(Reading time: 19 - 38 minutes)

“வரூ தான் என்னவோ புதுசா கலர் பெயிண்ட் வந்திருக்காம். வேணும்னு ஒரே அடம். அவளுக்கு வாங்கி கொடுத்தா ப்ரீத்திக்கும் வாங்கணும். சரி ஒன்னு வாங்கி தந்தா ரெண்டு பேரும் ஷேர் செய்துக்கவும் மாட்டாங்க.”

“அக்கா வரும் போது வாங்கிட்டு வருவான்னு சொல்லிடுங்க மா. சரி மா. உங்க ப்ரின்சி திட்ட போறாங்க. ஸ்கூல் போன்ல மணிக்கணக்கில் கதை பேசிட்டு இருக்கீங்கன்னு”

“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நம்ம கஷ்டம் எல்லாம் தெரிஞ்சவங்க. உன்னை பத்தி பெருமையா சொல்வாங்க. மெரிட்ல சீட் வாங்கி மெடிசன் படிக்கிற பொண்ணுன்னு அவங்களுக்கு உன் மேல பிரியம் அதிகம்”

“சரிமா அவங்களை கேட்டதா சொல்லுங்க” போன் வைத்துவிட்டு வந்து  அங்கிருந்த பெஞ்சில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தனது சுக துக்கங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள ஹரிணி எப்போதும் விரும்ப மாட்டாள். கல்லூரியில் முக்கியமாக விடுதியில் வம்புக்கும் அரட்டைக்கும் பஞ்சமே இல்லையே. என்னை பற்றி உன்னிடம் சொன்னேன் அதனால் உன்னை பற்றி என்னிடம் சொல்லு என்பது போன்ற பேச்சுக்களை ஆரம்பத்தில் கேட்டவள் யாருடனும் அதிகமாக பேச்சு வைத்துக் கொள்ளாமல் சிறிது ஒதுங்கி இருக்கவே அதை திமிர் என்று மற்றவர் பட்டம் காட்ட அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.

ரஞ்சனிக்கு கூட தனது குடும்பம் பற்றி எதுவும் சொல்லியிருக்கவில்லை அவள். அம்மா அப்பா மூன்று தங்கைகள், அப்பா இஞ்சினீயர் அம்மா அக்கௌண்ட்ஸ் கிளார்க் என்பதை தவிர அவளைப் பற்றி வேறொன்றும் யாரும் அறிந்திருக்கவில்லை.

நேரத்தைப் பார்த்தவள் இனி சாப்பிட டைம் இல்லை என அவசரமாக கல்லூரிக்கு விரைந்தாள்.

சஸ்மன்ட் தேர்வு முடிந்து மாணவர் அனைவரும் லெக்சர் ஹாலில் இருந்து வெளியேறி வர ஹேமாமாலினி ஹரிணியை கையசைத்து நிற்கச் சொன்னாள்.

“ஹரிணி இன்னிக்கு பிரின்ஸ் நம்ம எல்லோர்க்கும் ட்ரீட் தரானாம்” ஹேமா ஆங்கிலத்தில் கூற ஹரிணி புரியாத பாவனையில் லேசாக புருவத்தை உயர்த்த அங்கே வந்த ஹேமந்த் அவசரப் படுத்தினான்.

“கர்ளஸ் கம் சூன்” என்றவன் மற்ற அனைவரையும் கான்டீனுக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.

“ஹரிணி வா வா. இங்கேயே ஏன் நின்னுட்டு இருக்க. இன்னிக்கு ஹோல் கிளாஸ்க்கும் பிரின்ஸ் ட்ரீட்” ரஞ்சனி விளக்கமாக சொல்ல கடுப்பானாள் ஹரிணி.

“எதுக்கு அவன் நமக்கு ட்ரீட் குடுக்குறானாம்” ஹரிணி கேட்க ஹேமா பிரின்ஸ் புகழ்மாலை பாடத் தொடங்கினாள்.

“ஹேமந்த்தும் ஜெய்பூர் தானே. இங்க வந்து ஜாயின் செய்ததுக்கு ட்ரீட் குடுன்னு கேட்டிருக்கான். அதுக்கு பிரின்ஸ் உனக்கு மட்டும் ட்ரீட் குடுத்தா மத்த எல்லோரும் கோவித்துக்குவாங்க. டெஸ்ட் முடிஞ்சதும் எல்லோரையும் கான்டீன் வர சொல்லுன்னு சொல்லி கான்டீன் மனேஜர்கிட்ட எல்லோருக்கும் காபி ஸ்நாக்ஸ் ரெடி பண்ண சொல்லிட்டானாம். வாங்க வாங்க போகலாம்” ஹேமா அழைக்கவும் ரஞ்சனி ஹரிணியின் கையைப் பிடித்து வா போகலாம் எனும் படி இழுத்தாள்.

“பெரிய பிரின்ஸ்ஸாம் பிரின்ஸ். பிரின்ஸ் பீன்ஸ்ன்னு சொல்லிக்கிட்டு. ஏன் அவனுக்கு பேர் இல்ல. அதான் ஐ ஆம் ஹர்ஷவர்தன்னு சொன்னானே. ரொம்பத் தான் தலையில தூக்கி வச்சுட்டு ஆடுறீங்க எல்லோரும். நம்ம நாட்டில் கிங் ரூல் எல்லாம் எப்பவோ ஒழிச்சாச்சு தெரியும்ல. எல்லோரும் இந்நாட்டு மன்னர்ன்னு அவன்கிட்ட போய் சொல்லுங்க” படபடவென பொரிந்தாள் ஹரிணி.

“ரஞ்சு அவ கிடக்குறா. நீ வாடி” அங்கே வந்த ரேவதி ஹரிணி சொன்னதைக் கேட்டு ரஞ்சனியை இழுத்துச் சென்றாள்.

ஹரிணி பேசிய அனைத்தும் அந்தப் பக்கம் தற்செயலாக வந்த ஹர்ஷவர்தன் காதில் விழுந்தது. ஹர்ஷாவிற்கு தமிழ் மிகவும் சரளமாகத் தெரியும் என்ற விஷயம் அங்கு யாருக்கும் தெரியாது.

மிகவும் ஜாலி பேர்வழியான ஹர்ஷாவிற்கோ ஹரிணியின் பேச்சில் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இருப்பினும் எதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் கான்டீன் வந்தவன்  பணத்தைக் கொடுத்துவிட்டு தான் ஏதும் சாப்பிடாமல் தனது ஹீரோ ஹோண்டா ஸ்பெலன்டரில் கடற்கரை நோக்கி விரைந்தான்.

டல்!!

கண் முன் பரந்து விரிந்த கடல் வா வா என்று அலைக்கரம் நீட்டி அழைத்தது. அலைகளில் கால் நனைய நின்று கொண்டிருந்தவன் கொதிப்பை கடல் உள்வாங்கிக் கொண்டுவிட்டது. சட்டென ஓர் அமைதி ஓர் இதம் அவனுள் பரவியது.

கடல் என்றால் ஹர்ஷாவிற்கு மிகவும் பிடிக்கும். சிறுவயதில் அன்னையிடம் கோபித்துக் கொண்டு கடற்கரைக்குத் தான் ஓடிப் போவான்.

அவன் தந்தை வந்து அவனை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து அழைத்துப் போவார். அன்னை வாசலிலே நின்றிருக்க அவரைப் பார்த்து பழிப்புக் காட்டிவிட்டு தந்தையின் தோளில் சாய்ந்து கொள்வான் சிறுவன் ஹர்ஷா.

என்ன தான் கோபித்துக் கொண்டாலும் அன்னை ஊட்டி விட்டால் தான் ஹர்ஷாவுக்கு சாப்பாடு இறங்கும். அன்னை முந்தியை பிடித்துக் கொண்டே தூங்கத் தான் அவனுக்குப் பிடிக்கும்.

அந்த நாட்களின் சுகம், இனிமை தவிர வேறொன்றும் அவனுக்கு சரியாக நினைவில் இல்லை. எட்டு வயதின் நினைவுகள் அவை.

அப்பா மட்டும் இருந்திருந்தால்......

“அப்பா ஐ மிஸ் யு” சொன்னவன் விழிகளில் தெறித்த துளிகளை அலை பத்திரமாக கொண்டு சென்று கடலின் மடியினில் சேர்ப்பித்தது.

முடிவிலியை நோக்கி ...

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1137}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.