: 6 - 12 minutes)

01. எனக்குள்ளே நான்..!! - ப்ரியா

enakkul naan 

ண்ணீர்..!!

தண்ணீர் சத்தம்.. சலசலவென கேட்டுக் கொண்டிருந்தது.. குளியலறையின் பைப் திறந்து விடப்பட்டிருந்தது.. அதன் கீழே இருந்த அடர்நீல பிளாஸ்டிக் வாளி நிறைந்து அதிலிருந்து தண்ணீர் வெளிர்மஞ்சள் டைல்ஸ் மீது கொட்டி வழிந்தோடி சல்லடை வழியாய் போய்க்கொண்டிருந்தது.

திறந்திருந்த ஷவரிலிருந்து தண்ணீர் அவள் மீது விழுந்துகொண்டிருந்தது. அவள் உடைகளுக்குள்ளும் வெளியேயும் தண்ணீர் நுழைந்து சென்று கீழே விழுந்தது..

முழுக்கை வைத்த இரவு உடையில் ஷவரின் அடியில் நின்றிருந்தாள் அவள்.

குனிந்து வாளியிலிருந்து வெளி வரும் நீரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த  கண்ணாடி வழியாக மங்கலாக தெரிந்தது அனைத்தும்.. பாதி முடி கொண்டையிட்டும் மீதி முடிக்கற்றைகள் முகத்தில் படிந்தும் இருக்க அதை ஒதுக்காமல் அப்படியே நின்றிருந்தாள்.

உடல் நடுங்க தொடங்கியிருந்தது.. பயமா குளிரா என்று தெரியவில்லை.. ஒரு முறை அண்ணாந்து ஷவரை பார்த்தாள். முகத்தில் தண்ணீர் விழுந்தது மீண்டும் குனிந்து கொண்டாள்.

அது அவள் அருகிலே நின்றிருந்தது. தண்ணீர் மேலே பட்டு விடாமல் சற்று தள்ளி.. இவளை பார்த்தவாறு..

அது இருந்த பக்கம் திரும்பலாமா? வேண்டாமா? என்ற பலத்த யோசனையில் அவள் இருப்பது போல தோன்றியது..!! அது போவதாய் இல்லை..!!

அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.. அவளுக்குள் பல குரல்கள் கேட்டன.. அதை திரும்பி பார்த்தாள் இப்போது.. அது அவளை பார்த்து ஸ்நேகமாய் சிரித்தது!! அவள் உடல் இன்னும் நடுக்கம் கொண்டது!! இது குளிர் இல்லை!!

சட்டென முகம் திருப்பி கொண்டாள்.. 'என்னை விட்டு எப்படி இங்கிருந்து போவாய்?' என்ற கேள்வியை கண்ணில் வைத்துக் கொண்டு அது அசையாமல் நின்றது!! இவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.. ஆனால் தண்ணீரை விட்டு வெளிவரவில்லை...

தண்ணீரில் நிற்கும் வரையில் அது தன்னை நெருங்காது.. இந்த தண்ணீர் ஒரு வடிகால் என்பது போல அவள் அங்கே நின்றிருந்தாள்.. ஈர உடை உடம்புடன் ஒட்டிக்கொண்டிருந்தது.. அதை பற்றி எல்லாம் நினைக்கவில்லை...

குளிப்பதற்கென இவள் கொண்டு வந்திருந்த டவலும் மாற்று உடையும் கதவருகே இருந்த கம்பியில் தொங்கி கொண்டிருந்தன..!!

எவ்வளவு நேரமாய் இங்கே இப்படி நின்று கொண்டிருக்கிறாள் என்று அவளுக்கே தெரியாது..!!

மீண்டும் அதன் புறம் பார்வை செலுத்தினாள்.. அதை காணவில்லை..!! அது தன்னுள் இருப்பது போல உணர்ந்தாள்..!! சட்டென ஷவரை விட்டு விலகி நின்றாள்.. சோப்பு ஷாம்பு வைப்பதற்காக சுவற்றுடன் அட்டாச் செய்யப்பட்டிருந்த ஒற்றை கதவு கொண்ட அலமாரி முன் நின்றாள். கண்ணாடியுடன் கூடிய கதவில் முகம் பார்த்தாள்.

அது அவளுள் இருந்தது.. வெகு நேரமாய் நீரில் இருந்ததால் கண்கள் சிவந்திருந்தன... இன்னும் வாளியிலிருந்து தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது!! இவள் நகர்ந்ததால் ஷவரிலிருந்து வந்த தண்ணீர்  நேராக தரையில் பட்டு சத்தம் கொஞ்சம் அதிகமானது..!!

மனசுக்குள் ஏதோ ஒன்று.. என்னவென்று அவளுக்கு புரியவில்லை.. நெஞ்சை எதுவோ அழுத்தியது..!! நெஞ்சு வலிப்பது போல் மூச்சு முட்டுவது போல உணர்ந்தாள்.. நிஜமாகவே நெஞ்சு வலித்தது..

வலது கையில் நெஞ்சை பிடித்துக் கொண்டு ஒரு கணம் கண் மூடி திறந்தாள்..  பயம் கவ்வியிருந்த முகம் கண்ணாடியில் பிரதிபலித்தது!!

அணிந்திருந்த கண்ணாடியை கழட்டினாள்.. பயம் மாறி முகத்தில் கோபம் குடியேறியது.. சில வினாடிகள் ரௌத்திரமான முகத்தை வெறித்தாள்.. அது அவளுக்குள் மாற்றங்கள் செய்து கொண்டிருந்தது!! அவளை ஆக்கிரமிக்க முயன்றது..

கோபத்தின் உச்சிக்கு சென்றால் அவள்.. தன் முடியை பற்றி இழுக்க கொண்டே வாயை திறக்காமல் கத்தினாள்..

'ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்' என்று மட்டும் சத்தம் வந்தது.. ஊமை சத்தம்.. சட்டென தலையை குனிந்து கொண்டாள்..

கதவு தட்டப்படும் சத்தம் எங்கோ கேட்பது போல கேட்டது.. கூர்ந்து கவனித்தாள் கதவு தட்டப்பட்டது...

"உள்ள என்ன தான்பண்ற?" அவள் அறை தோழி..

"கேட்கிறேன்ல உள்ள என்ன பண்ற? நான் குளிக்கணும்" , ஆபிஸில் இருந்து வந்து விட்டால் போலும்.. அமைதியாய் கதவை நெருங்கினாள்.

கதவில் காது பதித்து மெல்ல பேசினாள்.

"நான் வந்துடறேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.