(Reading time: 21 - 42 minutes)

அடிப்படையில் நல்ல குணங்களை கொண்டவன் தான் தனது மகன் என்றாலும் இந்த வயதில் நல்ல நண்பர்கள், ஆரோக்கியமான சூழ்நிலை இவை முக்கியம் அல்லவா.

மேலும் குடும்பத்தினரை விட்டு தூரத்தில் ஹர்ஷாவை வைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். தனியாக அவன் இருந்தால் தான் சுயமாக அவனது தேவைகளை கவனித்துக் கொள்ள பழகுவான். வாழ்க்கையின் மற்ற பரிமாணங்களை உணருவான் என முடிவு செய்த சாரதா மகனை சென்னையில் படிக்க அனுப்ப திட்டமிட்டார்.

“ஹரி அம்மா ஒன்னு சொன்னா கேப்பியா” ஓர் வார இறுதியில் மகனை அழைத்துப் பேசினார் சாரதா.

“என்ன மா சொல்லுங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன் தானே” அன்னையைக் கட்டிக் கொண்டு கொஞ்சினான்.

“ஹரி நீ மெட்ராஸ்ல மெடிகல் காலேஜ்க்கு டிரான்ஸ்பர் வாங்கி அங்க போய் படி” சாரதா மெதுவாக சொல்லவும் முதலில் சற்று திகைத்தான் ஹர்ஷா.

“சரிம்மா நாம ரெண்டு பேரும் மெட்ராஸ் போகலாம்” சந்தோஷமாய் சொல்லவும் சாரதா மகனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்தார்.

“அம்மா அங்க வரலை. நீ அங்க ஹாஸ்டலில் இருந்து தான் படிக்கணும். அங்க எப்போ லீவ் தருவாங்களோ அப்போ தான் இங்க வரணும்” சற்று கண்டிப்பாய் சாரதா சொல்ல மகன் சிறு குழந்தை போல அவர் மடியில் படுத்துக்கொண்டு கட்டிக்கொண்டான்.

“நான் எப்படி மா உங்களை பிரிஞ்சு இருப்பேன்” ஹர்ஷாவின் குரல் கம்மி ஒலித்தது.

மகனின் செயல் தாய் மனதைக் கலங்கடிக்க தன்னை திடப்படுத்திக் கொண்டு மகனது முகத்தை தன் புறம் திருப்பினார்.

“அம்மாக்காக இதை செய்யமாட்டியா” சாரதா கேட்க அன்னையின் முகத்தைப் பார்த்தவன் உடனே “சரிம்மா உங்களுக்காக மெட்ராஸ் போய் படிக்கிறேன்” என்று கூறினான்.

தான் இல்லாத போது ஏதோ நடந்திருக்க வேண்டும். பாட்டி ஏதும் திட்டினாரோ அப்படியே திட்டி இருந்தாலும் என்கிட்டே ஏதும் சொல்ல மாட்டாங்க. பாட்டி பெரியம்மா எல்லோருக்கும் மரியாதை தரனும்ன்னு தான் சொல்லுவாங்க என்று மனதில் நினைத்த ஹர்ஷா அன்னையிடம் சம்மதம் தெரிவித்தான்.

சென்னைக்கு டிரான்ஸ்பர் என்றதும் பத்மாவதி ஏன் எதற்கு என்று எதிர்ப்பு தெரிவிக்க தனக்கு அங்கே படிக்க ஆசை என்று ஹர்ஷா சமாளித்தான்.

பேரன் ஆசைப்பட்டதை நிறைவேற்றாமல் போய்விடுவாரா என்ன. உடனேயே மாற்றலுக்கு ஏற்பாடு செய்தனர்.

அன்னையின் ஆசைப்படி சென்னையின் தலைசிறந்த மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது. ஹாஸ்டல் ரூமில் அவனை விட்டுவிட்டு அன்றே ஜெய்பூர் கிளம்பிவிட்டிருந்தார் சாரதா.

ஆனால் ஆண்கள் விடுதில் ஜெய்பூரைச் சேர்ந்த ஒரு சீனியர் மாணவன் ஹர்ஷாவை அடையாளம் கண்டுகொள்ள அவன் ராஜகுமாரன் என்ற விஷயம் வெகுவேகமாய் பரவி விட்டிருந்தது.

தன்னை எல்லோரும் இங்கேயும் பிரின்ஸ் பிரின்ஸ் என்று கொண்டாட ஹர்ஷா உண்மையில் மிகவும் மகிழ்ந்து தான் போனான். அவனையும் அறியாமல் தான் ராஜகுமாரன் என்ற கர்வம் மணிமகுடமாய் அவன் சிரசில் அமர்ந்து கொள்ள அதை எட்டி உதைத்திருந்தாள் ஹரிணி.

மீண்டும் ஓர் கடல் அலை வந்து மோத ஹரிணி மீது மனதில் துளிர்த்த கோபத்தை அந்த அலையினாலும் குளிர்விக்க முடியவில்லை.

“ரெண்டே நிமிஷத்தில் நல்ல பொண்ணுன்னு அம்மாகிட்ட பேர் வாங்கிட்டா. ராட்சசி... ஏன் நான் ட்ரீட் குடுத்தா சாப்பிட மட்டாளாமா. பிரின்ஸ் பீன்ஸ்ன்னு சொல்றா. இரு ஒரு நாள் உன் வாயாலேயே என்னை பிரின்ஸ் ஹர்ஷவர்தன்ன்னு தி கிரேட்ன்னு சொல்ல வைக்கிறேன்” அவன் சபதம் செய்ய அலைகள் ஆகட்டும் என்று ஆர்பரித்தன. வான்மழையும் தங்கள் பங்கிற்கு சித்திக்கட்டும் என்று ஆசி வழங்கின. ஆனால் அந்த சபதம் நிறைவேற பதினாறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று அவன் அப்போது நினைத்திருக்கவில்லை தான்.

முடிவிலியை நோக்கி ...

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1137}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.