(Reading time: 19 - 37 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 06 - மது

AT THE END OF INFINITY

Heart

ன்று இரவு தனது அறையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருட்டை வெறித்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.

“ஆனாலும் நீ ப்ரின்ஸ அப்படி கேலி செய்திருக்க கூடாது ஹரிணி” ரஞ்சனி மெதுவான குரலில் சொன்னாள்.

ஹரிணி ஏதும் பதில் உரைக்கவில்லை. அவள் முகத்தைப் பார்த்த ரஞ்சனிக்கு அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்றும் புரியவில்லை.

ஹரிணி தனக்குள்ளேயே ஒரு பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.

“அம்மா சொன்ன மாதிரி அவன் உண்மையில் நல்லவனாக இருக்கலாமே. அவன் அம்மா கூட எவ்வளவு கம்பீரமா சாந்தமா இருந்தாங்க. நான் ஏன் அப்படி அவனை சொன்னேன்.. நான் செய்தது தப்பு இல்லையா”

“இல்லை இல்லை நான் செய்தது தப்பு ஒன்னும் இல்லை. அவனுக்கு எவ்வளவு திமிரு. அவன் பணக்காரன் ராஜ பரம்பரைன்னு பெருமை காட்ட தான் ட்ரீட் குடுத்தான். இதென்ன அவனா சுயமா உழைச்சு சம்பாதிச்ச பணமா”

“சரி அவன் திமிரு பிடிச்சவனாவே இருக்கட்டும். எனக்கு பிடிக்கலைனா நான் ஒதுங்கி போயிருக்க வேண்டியது தானே”

“நான் பேசாம தான் போயிருப்பேன். இந்த ரஞ்சனியும் ஹேமந்த்தும் தான் என்னையும் வா வான்னு கூப்பிட்டு அப்படி பேச வச்சுட்டாங்க”

“நாளைக்கு அவன்கிட்ட ஸாரி கேட்கலாமா”

“ச்சே ச்சே நான் எதுக்கு ஸாரி கேட்கணும். நான் என்ன தப்பு பண்ணேன். என் மனசில் பட்டதை பட்டுன்னு சொன்னேன்”

“மத்தவங்களை அது ஹர்ட் செய்யுமேன்னு கொஞ்சம் யோசிச்சு பார்க்க வேண்டாமா”

“அவனுக்கு தான் நான் சொன்னது புரிஞ்சிருக்காதே. எப்படியும் நான் ஒன்னும் தப்பா சொல்லலையே. பிரின்ஸ் பீன்ஸ்ன்னு படிக்க வந்த இடத்தில என்ன பெருமை வேண்டி கிடக்கு. யாராச்சும் ஒருத்தராவது அவனுக்கு குட்டு வைக்க வேண்டாம்”

“அவன் அம்மா தமிழ் பேசினாங்களே. அவனுக்கும் தமிழ் தெரியுமோ என்னவோ”

“அப்போ ரொம்ப நல்லதா போச்சு.மத்தவங்க தூக்கி வச்சு ஆடினா அப்படி எல்லாம் சொல்லாதீங்கன்னு அவன் சொல்லிருக்கணும். அதை விட்டுட்டு கெத்து காட்டுகிறானாம்”

நீண்ட நேரம் இப்படி அவளுக்குள்ளேயே வாதம் செய்தவள் அன்று இரவு உணவு கூட அருந்தாமல் உறங்கிப் போனாள்.

ஹர்ஷவர்தனோ அவன் அறையில் கையில் மொபைல் பேசியுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியாவில் மொபைல் போன் அறிமுகம் ஆகி இருந்தது. ஹர்ஷாவின் கைகளில் மொபைல் இருந்தது வியப்பேதும் இல்லை. ராஜகுமாரன் தொலைவில் படிக்க செல்கிறான் என்றதுமே அவனது பாட்டி முதலில் அவனுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுத்திருந்தார்.

சற்று முன் அவனது அன்னையிடம் அனைத்தையும் கொட்டித் தீர்த்திருந்தான் ஹர்ஷா.

“என்னை பிரின்ஸ் பீன்ஸ்ன்னு சொல்றாமா” குரல் பிசிறியது.

ஹர்ஷா கூறியதும் சாரதாவின் கண்கள் முன் ஹரிணி வந்து போனாள். அப்போதே அவரைக் கவர்ந்த பெண் அல்லவா அவள். இப்போது அவரது பார்வையில் இன்னும் அருமையாகிப் போனாள்.

“அத்தனை பேர் அவனை பிரின்ஸ்ன்னு கொண்டாட அவள் மட்டும் அலட்சியம் செய்து போயிருக்கிறாள். அவள் ஹரியோட இருக்கும் பட்சத்தில் ஹரி அவனுக்குள் இருக்கும் உண்மையான அடையாளத்தை உணர்ந்து கொள்வான்” சாரதா மனதில் ஏனோ தானாக இந்த எண்ணம் உதித்தது.

மகனை அப்போது சமாதனம் செய்ய வேண்டியிருந்ததே! அவன் கொஞ்சம் உடைந்து தான் போயிருந்தான். இதற்கு போய் இப்படி உணர்ச்சிவசப்பட்டால் என்னாவது. அவரது மனம் பெரிதும் கலங்கியது.

“ஹரி கண்ணா...அம்மா என்னிக்காவது உன்னை பிரின்ஸ்ன்னு கூப்பிட்டு இருக்கேனா”

சாரதா இப்படி கேட்கவும் ஹர்ஷா ஒன்றும் புரியாமல் விழித்தான்.

“இல்லையேமா... ஹரி ஹரி கண்ணா ஹரி செல்லம் இப்படி தான் கூப்பிடுவீங்க” குழந்தையாய் மகன் குழைந்தான்.

தாய் மனம் அவனை அக்கணம் அள்ளி மடியோடு அரவணைக்க துடித்தது. இருப்பினும் தன் உணர்வுகளுக்கு கடிவாளம் இட்டார். அவனை தற்போது சுட்ட பொன் ஆக்க வேண்டும்.  வைரத்திற்கு பட்டை தீட்ட வேண்டும். இதுவே அவர் மனதில் வைராக்கியமாக இருந்தது.

சாரதா காரணமில்லாமல் இவ்வாறு கலங்கவில்லை. அந்த அரண்மனை வாழ்வில் ராஜாகுடும்பத்தினர் மற்றவரை நடத்திய விதம் மற்றும் அவர் அங்கே அறிந்த வசதி படைத்த பிள்ளைகளின் வளர்ப்பு எல்லாம் சேர்த்து தான் அவரை அச்சுறுத்தியது.

தன் மகன் பிறப்பால் அல்லாது, பரம்பரையின் பெருமையால் அல்லாது தனது நற்செயல்களால் நன்மதிப்பை பெற்று உலகத்தினரால் முடிசூட்டப் பட வேண்டும் என்றே பெற்றவள் உள்ளம் ஆசை கொண்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.