(Reading time: 19 - 38 minutes)

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தைரியம் அப்போதே ஹரிணிக்கு வந்துவிட்டிருந்தது.

‘அக்கா அடுத்த தடவை கடைக்கு போகும் போது பாண்ட்ஸ் சாண்டல் பவுடர் வாங்கிட்டு வா’ ‘ அக்கா புதுசா ஹேர் பாண்ட் வந்திருக்கு அது வாங்கிட்டு வா” தங்கைகள் கேட்க அவர்களை முறைத்தாள் ஹரிணி.

“எதுக்கு உங்களுக்கு இதெல்லாம்” ஹரிணி கேட்டுவிட கொஞ்சம் வாயாடியான வரூதினி “நாங்க அழகா ஆகத் தான். அப்புறம் உன்னை மாதிரி பக்கியாட்டம் இருக்க சொல்றியா” என்று கேட்டுவிட ராஜன் சிறிய மகளை அதட்டினார்.

“அக்காகிட்ட என்ன பேச்சு இதெல்லாம். சாரி கேளு” தந்தை சொல்லவும், “சாரி கேக்குறேன் ஆனா ஹேர்பான்ட் வாங்கித் தருவாளான்னு கேட்டு சொல்லுங்க” என்று துடுக்காய் சொல்லவும் “அதெல்லாம் வாங்கி குடுப்பா. அப்பா வாங்கிட்டு வர சொல்றேன். நீ அக்காகிட்ட சாரி கேளு” ராஜன் சொல்ல அவரை முறைத்தாள் ஹரிணி.

இரவில் மகளை சமாதானம் செய்தார் ராஜன்.

“சின்ன பொண்ணு தானே மா. நீ இயற்கையிலேயே அழகு டா” அப்பா சொல்ல புரியாத பார்வை பார்த்தாள்.

எப்போதும் ஹரிணி தன்னை அலங்கரித்துக் கொள்ள எந்த முயற்சியையும் எடுத்ததில்லை. அதிலும் இந்த ஓராண்டாய் அவள் பம்பரமாய் சுழல கண்ணாடி முன் நிற்கத் தான் ஏது நேரம்.

“அப்பா நான் அதுக்கு ஒன்னும் கோவிக்கலை. அதென்ன கேட்டதும் உடனே எல்லாத்தையும் வாங்கித் தர பழக்கம். போன மாசம் தான் புது டிசைன் பான்ட்ன்னு சொல்லி ரெண்டும் அடம் பண்ணி வாங்கிகிட்டு வர சொன்னுச்சுங்க. இப்போ இந்த மாசம் இன்னொன்னு. இன்னிக்கு ஹேர் பான்ட் நாளைக்கு பெரிய பொருள்ன்னு போகும். குடும்ப நிலைமை தெரியாம இருந்தா எப்படி” ஹரிணி படபடவென பொரிந்து தள்ள ராஜன் விழிகள் தாழ்ந்தன.

“ஆக்சிடன்ட் ஆகுறதுக்கு முன்னாடி வரைக்கும் நீங்க கேட்டு நான் எதையும் வாங்கிக் கொடுக்காம இருந்ததில்லையே விதுகுட்டி. நீ எப்போவும் எதையும் வாய் திறந்து வேணும்னு கேக்க மாட்ட. ஆனா உன் தங்கச்சிங்க அப்படி இல்லையே. எனக்கு இந்த ஆயில் இவ்வளவு காசு போட்டு வாங்க வேண்டாம். சாதாரண தேங்காய் எண்ணை போதும். அவங்க கேட்டதை வாங்கி கொடுத்திடு டா” ராஜன் சொல்ல ஹரிணி விழிகளும் கலங்கின.

இருந்தாலும் கண்களைத் துடைத்துக் கொண்டு, “அப்பா முன் மாதிரி இருந்தாலும் நான் இதையே தான் சொல்லிருப்பேன். பத்து ரூபாய் இருந்தா அந்த பத்துக்குள் செலவு செய்ய கத்துக்கணும். பத்தாயிரம் ரூபாய் இருந்தா அதுக்கேத்த மாதிரி செலவு செய்துக்கலாம். இப்போ ஒன்னும் சின்ன குழந்தைங்க இல்ல. அவங்களும் புரிஞ்சுக்கணும்” என தனது கருத்தினை தெளிவாக சொன்னாள்.

ஹரிணி அப்படித் தான். தனது மனதில் சரி என்று தோன்றியதை பட்டென்று சொல்லி விடுவாள். அவளுக்கு நியாயம் என்று படுவதை யாராயினும் அவர்களிடம் சொல்ல தயங்க மாட்டாள்.

இருந்தும் ராஜனுக்கு புரிவதாய் இல்லை. அன்னையிடம் சொல்லி குறைபட்டாள்.

“நீ சொல்றது சரி தான் விதுகுட்டி. இருந்தாலும் அப்பா இப்போ இருக்க மனநிலையை நீ புரிஞ்சுக்கணும். அவர் இடத்தில இருந்து அவர் செய்யக் கூடியதை எல்லாம் நான் செய்ய முயற்சி செய்றேன்” பாரதி சொல்லவும் மகளுக்கு அன்னையிடம் இன்னும் அதிகமான மதிப்பு ஏற்பட்டது.

“என்னால முடிஞ்ச அளவு அம்மாவின் கஷ்டத்தை குறைக்கனும். அம்மா முன்ன மாதிரி கலகலப்பா சிரிக்கணும். அம்மாவை சொகுசா வச்சுக்கணும். அப்பாவுக்கு நல்ல வைத்தியம் செய்து ராஜா மாதிரி வைத்துக்கணும்” என்று மனதில் லட்சியம் கொண்டாள் மகள்.

அவளது லட்சியத்தின் முதல் படியாக பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டத்தில் முதலாக வர அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

கல்லூரி செல்லும் முன் தங்கைகளை அழைத்து வைத்து அறிவுரைகள் கூறினாள்.

“எங்க அக்கா டாக்டர் ஆகப் போறா” குதூகலளித்த சகோதரிகள் அக்காவின் பேச்சினை அமைதியாகக் கேட்டனர்.

“அக்கா மெட்ராஸ்ல இருந்து பினோபார்ம் வாங்கிட்டு வருவியா” வரூதினியும் ப்ரீதியும்  கேட்டனர். அதைத் தான் தீபாவளிக்கு வாங்கித் தரும்படி அன்னையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஹலோ அம்மா லைன்ல இருக்கீங்களா” மகளின் குரலில் சிந்தனை கலைந்தார் பாரதி.

“உனக்கு செலவுக்கு பணம் ஏதும் வேணுமா. மணி ஆர்டர் செய்யவா”

“இல்லமா எடுத்துட்டு வந்ததே மிச்சம் நிறைய இருக்கு. சுகி நல்லா படிக்கிறாளா”

“அதெல்லாம் நல்லா படிக்கிறா. அக்காவை விட அதிகம் மார்க் எடுத்து காண்பிப்பாளாம்”

“வரூ ப்ரீத்தி என்ன செய்றாங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.