ஹர்ஷா வளர வளர இளவரசன் என்ற சலுகையும் பாட்டியின் செல்லமும் அதிகரித்து கொண்டே வந்தது.
அந்த அரண்மனையில் ஒரே இளவரசனான ஹர்ஷாவை அனைவரும் கொண்டாடினர். அவன் கேட்காமலே அனைத்தும் அவன் முன் குவிக்கப் பட்டது. ஹர்ஷாவின் தமக்கைகளும் ‘பையா’ என்று அவனுக்கு ராக்கி கட்டி அவனை கொஞ்சி மகிழ்ந்தனர்.
முதலில் மகனுக்கு உரியவை கிடைத்தது கண்டு திருப்தி அடைந்தாலும் அங்கு அவனுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் சுக போக வாழ்க்கை முறை கண்டு துணுக்குற்றார் சாரதா.
தினம் தினம் ஹர்ஷாவிற்கு கதை போல ராஜவர்தன் கூறிய மொழிகளை நினைவுப் படுத்திக் கொண்டிருந்தார்.
“உன் அப்பாவோட கனவு நீ டாக்டர் ஆகணும்” என்று சொல்லி சொல்லி வளர்த்தார். அவனது தந்தை எப்படி இந்த அரண்மனை வாழ்க்கை எல்லாவற்றையும் துச்சமாக மதித்து சாதாரணமாக வாழ்ந்தார் என்று எடுத்துரைத்தார்.
ஒரு புறம் அன்னையின் அறிவுரை மறுபுறம் தங்க தாம்பாளத்தில் தாங்கும் மற்றவர் என ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தான் ஹர்ஷா.
வளர வளர ஹர்ஷாவிற்கு அவனது பாட்டியின் செல்லம் இன்னும் அதிகமாகிப் போனது.
“நீ ராஜகுமாரன். நீ எது ஆசைப்பட்டாலும் அது நிறைவேற்றப்படும்” என அங்கிருந்தோர் தூபம் போட ஹர்ஷவிற்கும் பிடித்தமாக இருந்தது.
எல்லோரும் அவனை வணங்குவதும் அவன் ஏவலுக்கு பணிவதும் கண்டு மகிழ்ந்து தான் போனான்.
இதை எல்லாம் கவனித்த சாரதா வளர்ந்து கொண்டிருக்கும் மகனிடம் இனி கதைகள் சொல்லி புரிய வைக்க முடியாது என்று எண்ணி ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் கண்டிப்பை மட்டுமே காட்டினார்.
“அம்மா இன்னிக்கு நான் ஹார்ஸ் ரைடிங்ல வின் செய்துட்டேன்” உற்சாகமாக மகன் வந்து சொல்ல சாரதா மகனை கொஞ்சி மகிழவில்லை. பாராட்டி உச்சி முகர வில்லை.
இளவரசன் வெற்றிபெற மற்றவர் விட்டு தருகிறார்கள் என்பதை அறிந்ததில் இருந்து அவருக்கு மகனின் வெற்றிகள் கசப்பானவையாக தான் இருந்தது.
“யோகேஷ்ஜி நீங்க இளவரசருக்கு மற்றவங்களை விட்டுக் கொடுக்க சொல்லாதீங்க. அவருக்கு தோல்வி என்றால் என்னன்னு தெரியட்டும் அவரா முயற்சி செய்து ஜெய்கட்டும்” என்று ஒரு முறை சாரதா சொல்லப் போக அது ராணியின் காதுகளுக்கு சென்று விட ஹர்ஷா காதுபட மற்ற மருமகள்களுடன் சேர்ந்து சாராதவை வசை பாடினார்.
அவனது பாட்டியும் பெரியம்மாக்களும் அம்மாவை நிந்திப்பதை ஏற்கனவே அவ்வப்போது கேட்டிருக்கிறான் என்றாலும் இப்படி நேரடியாக அன்னையை திட்டியது ஹர்ஷாவை கோபம் கொள்ள செய்தது.
அதிலும் அன்று இரவு அன்னை தனது தந்தையின் படத்தைக் கட்டிக் கொண்டு அழவும் பதின்பருவத்தில் இருந்த அவன் மனதைப் பிசைந்தது.
இந்த அரண்மனைக்கு வந்ததில் இருந்து அன்னை முகத்தில் முன்பு இருந்த மலர்ச்சியும் புன்னகையும் இல்லாமல் போனதை வெகுவாய் உணர்ந்தான்.
தன் அம்மாவை சிரிக்க வைக்க வேண்டும். முன்பு அம்மா தன்னை கொஞ்சியதைப் போன்று கொஞ்ச வேண்டும் என்று வேண்டினான்.
அவன் என்ன செய்தால் அன்னையை மகிழ்விக்க முடியும் என்று தெரியாமல் தவித்தான். பகீரத பிரயத்தனம் செய்து தான் எப்போதாவது அன்னையின் முகத்தில் மலர்ச்சியைக் காண முடிந்தது.
இந்நிலையில் மருத்துவம் படிக்க அவன் தேர்வான போது சாரதா மகனை மிகுந்த மகிழ்ச்சியோடு அணைத்துக் கொள்ளவும் ஹர்ஷா அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தனக்கு அவ்வளவாக இஷ்டம் இல்லாத போதும் அன்னை தந்தையின் கனவு என்று சொன்னதால் தான் மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்து இருந்தான்.
“பிஸ்னஸ் எல்லாம் யார் பார்த்துக் கொள்வது. ஒரே வாரிசு. நாளை நீ தானே கட்டிக் காக்க வேண்டும். டாக்டருக்கு படிக்க போனா எப்படி ” ராணி பத்மாவதி பேரனிடம் குறைபட
“தாதிஸா (பாட்டிமா) நான் பெரிய டாக்டர் ஆகணும்னு அப்பா ஆசை. அதையும் நிறைவேற்றுவேனாம். பிஸ்னஸ் எல்லாத்தையும் பத்திரமா பார்த்துபேனாம். ஹர்ஷவர்தன் மல்டிடேலன்டட்” பாட்டியை கொஞ்சிக் கொண்டு பேரன் சொல்ல பத்மாவதி உருகித் தான் போனார்.
தில்லியில் மருத்துவ கல்லூரியில் ஹர்ஷா சேர்ந்ததும் வாரவாரம் ஜெய்பூர் வந்து போய்க்கொண்டிருந்தான்.
ஹர்ஷாவின் பெரியப்பாக்கள் இருவரும் அப்போது அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருக்க அங்கே தில்லியில் அவர்களுக்கு பெரிய பங்களாக்கள் இருக்க மகன் ஹாஸ்டலில் வசிக்காமல் சகல சுகபோகங்களோடு அங்கே வசிக்கும் படி நேர்ந்ததும் இல்லாமல் நண்பர்களை அங்கு அழைத்து வந்து விருந்து ஆட்டம் என்று இருப்பதை அறிந்த சாரதா மிகுந்த கவலை கொண்டார்.