(Reading time: 19 - 38 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 04 - மது

AT THE END OF INFINITY

Heart

டிசக்க்ஷன் வகுப்பு முடிந்ததும் லஞ்ச் ப்ரேக்கில் மாணவர்கள் அனைவரும் மதியம் நடக்கவிருந்த அனாடமி அசஸ்மன்ட் தேர்விற்காக புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தனர்.

சில மாணவர்கள் அவர்களின் சீனியர்களின் உதவியோடு பிட் தயார் செய்து எடுத்து வந்து அதை எப்படி பங்கிட்டு கொள்வது என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.

மாணவியரில் ஒரு சிலர் அழாத குறையாகப் புத்தகத்தைப் புரட்டுவதும் ஒன்றும் புரியாமல் மூடிவைப்பதுமாக இருந்தனர்.  

மாவட்ட அளவில், பள்ளியில் முதல் ரேங்க் வாங்கிய மாணவ மாணவியருக்கே அந்தக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. அப்படி பள்ளியில் எப்போதும் நல்ல ரேங்க் வாங்கியவர்கள் இங்கே பாஸ் செய்யவே மிகுந்த சிரமப்பட்டனர்.

மனிதன்... ஜீவராசிகளில் உயர்வானவன். அவனது உடல் கூறியல் ஓர் அற்புத அதிசயம் என்றே சொல்லலாம். இன்றைய நவீன யுகத்தில் மனிதன் எத்தனையோ கருவிகளை கண்டுபிடித்திருக்கிறான். ஏன் மனிதனுக்கு இணையாக ரோபோக்கள் கூட அவன் படைத்திருக்கிறான். ஆனால் அவனது உடல் என்னும் அதிசயத்தை இன்னும் அவனால் முழுமையாக அறிய முடியவில்லை தான்.

ஒரு சாதாரண கை... ஆனால் அந்த கையில் தான் எத்தனை தசைகள், அவற்றை தாங்கும் எலும்புகள், அவைகளை உயிரோடு வைத்திருக்கும் இரத்த நாளங்கள், அவற்றிற்கு உணர்வினை கொடுக்கும் நரம்புகள். இந்த நரம்பு இப்படித் தான் செல்ல வேண்டும். இந்த தசை இப்படித்தான் இயங்க வேண்டும் என்று யார் நிர்ணயித்திருப்பார். ஒரு கால் அதில் ஏதும் மாறிப் போனால் அந்த கை மொத்தமுமே பழுதாகிப் போய்விடுகிறதே.

மருத்துவம் என்பது இப்படியான பழுதினை சரி செய்வது தானே. அதற்கு முதலில் மனித உடல் கூறியல் அதன் செயல்பாடுகள் குறித்து தெரிய வேண்டியது அவசியம் அல்லவா.

“நார்மல் எதுன்னு தெரிந்தால் தானே நீங்க அப்நார்மல் அதவாது நோயினை கண்டுபிடித்து குணப்படுத்த முடியும்” அனாடமி புரபசர் கூறியது மாணவர்களுக்குப் புரிந்தாலும் தலையணை விட தடிமனான புத்தகங்கள், கிரேக்க இலத்தீன் மொழியில் பெயர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை அச்சுறுத்தின.

“நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போக்ரேட்ஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்  அதலால் அலோபதி மருத்துவ சொற்கள் பெரும்பாலும் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் இருக்கும். எனவே ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும்” இன்னொரு பேராசிரியர் விளக்கிச் சொல்லியிருந்தார்.

டாக்டர் என்றால் திரைப்படங்களில் காண்பிப்பது போல ஸ்டைலாக வெள்ளை கோட் அணிந்து கொண்டு கழுத்தில் ஸ்டேதஸ்கோப் மாட்டிக் கொண்டு ‘ காட் இஸ் கிரேட்’ ‘இட்ஸ் எ மெடிகல் மிராக்கில்’ என்று வசனம் பேசிக் கொண்டு இருப்பதல்ல என்று முதல் நாளே கடாவர்களோடு கைகுலுக்கிய போதே அந்த முதாலம் ஆண்டு மாணவர்களுக்குப் புரிந்து போனது.

ன்று மதிய உணவு இடைவேளையின் போது அவசர அவசரமாக விடுதிக்கு விரைந்தாள் ஹரிணி. அவளது அன்னை பாரதி அந்த நேரத்தில் தான் ஹாஸ்டலில் இருந்த பொது தொலைபேசியில் கூப்பிடுவதாக சொல்லியிருந்தார்.

“அம்மா எனக்கு கஷ்டமா இருக்கு. போன பிசியோ அசஸ்மன்ட்ல ஜஸ்ட் பாஸ் தான் எடுத்தேன். அனாடமில பெயில் ஆகிருவேனோன்னு பயமா இருக்கு. ஒண்ணுமே மண்டையில ஏற மாட்டேங்குது”  

“விதுகுட்டி (ஹரிணியை வீட்டினர் செல்லமாக விதுகுட்டி என்று தான் அழைப்பர்)  நீ இப்போ காலேஜ் படிக்கிற. இனியும் ஸ்கூல் மாதிரி மார்க்ஸ் ரேங்க் அப்படின்னு இருக்கக் கூடாது. இந்த பீல்ட்ல உன்னோட அறிவை வளர்த்துக்க. எப்படி கதை புக்ஸ் படிக்கிற அப்படி கேசுவலா படி. நிறைய அப்சர்வ் செய். ஒரு இன்டிவிஜூவலா உன்னை டெவலப் செய்துக்கோ. பெயில் ஆனா என்ன திரும்பவும் நல்லா படிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு படி. ஒரு தடவைக்கு நாலு தடவை படிச்சா இன்னும் அதிகமான விஷயங்கள் புரிபடும்” ஹரிணியின் அன்னை பாரதி மகளுக்கு அறிவுரை கூறினார்.

“சரி மா” என்றவள் முதல் நாள் நடந்த நிகழ்வுகளை அன்னையோடு பகிர்ந்து கொண்டாள்.

ஹரிணிக்கு இந்த உலகத்திலேயே அவளது அன்னை தான் பெஸ்ட் பிரண்ட், குரு, தெய்வம் எல்லாம். பாரதி அவரது பெயருக்கு ஏற்றார் போல மிகுந்த முற்போக்குச் சிந்தனையுடைய பெண்மணியாக இருந்தார். சிறுவயதில் பக்கத்துக்கு வீட்டு ஆன்டீஸ் எல்லாம் மதியப் பொழுதில் அரட்டை அடித்துக் கொண்டிருக்க பாரதி எப்போதும் ஒரு புத்தகமும் கையுமாக இருப்பதை பார்த்திருக்கிறாள் ஹரிணி.

பத்தாம் வகுப்பு பரீட்சை முடிந்த விடுமுறையில் அவர்கள் வீட்டுப் பெரிய ட்ரங்க் பெட்டியைத் திறந்து பார்த்த ஹரிணி வியந்திருக்கிறாள். அத்தனையும் அவளது அன்னை சேகரித்த புத்தகங்கள்.

எந்த துறையானாலும் அன்னைக்கு அது பற்றிய ஞானம் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.