(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 14 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

லோ ஆன்ட்டி.... எப்படி இருக்கீங்க....”

“ஹே பாரதி.... வா வா.... இப்போதான் உன்னைப் பத்தி நினைச்சேன்... ஆளையே காணுமே... போன் பண்ணலாம்ன்னு...”

“ஒரு வாரமா கேஸ் விஷயமா செம்ம பிஸி ஆன்ட்டி.... உங்க கால் எப்படி இருக்கு...... நடக்க ஆரம்பிச்சுட்டீங்களா.... வீட்டுக்கதவு திறந்தே வச்சிருக்கீங்க....”

“கால் பரவாயில்லை பாரதி... ரொம்ப ஊனாமா மெதுவா நடக்க ஆரம்பிச்சு இருக்கேன்... சப்போர்ட்டுக்கு குச்சி வச்சுக்கறேன்..... அடிப்பட்ட  கால்ல அழுத்தம் கொடுக்கறதில்லை.... ராஜா இன்னிலேர்ந்து காலேஜ் போக ஆரம்பிச்சுட்டான்... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்... அதுதான் திறந்தே வச்சேன்.... இரு உனக்கு காஃபி எடுத்துட்டு வரேன்....”

“நீங்க உக்காருங்க ஆன்ட்டி... இங்க வர்றதுக்கு முன்னாடிதான் குடிச்சுட்டு வந்தேன்....”,ராஜா வீட்டில் இல்லை என்றவுடன் fuse போன பல்பானாள் பாரதி.

“அப்பறம் அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க....  சாரங்கன் வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா....”

“எல்லாரும் சூப்பரா இருக்கோம் ஆன்ட்டி...”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டு காலிங்பெல் அடிக்க பாரதி சென்று கதவைத் திறந்தாள்.

“சுகுணா அம்மா இருக்காங்களா....”

“உள்ள இருக்காங்க... நீங்க....”

“என்னோட பேரு மாணிக்கம், அவங்க ஒண்ணுவிட்ட தம்பிக்கு தெரிஞ்சவங்க....”

இவர்கள் பேசுவதை கேட்ட சுகுணா பாரதியிடம் அவரை உள்ளே அழைத்துவர சொன்னார்.

“வாங்க, நல்லா இருக்கீங்களா... நீங்க வருவீங்கன்னு தம்பி சொன்னான்....”

“நல்லா இருக்கேம்மா... உங்களுக்கு ஏதோ கால்ல அடிபட்டிடுச்சுன்னு தம்பி சொன்னாரே, இப்போ பரவாயில்லையா...”

“லேசான அடிதான், இப்போ சரி ஆகிடுச்சு... நீங்க என்ன சாப்பிடறீங்க....”

“இப்போ எதுவும் வேணாம்மா....”, அவர் மறுக்க பாரதி சென்று அவருக்கு குடிக்க நீர் எடுத்து வந்து கொடுத்தாள். அவர் பாரதியை யார் என்பதுபோல் பார்க்க...

“எனக்கு ரொம்ப வேண்டிய பொண்ணு... பார்த்துட்டு போக வந்திருக்கு.... நீங்க வந்த விவரம் சொல்லுங்க....”

“உங்க பையனுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கறதா தம்பி சொன்னாப்பல..... என் தம்பி பொண்ணுக்கும் கல்யாணத்துக்கு பார்த்துட்டு இருக்கோம்... அதுதான் நேருல பார்த்து பேசிட்டு போகலாம்ன்னு வந்தேன்....”

“தம்பி சொன்னாங்க.... பொண்ணு என்ன பண்ணிட்டு இருக்கு....”

“இந்த வருஷம்தான் டிகிரி முடிச்சுது..... வேலைக்கு அனுப்ப அவங்க அம்மாக்கு விருப்பமில்லை... கல்யாணம் முடிச்சுடலாம்ன்னு சொல்றாங்க.... சரின்னு பார்க்க ஆரம்பிச்சுட்டோம்.... உங்க தம்பிகிட்ட பேசிட்டு இருக்கும்போது இதை சொன்னேன், அப்போதான் அவரு என்னோட அக்கா பையனுக்கும் பார்த்துட்டு இருக்காங்க... உங்களுக்கு ஓகேன்னா ஜாதகம் கொடுங்கன்னு சொன்னாரு....”

“ஓ நீங்க டீடைல்ஸ் போன்ல சொல்லிட்டு ஜாதகத்தை போஸ்ட் பண்ணி இருக்கலாமே... பாவம் உங்களுக்கு அலைச்சலா போச்சு....”

“இதுல என்னம்மா அலைச்சல் இருக்கு.... என்ன இருந்தாலும் நேருல வந்து பேசறா மாதிரி இருக்காதே...”,என்று கூறியபடியே சுகுணாவிடம் ஜாதகத்தை கொடுத்து பின் வீட்டை எடைபோட ஆரம்பித்தார்.

அவர் விஷயத்தை சொன்னதில் இருந்து ஒரு கப் விளக்கெண்ணையை ஒரே மடக்கில் குடித்தவளைப் போல் முகத்தை வைத்திருந்த பாரதியைப் பார்த்த சுகுணாவிற்கு சிரிப்பு வந்தது.

“இருங்க இதைப் போய் சுவாமி மாடத்துல வச்சுட்டு உங்களுக்கு குடிக்க  எடுத்துட்டு வரேன்....”,சுகுணா எழும்ப அவரைத் தடுத்துவிட்டு தான் எடுத்துவருவதாகக் கூறி சமையலறை சென்றாள் பாரதி.

உள்ளே நுழைந்ததும் சுகுணாவிற்கு சுலபமாக இருக்க வேண்டுமே என்று  முக்கியப் பொருட்கள் அத்தனையும் மேடை மீதே வைத்திருந்தான் ராஜா.  பாரதி பாலைக் காய்ச்சி காஃபி கலந்தபடியே, சுகுணாவும், வந்த மனிதரும் பேசுவதை கவனித்தபடி இருந்தாள்.... உள்ளூர ஒரே திக் திக் எங்கே சுகுணா அவர் பெண்ணிற்கு ஓகே சொல்லிவிடுவாரோ என்று.

பாரதி கலந்து வந்து சுமாரான காப்பியை மிக சூப்பராக இருப்பதாக பாராட்டிவிட்டு ஜாதகப்பொருத்தம் பார்த்தபின் சுகுணாவிற்கு அழைப்பதாகக் கூறி கிளம்பினார் வந்தவர்.

“என்ன பாரதி, வரும்போது ரொம்ப பிரகாசமா வந்த... திடீர்ன்னு ஏதோ மூட்அவுட் ஆன மாதிரி இருக்க....”, என்று சுகுணா கேட்க, இதற்கு மேல் சொல்லாமல் இருந்து, ராஜாவை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்கும் நிலை வந்துவிடுமோ என்று நினைத்த பாரதி...

“ஆன்ட்டி எனக்கு ராஜாவை ரொம்ப பிடிச்சிருக்கு....”,என்று ஆரம்பிக்க கடகடவென்று சிரிக்க ஆரம்பித்தார் சுகுணா.

“ஹ்ம்ம் உன்னோட அதிரடிக்கு நான் ரெண்டாவது சந்திப்பிலேயே இதை சொல்லுவேன்னு நினைச்சேன்.... அதுவும் அவன்கிட்ட.... ஏமாத்திட்டியேம்மா...”

“ஹாங்... என்ன சொல்றீங்க ஆன்ட்டி....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.