(Reading time: 19 - 38 minutes)

ஓர் கிராமத்தில் பிறந்து வளர்ந்து தற்போதும் ஓர் சிறு ஊரில் வசிக்கும் தனது அன்னைக்கு உலகத்தின் சாளரமாக இந்தப் புத்தகங்கள் தாம் இருந்திருக்கின்றன என்று தெரிந்து கொண்டாள். அதனாலேயே தானும் ஆவலோடு புத்தகம் வாசிக்கத் தொடங்கினாள்.

இவளது ஆர்வம் அறிந்து ஹரிணியின் தந்தை ஜெயராஜன் அந்த ஊரில் இருந்த நூலகத்தில் ஹரிணியை சேர்த்து விட்டிருந்தார். விடுமுறை நாட்களில் அங்கிருந்து புத்தகம் எடுத்து வந்து படிப்பது தான் அவளது பொழுதுபோக்கு.

தான் வாசித்த புத்தகங்கள் பற்றி அன்னையிடம் விவாதிப்பாள். தாயும் மகளும் அரசியல் முதல் ஆன்மிகம் வரை, வரலாறு முதல் வானவியல் வரை எல்லாவற்றையும் அலசுவார்கள்.

.அன்றும் தன் அன்னையோடு போனில் முதல் நாள் நடந்தவற்றைப் பகிர்ந்தவள்,

“பிரின்ஸாம் பிரின்ஸ். எல்லோரும் என்னவோ அவனை தலை மேல தூக்கி வச்சுட்டு ஆடுறாங்க. பெரிய பொன்னியின் செல்வன்னு நினைப்பு. அவனை எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லமா” ஹரிணி அனடாமி அசஸ்மன்ட் தேர்வையும் மறந்து அன்னையிடம் கொட்டித் தீர்த்தாள்.

“யாரைப் பற்றியும் முழுமையா தெரிஞ்சுக்காம ஜட்ஜ் செய்யக் கூடாது விதுகுட்டி. அந்த பையனோட அம்மா ரொம்ப நல்ல டைப்பா தெரிஞ்சாங்கன்னு சொல்ற. அவன் பிரின்ஸ்னா அவங்க அம்மா மாஹாராணியா தானே இருப்பாங்க. அவன் யாராக இருந்தா என்ன. நீ எப்போதும் போல எல்லோரிடமும் பழகுவது போல பழகு. அவன் நிஜமாவே ரொம்ப நல்ல பையனா கூட இருக்காலாம் தானே”  அன்னை கூறியவுடன் கொஞ்சம் தெளிவடைந்தாள் ஹரிணி.

“சரி மா தீபாவளிக்கு வரியா. உன் தங்கச்சிங்க கேட்டுட்டே இருக்காங்க அக்கா எப்போ வருவான்னு” அன்னை கேட்க ஹரிணி வரவில்லை என்று மறுத்து உரைத்தாள்.

“தீபாவளிக்கு ரெண்டு நாள் தான் மா லீவ் கிடைக்கும். பஸ் எல்லாம் கூட்டமா வேற இருக்கும். ப்ரைவேட் பஸ்ல டிக்கட் எல்லாம் விலை ஜாஸ்தியா வேற ஆகிடும். டிசம்பர்ல பதினஞ்சு நாள் லீவ் கிடைக்கும் அப்போ வரேனே”

“ஹாஸ்டல்ல யாருமே இருக்க மாட்டங்களே. மெஸ் கூட மூடி விடுவாங்களே என்ன செய்வ”

“நார்த் பொண்ணுங்க எல்லாம் இங்க தான் இருப்பாங்க. அப்புறம் கொஞ்சம் சீனியர் அக்கா எல்லாம் இருப்பாங்க மா. ஹவுஸ் சர்ஜன் குவாட்டர்ஸ் மெஸ் திறந்திருக்கும் மா. அங்க சாப்பிடலாம்ன்னு திவ்யா அக்கா சொன்னாங்க”

“தீபாவளிக்கு ட்ரஸ் எடுத்துக்கோ விதுகுட்டி”

“ஏற்கனவே ஒரு டிரஸ் போடாம புதுசா வச்சிருக்கேன் மா அதையே போட்டுக்குறேன். அப்புறம் அம்மா என்னோட அலமாரில ஒரு போஸ்ட்பாக்ஸ் உண்டியல் இருக்கும். அதுல ஒரு செவென்  ஹன்ட்ரட் இருக்கும் மா. வரூக்கும் ப்ரீத்திக்கும் தீபாவளிக்கு அந்த பினோ பார்ம் டிரஸ் வாங்கி குடுத்திருங்க மா”

மகள் சொல்லவும் மறுபுறம் பாரதி எப்போதும் போல உள்ளுக்குள் கலங்கினார்.

இரண்டு வருடங்களாக  குடும்பத்தின் நிலை அறிந்து தன்னோடு சேர்ந்து குடும்பத்தின் பாரத்தை தன் தலையில் சுமக்கிறாள்.

சிறு வயதில் இருந்தே மூன்று தங்கைகளுக்குப் பின் தான் தனக்கு என்ற மனப்பான்மையில்  வளர்ந்து விட்டதால் ஹரிணி எதற்கும் பெரிதாக ஆசைப்பட்டாளில்லை. அப்படியே ஆசை கொண்டாலும் அதை எப்படியாவது தனது மனதில் இருந்து அகற்றி விடுவாள். ஆசைப்பட்டு அது கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வருந்துவதை விட ஆசையையே களைந்து விடுவது மேல் அல்லவா.

எனினும் ஹரிணியின் தந்தை ராஜனுக்கு விபத்து ஏற்பட்டு கால்கள் இரண்டும் செயலிழந்து போன போது குடும்பமே செய்வதறியாது திகைத்து நின்றது.

உறவுகள் என்று யாரும் கைகொடுக்காத நிலையில் பாரதியின் படிப்பும் தன்னம்பிக்கையுமே அந்தக்  குடும்பத் தேர் நகர அச்சாணியாக இருந்தன.

எந்நிலையிலும் மகள்களின் கல்வியில் மட்டும் எந்தக் குறையும் வந்துவிடக் கூடாது என்று உறுதியாக இருந்தார் பாரதி.

அருகில் இருந்த பெரிய நகரின் பள்ளி ஒன்றில் அக்கொன்ட்ஸ் பிரிவில் வேலை கிடைக்க அதைப் பிடித்துக் கொண்டார். மாலை வேளைகளில் மொட்டை மாடியில் டியுஷன் வகுப்புகள் எடுத்தார். பற்றாக்குறைக்கு நகைகள் அடகுக் கடையில் குடிபுகுந்தன. நண்பர்கள் கைமாற்றாக கடன் கொடுக்க பாங்கில் லோன் என்று சமாளித்தார்கள்.

பாரதி வேலை செய்த பள்ளி, அருகில் இருந்த பெருநகரத்தில் இருந்தமையால் தினம் பஸ்ஸில் ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. காலை ஏழு மணிக்கு அவர் கிளம்பினால் திரும்பி வர மாலை ஆறு மணி ஆனது. வந்ததும் டியுஷன் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க வேண்டும்.

அப்போது ஹரிணி பதினோராம் வகுப்பில் இருந்தாள். தங்கைகள் சுகீர்த்தி எட்டாம் வகுப்பிலும் வரூதினி, ப்ரீத்தி இருவரும் ஆறாம் வகுப்பிலும் படித்து வந்தனர்.

அதுவரை தங்களுக்கு எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்த அம்மா திடீரென வேலைக்கு சென்றது சிறிய குழந்தைகளுக்கு ஏற்றுக் கொள்ள சிரமாமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.