(Reading time: 14 - 27 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 08 - வத்ஸலா

vs

வனது குரல் கேட்டதுதான் தாமதம் அகமும் முகமும் மலர சரேலென திரும்பினான் ஸ்ரீநிவாசன். நிச்சியமாக இவன் வருவானோ என அவன் காத்திருந்தது போலவே தோன்றியது விவேக்குக்கு.

‘ஹேய்.... விவேக் அங்கிள்..’ தாவி வந்து கட்டிக்கொண்டான் அவன் கழுத்தை. இப்போது ஸ்ரீனிவாசனின் முகத்தில் சின்னதாய் ஒரு வெற்றி சிரிப்பு!!!

‘அவனால் செய்யவே முடியாத ஒரு வேலையை அவர் சொல்ல, அவர் சொல்வதை முதலில் மறுத்து, பின் தயங்கி, கடைசியில், அவர் வழிக்கு வந்து, அந்த வேலையை இவன் சரியாக செய்து முடிக்கும் போது அப்பாவின் முகத்தில் எப்போதும் தேங்கி நிற்கும் இதே வெற்றி சிரிப்பு!!!

அவனுக்கு ஒரு சில நேரம் கோபம் கூட வரும் அவரது இந்த சிரிப்பை பார்க்கும் போது!!!

‘போங்கப்பா ...என்னை செய்ய வெச்சிட்டீங்க இல்ல... ரொம்ப பிடிவாதம்பா உங்களுக்கு ‘என்பான் அவரிடம்.

‘உன்னை கொஞ்சம் கஷ்டம்தான்டா படுத்தறேன். ஆனா அது பின்னாலே உனக்கு எவ்வளவு உதவியா இருக்குன்னு நீயே பார்ப்பே. அப்போ நினைச்சுப்பே அப்பாவை.’  சொல்வார் அவர். இப்போது நினைத்துக்கொள்கிறானே அவரை!!! ஒவ்வொரு நொடியும்  நினைத்துக்கொள்கிறானே!!!

‘ரொம்ப பிடிவாதக்காரன் ஸ்ரீனிவாசா நீ’ என்றான் விவேக் அவன் கன்னம் வருடியபடியே.

இவனிடம் பேசும்போது ஏதோ தனது அப்பாவிடம் பேசிக்கொண்டிருப்பதை போன்றதொரு நிறைவு வருவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

‘எல்லாம் நல்லதுக்குதான் அங்கிள்...... வாங்க..’ என்று பெரிய மனிதன் போல் சொல்லியபடியே  அவன் கையை பற்றி இழுத்துக்கொண்டே ஸ்ரீநிவாசன் நடக்க .கொஞ்சம் சிரித்துத்தான் விட்டான் விவேக்.  இன்றைய நாளில், அவன் இருக்கும் மனநிலையில் அவன் சிரிப்பான் என விவேக்கே எதிர்ப்பார்க்கவில்லைதான்.

எல்லாம் நல்லதுக்குதான்!!! இப்படிதான் அடிக்கடி சொல்வார் அவன் தந்தையும். இன்று என்ன வைத்திருக்கிறாரோ அவனுக்காக!!! என்ன செய்ய காத்திருக்கிறாரோ!!!

யோசித்தவனுக்கு திடீரென அந்த கனவின் ஞாபகம் ‘அங்கே போகாம எப்படி நீ தாமோதரனை பாக்குறது???’ அப்பா கனவில் ஏதோ சொன்னது போலே இருந்ததே!!!

‘ஸ்ரீனிவாசா’ என்றான் விவேக். ‘உனக்கு தாமோதரன்னு யாரவது ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களாபா??? இல்லை அப்படி யாரைவயவது தெரியுமா???’ விவேக் கொஞ்சம் யோசனையுடன் கேட்க

‘தாமோதரனா அப்படி யாரும் இல்லையே அங்கிள். ஆங்... எங்க தாத்தா பேர் தாமோதரன். எங்க அம்மா சொல்லி இருக்காங்க. ஆனா அவர் எங்கே இருக்கார்ன்னு தெரியலை..’

‘தாத்தாவா???’ யோசித்தபடியே வீட்டுக்குள் ஸ்ரீனிவாசனுடன் நுழைந்தான் விவேக்.

ன்னும் விருந்தினர்கள் யாரும் வந்திருக்கவில்லை போலும். பிறந்தநாள் விழாவுக்கான அலங்காரங்களுடன் இருந்த போதும் வீடு சற்றே அமைதியாகவே இருந்தது.  

‘வாங்க.. வாங்க... வாங்க..’ சந்தோஷம் மட்டுமே நிறைந்து இருந்த குரலில் வரவேற்றாள் சுஹாசினி. ‘நீங்க வந்தது பெர்சனலா ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு’

அவன் சென்று சோபாவில் அமர அவன் நடையையும், அவன் அமர்ந்த தோரணையையும் பார்த்து நெகிழ்ந்து போனாள் அவள். அப்படியே அவனது தந்தையை நினைவு படுத்தினான் விவேக்.

கொஞ்சமாகவா கடன் பட்டிருக்கிறாள் அவருக்கு. ஒரு ஆழ்ந்த மூச்சுடன்  புன்னகைத்தபடியே அவனை பார்த்து சொன்னாள்

‘அப்படியே எங்க டாக்டரை பார்த்த மாதிரியே இருக்கு. சட்டென நிமிர்ந்து பளீரென புன்னகைத்தான் விவேக்.

‘எங்கப்பாவை தெரிஞ்சவங்க என்னை பார்த்தா அப்படிதான் சொல்லுவாங்க. அவர் கிட்டே இருந்தது எல்லாத்தையும்... எல்லாத்தையும்  எனக்கு கொடுத்திருக்கார் மிசஸ் ஹாசினி. எல்லாத்தையும் கொடுத்திட்டு இப்போ அவர் மட்டும்.....’ சொல்லிக்கொண்டே போனவனின் குரல் கொஞ்சம் ஸ்ருதி தப்பியது

‘மிஸ்டர் விவேக்..’ என்றாள் சுஹாசினி கொஞ்சம் தளர்ந்தவனை கலைத்து நிமிர்த்தி......

‘நான் ஒண்ணு கேக்கறேன். இப்போ இங்கே திடீர்னு உங்க அப்பா உங்க முன்னாடி வந்து நின்னுட்டா, நான் அவரை கூட்டிட்டு வந்து நிறுத்திட்டா என்ன செய்வீங்க???’

அந்த கேள்வியிலேயே கொஞ்சம் தடுமாறிப்போனான் விவேக்!!!

‘நீ.. நீங்க வேறே... அவர் வந்து நின்னுட்டா ...நான் அப்படியே... என்ன சொல்றதுன்னு தெரியலை...... எனக்கு அப்புறம் இந்த உலகத்திலே வேறே ஒண்ணுமே வேண்டாமே ஹாசினி..... என்கிட்டே இருக்கறது, என் சொத்து, சுகம் எல்லாத்தையும் உங்ககிட்டேயே கொடுத்திட்டு அவரை மட்டும் கூட்டிட்டு போயிடுவேன்..’

சின்ன குழந்தை போல் உணர்ச்சி வசப்பட்ட குரலில் அவன் சொல்லிக்கொண்டே போக நீர் சேர்ந்த விழிகளின் வழியே அவனையே பார்த்திருந்தாள் சுஹாசினி. அவள் முகம் பார்த்து சட்டென சுதாரித்தான் விவேக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.