(Reading time: 14 - 27 minutes)

தே நேரத்தில் அங்கே சுஹாசினியின் வீட்டில்... உள்ளே வந்திருந்தாள் ஹரிணி!!!

‘அவங்க அப்பா இங்கேதான் இருக்காங்க. நான் காமிக்கறேன் பாருங்க….’. அவள் உள்ளே நுழையும் நேரத்தில் சுஹாசினி சொன்ன அந்த வார்த்தைகள் அவளை அதிர வைத்தன.

‘என்ன செய்துக்கொண்டிருக்கிறாள் இவள்??? நான் எது நடக்ககூடாது என்று நினைத்தேனோ அதையே செய்கிறாளே இவள்.  

‘ஹாசனி..’ என்றபடியே ஓடி வந்தாள் அவளருகே!!! அவளை பார்த்ததும் மெலிதான மாற்றம் விவேக்கின் முகத்திலும் ஸ்ரீனிவாசனின் முகத்திலும்.

தங்கையை பார்த்ததும் மகிழ்வான புன்னகையுடன் வரவேற்றாள் சுஹாசினி.

‘என்ன பார்ட்டிக்கு யாரையுமே காணோம். எல்லா ஏற்பாடும் ரெடியா..’ அவசரமாக பேச்சை மாற்றினாள் இவள்.

‘எல்லாம் ரெடி. இரு வரேன். ஒரு நிமிஷம். அந்த போட்டோ...’ என்றபடி சுஹாசினி அலமாரியின் அருகில் செல்ல அவள் கையை பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டு நடந்தாள் ஹரிணி.

‘நீ உள்ளே வா.. உன்கிட்டே பேசணும்...’

அவர்கள் இருவரும் உள்ளே நகர இவனுக்கு அப்பா இல்லை என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாதவன் போலவே விவேக்கின் முகத்தையே பார்த்திருந்தான் ஸ்ரீனிவாசன்.

மெல்ல திரும்பி அவன் முகம் படித்து, தனது முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டு கேட்டான் விவேக்.

‘பர்த்டே பேபிக்கு என்ன யோசனை???

‘அங்கிள் உங்கப்பாக்கு என்னாச்சு..’ அவன் கேட்க

‘அதெல்லாம் ஒண்ணும் ஆகலை. நீ கிஃப்ட் எல்லாம் பிரிச்சு பார்த்தியா.. ’உனக்கு பிடிச்சிருக்கா. இல்லை வேறெதுவும் இன்னும் பெரிய  கிஃப்ட்டா வாங்குவோமா???’ என்றான் பேச்சை திசை திருப்பியவாறு.

பிறந்தநாளன்று இந்த சிறுவனின் மனதை தேவை இல்லமல் வருத்தப்பட வைப்பானேன்!!!

‘அது இருக்கட்டும். உங்களுக்கு உங்க அப்பான்னா ரொம்ப பிடிக்குமா அங்கிள்..’ விடுவதாக இல்லை ஸ்ரீநிவாசன்.

‘ரொம்ப ரொம்ப பிடிக்கும்டா..’ என்றான் நெகிழ்ந்து தளர்ந்தவனாய் ‘அவர்தான் எனக்கு எல்லாம்..

‘அவங்க எப்படி இருப்பாங்க???’ அடுத்த கேள்வி.

‘பார்க்கணுமா உனக்கு???’ என்றபடியே தனது கைப்பேசியில் இருந்த அவரது புகைப்படத்தை அவனுக்கு காட்டினான் விவேக்.

‘அங்கிள்... நான் இவரை எங்கேயோ பார்த்திருக்கேன்...’ மின்னும் கண்களுடன் சட்டென சொன்னான் ஸ்ரீநிவாசன்.

‘இவரையா???’ எங்கேடா???’

‘தெரியலை. ஆனா பார்த்திருக்கேன். எனக்கு இந்த ஃபேஸ் நல்லா ஞாபகம் இருக்கு. நிறைய தடவை பார்த்தா மாதிரி இருக்கு’ என்றான் யோசனையுடன்.

‘ஒரு வேளை... சின்ன வயசிலே பார்த்திருப்பே..’

‘இல்ல.. இப்போ ரீசென்ட்டா பார்த்திருக்கேன்...’ என்றவனை வியப்புடன் பார்த்தான் விவேக்.

அதே நேரத்தில் உள்ளே

‘இந்த விஷயம் தெரிஞ்சா விவேக் ரொம்ப சந்தோஷ படுவான் ஹரிணி’ சுஹாசினி ஹரிணியிடம் திரும்ப திரும்ப மன்றாடிக்கொண்டிருக்க

‘அதனாலேதான் அதை அவன்கிட்டே சொல்லாதேன்னு சொல்றேன்’ சுஹாசினியிடம் பதிலுக்கு கத்திக்கொண்டிருந்தாள் ஹரிணி

‘ஹரிணி.. விவேக் அப்பா நம்ம ஸ்ரீநிவாசனுக்கு....’ சுஹாசினி ஏதோ சொல்ல வர

‘நீ திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிட்டு இருக்கே... எனக்கு எதை பத்தியும் கவலை இல்லை... அவனும் அவங்க அப்பாவும் என்னை வேண்டாம்னு தூக்கி போட்டவங்க. அவன் இன்னும் வருத்தப்படணும். நிறைய வருத்தப்படணும்..’ கருவினாள் ஹரிணி. சுஹாசினியிடம் நிறையவே அதிர்ச்சி.

‘இங்கே பாரு கல்யாண பேச்சுன்னு வந்தா நாம ரெண்டு பேரை வேண்டாம்னு சொன்னா ரெண்டு பேர் நம்மை வேண்டாம்னு சொல்வாங்க இதுக்கு போய்..’ சுஹாசினி சொல்ல

‘நீ கொஞ்சம் வாயை மூடறியா???” என பாய்ந்த ஹரிணியின் மனதிற்குள் இன்னொரு யோசனை. ‘திடீரென அப்பா இங்கே வந்து நின்று விட்டால்???’

அவசரமாக அவர் கைப்பேசிக்கு அழைத்தாள் அவள்!!!

‘இங்கே சுஹாசினி வீட்டிலே இன்னைக்கு பார்ட்டி இல்லை. கான்செல் ஆயிடுச்சு. அதனாலே நீங்க வர வேண்டாம். நீங்க உங்க வேலைக்கே போயிடுங்க..’ என்றாள் படபடவென.

‘பார்ட்டி இல்லைனா நான் வரக்கூடாதா???’ அப்பா நிதானமான குரலில் கேட்க

‘இல்லை வேண்டாம். நீங்க உங்க வேலைக்கே போங்க... ஹாசினி வேண்டாம்னு சொல்லிட்டா..’ சொல்லிவிட்டு துண்டித்திருந்தாள் அழைப்பை.

‘ஹேய்... உன்னை அறைஞ்சேன்னா எப்படி இருக்கும் தெரியுமா??? நான் எப்போ அப்பாவை வர வேண்டாம்னு சொன்னேன். முதல்லே அப்பா நம்பர் குடு  நீ எனக்கு.’ வெடித்தாள் சுஹாசினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.