(Reading time: 21 - 42 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 05 - மது

AT THE END OF INFINITY

Heart

டற்கரையில் கால்களில் முகம் புதைத்து அமர்ந்திருந்தான் ஹர்ஷா. அவன் பிறந்து வளர்ந்த வரலாற்றை நினைவுப்பக்கங்களில் இருந்து வாசித்தது அவன் மனம்.

ஹர்ஷாவின் தாய் சாரதா உடுப்பி மாவட்டத்தின் ஓர் கடற்கரை கிராமத்தில் அமைத்திருந்த மிஷனரி மருத்துவமனையில் நர்ஸ்சாக பணிபுரிந்து கொண்டிருந்தார். (ஹர்ஷாவும் ஹரிணியும் நிகழ்காலத்தில் நிர்மாணித்து வரும் மருத்துவமனை தான் இது)

சாரதாவின் தாய் தந்தை இருவரும் அவர் நர்சிங் படித்துக் கொண்டிருக்கும் போதே ஓர் விபத்தில் இறந்து போயினர். இருந்த சேமிப்பில் யார் தயவையும் எதிர்பார்க்காமல் படித்து முடித்தவருக்கு இந்த மிஷனரி மருத்துவனையில் வேலை இருப்பதாக தெரிய வர விண்ணப்பித்து இருந்தார். தங்கும் வசதியும் பாதுகாப்பும் இருக்கவே அந்த வேலையில் விருப்பமுடன் ஈடுபட்டு பணிபுரிந்து வந்தார்.

அன்றொரு நாள் சூறாவளிக் காற்று வீச பெரும்பாலானோர் அவரவர் வீட்டில் அடைந்திருக்க சாரதா பணியில் இருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த சாரதா விரைவிலேயே அந்தப் பக்கத்துக்கு மொழியான துளு கலந்த கொங்கணி  மொழியைக் கற்றுத் தேர்ந்தார்.

“நர்ஸ்ஸம்மா....இங்க வாங்க” வெளியில் சில மீனவர்கள் உரத்த குரலில் கூப்பிட விரைந்து வெளியில் வந்தார் சாரதா.

அவர்கள் கையில் இருந்த மீன்பிடி வலையில் ஓர் மனித உருவம் இருக்கவே திகைப்புற்றார்.

கடலில்  மீன் பிடிக்க வீசிய வலையில் ஓர் மனிதன் சிக்கினார் என்றும் லேசாக இதயம் துடிப்பது போல இருக்கவும் விரைந்து கொண்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்க உடனே அந்த மனிதரின் கழுத்தில் கை வைத்துப் பார்த்தார் சாரதா.

“சீக்கிரம் உள்ள தூக்கிட்டு வந்து பென்ச்ல கிடத்துங்க” சொன்னவர் விரைவாக சென்று மருந்துகளையும் உபகரணங்களையும் எடுத்து வந்து அவசர சிகிச்சையை தொடங்கினார்.

“பக்கத்து ஊருக்கு போன டாக்டர் காற்று மழையில் மாட்டிகிட்டார். எதற்கும் சரளா சிஸ்டர் வீட்டிற்கு போய் அவங்கள கூட்டிட்டு வாங்க” அழைத்து வந்த அந்த மீனவர்களை பணித்தார்.

அவர் அளித்த அவசர சிகிச்சை பலனளித்து அந்த மனிதர் சீராக மூச்சு விடவும் இதயத்துடிப்பை சோதித்து விட்டு ஆக்சிஜன் மாஸ்க்கைப் பொருத்தினார்.

அவர் அந்த மனிதரின் கண்களில் டார்ச் அடித்துப் பார்க்க அந்த வெளிச்சத்திற்கு கண்ணின் கண்மணி சுருங்கி விரிய ஆசுவாச பெருமூச்செறிந்தார்.

“சரளா சிஸ்டர். கடலில் மூழ்கி கொண்டிருந்தவரை காப்பற்றி கூட்டிட்டு வந்திருக்காங்க. பிழைச்சுட்டார். ஆனா நினைவு திரும்பல” தன்னை விட சீனியரான சரளா சிஸ்டர் வரவும் சாரதா அவரிடம் விவரித்தார். 

“டாக்டர் வேறே இல்லையே இந்த நேரத்திலே” என்றவர் தானும் நாடித்துடிப்பு சுவாசம் எல்லாம் பரிசோதித்து விட்டு, “கொஞ்சம் நேரம் வெயிட் செய்து பார்ப்போம்” என்றார்.

அன்றிரவு அந்த நோயாளியின் அருகிலே இருப்பதாக சாரதா கூறிவிட சரளா சிஸ்டர் அவரது வீட்டிற்கு சென்று விட்டார்.

டற்கரை ஒட்டி அமைந்த அந்த மிஷனரி மருத்துவமனை மொத்தமே பத்து படுக்கை கொண்ட சிறிய மருத்துவமனை தான். அங்கு மொத்தம் இரண்டு மருத்துவர்கள் மற்றும் மூன்று செவிலியர்கள் கூடவே இரண்டு உதவியாளர்கள் இருந்தனர்.

சாரதாவும் லில்லியும் அங்கே மருத்துவமனை வளாகத்தில் வசித்து வந்தனர். தனது துணைவியோடு அந்த வளாகத்திலேயே தலைமை மருத்துவர் வசிக்க அருகில் இருந்த பெரிய ஊரில் வசித்த இன்னொரு மருத்துவர் பெரும்பாலும் விசிடிங்காக தான் வந்து செல்வார்.

சரளா சிஸ்டர் சற்று தொலைவில் அந்த ஊரின் மையப் பகுதியில் வசித்து வந்தார். அச்சமயத்தில் லில்லி விடுப்பில் சென்றிருக்க தலைமை மருத்துவரும் அவரது மனைவியும் நகருக்கு சென்றிருந்தனர். புயல் காரணமாக அங்கேயே தங்கி விட நேர்ந்துவிட்டது.

மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருக்க லாந்தர் விளக்கின் உதவி கொண்டு மருத்துவமனையில் நோயாளியைக் கண்காணிக்கலானார் சாரதா.

இரவு முழுவதும் சிறிதும் கண்ணுறங்காமல் நோயாளியை கவனித்துக் கொண்ட சாரதா விடியல் பொழுதில் சற்றே கண்ணயர  இரவெல்லாம் பேயாட்டாம் போட்ட காற்றோ காலைச் சூரியனைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்ள கதிரவன் தனது கிரணங்களை பூமியெங்கும் அள்ளித் தெளித்தான்.

ஜன்னல் வழியே அதிலோர் ஒளிக்கீற்று அந்த அறையின் இருளை விரட்டியடிக்க கங்கணம் கட்டிக் கொண்டது போலும். மெல்ல உள்ளே படர படுக்கையில் கண்மூடியிருந்த அந்த நெடிய மனிதரின் இமைகள் அந்த ஒளியை இரவல் வாங்க எண்ணி மெல்லப் பிரிந்தன.

சற்று நேரம் இமை படபடக்க வெளிச்சம் பழகியதும் மெல்ல தலையசைத்துப் பார்க்க அவரின் அருகே வெள்ளையும் நீல பார்டரும் கொண்ட சேலை அணிந்த பெண் கவிழ்ந்து படுத்திருப்பது தெரிந்தது. மெல்ல தன் உடலை அசைக்க உடம்பு முழுவதும் அடித்துப் போட்டது போல அப்படி ஒரு வலி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.