(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 09 - தேவி

vizhikalile kadhal vizha

செழியனை வாசலில் வழி அனுப்பி விட்டு உள்ளே வந்த மலரை யோசனையாக பார்த்த சுந்தரம்மா,

“ஏன் புள்ள பேச்சிம்மா .. “ என்று ஆரம்பித்தவர், மலரின் முறைப்பில் , “மலரு... இனிமேல் இப்படி ஆம்பிளை பயலுவ கூட எல்லாம் வராதத்தா ..” என

இப்போ மேலும் முறைத்த மலர் “ஆச்சி.. நான் என்ன அவர் கூட ஒரே வண்டியிலேயா வந்தேன்.. எனக்கு துணைக்கு அவர் வண்டியில் தானே வந்தார்..”

“அதுக்கில்லத்தா.. ஊரு கெட்டு கிடக்க... நீ வயசு பொண்ணு... நாள பின்ன கல்யாணம் கட்டி போகணும்.. வீட்டுக்கு ஆம்பிள்ளைக போக வர இருந்தா உன் பேரு கெட்டு போகும் கண்ணு.. அதுக்குதான் சொல்லுதேன்..”

“ஆச்சி. எந்த காலத்திலே இருக்கீக.. இப்போ வெளி நாட்டுக்கே வேலைக்கு போற பெண்கள் இருக்காங்க.. அங்கே எல்லாம் ஆம்பிளைங்க கூட பேச மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தா .. நீ உன் வீட்டுலேயே இருந்துகம்மா அப்படின்னு அனுப்பி வச்சுடுவாங்க.. உள்ளூர்லே இருக்கிற கூட வேலை பார்க்கிறவங்க வீட்டுக்கு விருந்துக்கு போயிட்டு வாறது தப்பா? விருந்துக்கு வந்தவங்க எக்கேடு கேடட்டும்னு நினைக்காம பொறுப்பா கொண்டு வந்து விட்டுட்டு போறாங்க.. நீங்க என்னவோ பேசறீங்க?”

“இல்ல கண்ணு.. அக்கம் பக்கம் பாக்கிரவக மலர் பொண்ணு தனியா ஒரு ஆம்பிள பையன வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருக்கு அப்படின்னு தானே பேசுவாக..”

“ஆச்சி.. அவங்கள பத்தி தெரியாம பேசாதீங்க.. அவர் ஒன்னும் ஊர் பேர் தெரியாதவர் இல்லை.. நான் அவருக்கு கீழே தான் வேலை பார்கிறேன்.. நாங்க பார்கிறது ஒன்னும் சின்ன உத்தியோகமும் இல்லை.. எத்தனையோ சின்ன வயசு பசங்களுக்கு பாடம் சொல்லி குடுக்குறவங்க.. எங்கள அந்த பசங்க மரியாதையா பார்க்கிற மாதிரி தான் நடந்துக்குவோம்.. அதிலும் அவர பார்த்தா எங்க கிட்ட படிக்கிற பசங்க மட்டும் இல்லை.. அங்கே படிக்கிற அத்தனை பசங்களும் மரியாதையா பேசுவாங்க.. அவர் கூட வரதை பத்தி யாரும் தப்பா பேச மாட்டாங்க”

“நா அந்த தம்பிய பத்தி எதுவும் சொல்லல... ஆனாக்க உன்ன நாளைக்கு வாக்கப்பட்டு போற இடத்திலே ஒரு சொல்லு  சொல்லிடக்கூடாது... அதுக்கு தகுந்த மாதிரி தான் நீ நடந்துக்கணும்.. “ என்று மேலும் அழுத்தி சொல்லிக் கொண்டு இருந்தார்..

செழியன் கிளம்பிய பின் தன் அறைக்கு சென்று உடை மாற்றி திரும்பி வந்த வேலன், பாட்டி பேத்தி இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையை கேட்டவர்,

“மலர்... ஆச்சி கிட்டே கூட கூட பேசிட்டு இருக்காதே.. அவங்க பெரியவங்க அப்படி தான் பேசுவாங்க.. சரி சரி ன்னு சொல்லிட்டு போ.. “ என,

மலரோ அவரையும் முறைத்தவளாக “அப்பா.. அவங்க பேசுறது சரியா?” என்று அவரிடமும் சண்டை பிடிக்க,

“இப்போ தானே சொல்றேன்.. பெரியவங்க.. விடு ன்னு.. உள்ளே போய் டிரஸ் மாத்தி ரெஸ்ட் எடு..” என்று அனுப்பி வைக்க, இருவரையும் முறைத்து விட்டு உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே செல்லவும் “ஆத்தா... இப்போ எதுக்கு உனக்கு இவ்ளோ பேச்சு..? மலர் ஒன்னும் தெரியாத சின்ன பொண்ணு இல்லை.. நாலு பிள்ளைகளுக்கு அதுவும் வயசு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி குடுக்கிறா.. அவளுக்கே யார் யார் கிட்டே எப்படி நடந்துக்கணும்னு தெரியும்.. நம்ம புள்ளைய நாம தான் நம்பனும்.. அத விட்டு நொச்சு நொச்சு ன்னு கேள்வி கேட்டுட்டு இருந்தா.. அது நம்மள நாள பின்ன மதிக்காது பார்த்துக்கோ..” என,

“நீயும் சேர்ந்து.. அவ கூட பேசுதியா? யாரு உம பொண்டாட்டி சொல்லி கொடுத்தாலாக்கும்.. போய் புள்ளைய கிழவி திட்டுது .. நீங்க அடக்கி வைங்கன்னு” அதை கேட்டபடியே வந்த வள்ளியோ

முகத்தை தோளில் இடித்தபடி “இத பாருங்க அத்தை.. நான் அடுப்பாங்கரைலேர்ந்து வாரேன்.. உங்க புள்ள அவர் ரூமில் இருந்து வாறாரு.. இதுலே நான் என்னத்தை சொல்லி உங்க புள்ள கேட்டாரு.. நான் சொன்னாலே கேட்டுத்தான் மறுவேலை பார்பாறு.. “ என்று மேலும் பேச,

சுந்தர வடிவோ “ ஆமா.. உன்னை பத்தி தெரியாதா? உன் புள்ளைய சொன்னவுடனே உனக்கு கோபம் வருதாக்கும்.. போ போ.. சோலிய பாரு..” என,

அதற்கு ஏதோ பதில் சொல்ல வந்த வள்ளிய பார்த்த வேலன் “வள்ளி நீ.. போ.. முதலே மலர பாரு.. ஆத்தா கிட்டே வம்பு வழக்காதே” என

“க்கும்.. அவரு அம்மாவை ஒன்னு சொல்லிடக் கூடாதே.. உடனே அடக்கிருவாறே..” என்று முனுமுனுத்தபடி மலரின் அறைக்கு சென்றார்.

அங்கே மலர் கோபமாக அமர்ந்து இருக்க, அவளின் அருகில் சென்றவர்,

“மலர் .. ஆச்சிய பத்தி உனக்கு தெரியாதா.. விடு கண்ணு.  “

“இல்லைமா..  அப்பாவும் ஆச்சி கூட சேர்ந்துகிட்டு பேசறாரு.. “

“இல்லடா கண்ணு.. அப்பா உன்னை அனுப்பிட்டு அவரு அம்மாவை செம வாங்கு வாங்கிட்டாரு”

“க்கும்.. ஏன் நம்ம முன்னாடி ஒன்னும் சொல்ல மாட்டரமா?”

“அது எப்பவும் நடக்கிறது தான்.. ஆனா உங்க ஆச்சிய அடக்க அவரால தான் முடியும்.. இப்போ கூட என்னையும் சேர்த்து வம்பு இழுத்துட்டு இருக்காக... “ என்றவர்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.