(Reading time: 19 - 37 minutes)

ஏனோ ஹரிணியின் எண்ண அலைகள் தன்னுடையதை ஒத்து இருப்பதாக சாரதாவின் உள்ளுணர்வு சொன்னது.

“அம்மாக்கு நீ எப்போவும் ஹரி தானே. அது மாதிரி தான் ஹரிணி அவளுக்கு நீ எப்போவும் க்ளாஸ்மேட் பிரண்டா இருக்கணும்னு நினைத்திருப்பா” சாரதா சொல்லவும் ஹர்ஷாவால் அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

இருப்பினும் அன்னையின் சொல்லுக்கு அவன் எதிர்வாதம் செய்தானில்லை. அவனுக்கு அவன் அம்மா தான் எல்லாம். அவன் அன்னையின் சொல்லை எப்போதும் மறுத்துப் பேசியதில்லை. அவன் அம்மாவிற்கு ஹரிணியைப் பிடித்துப் போனதை அவனும் அறிந்திருந்தான் தானே. அதனாலும் அவள் மேல் சற்று பொறாமை கொண்டான் தான்.

“ஹ்ம்ம்” முனங்கினான் ஹர்ஷா.

தாய் அறியாத சூலா. சாரதா மகனின் மனதைப் புரிந்து கொண்டார்.

“ஹரி கண்ணா. நீ நல்லா படிச்சு நல்ல டாக்டரா வரணும். அது மட்டும் தான் உன்னோட லட்சியமா இருக்கணும். உன் அப்பாவோட கனவை நீ நிறைவேற்றணும். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் குழம்ப கூடாது. யார் என்ன சொன்னா என்ன” வேறுவிதமாய் அவனை தேற்ற முயன்றார்.

“சரி மா” உதடுகள் சொன்னாலும் மனதில் இன்னும் தீவிரமாக உறுதி கொண்டான். அவள் வாயால் பிரின்ஸ் ஹர்ஷவர்தன்ன்னு சொல்ல வைக்கணும். அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்வேன் நான்.

அன்னையிடம் பேசி முடித்தவன் சிறிது நேரம் நடைபயின்று அயர்ந்து உறங்கிப் போனான்.

காலம் வேகமாக  உருண்டோட ஹரிணி ஹர்ஷவர்தன் இருவரிடத்திலும் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.

அனாடமி தேர்வில் ஹர்ஷா முதல் மதிப்பெண் பெற்ற போது ஹரிணியின் ஒற்றைப் புருவம் உயர்ந்து வியப்பைக் காட்டியதை ஹர்ஷா தற்செயலாகப் பார்த்து விட்டான்.

அவ்வளவு தான். அவன் மனம் உள்ளுக்குள் ப்ரேக் டான்ஸ் ஆடியது. அவள் ஜஸ்ட் பாஸ் மதிப்பெண் தான் பெற்றிருந்தாள். அவனுக்குள் அலட்சியம் குடிபுகுந்தது.

ஹர்ஷா கல்லூரிக்கே பிரின்ஸ் ஆகிப் போனான். அந்த கல்லூரி வாட்ச்மேன், கான்டீன் டீ மாஸ்டர் முதல் சீனியர் மாணவர்கள் வரை எல்லோராலும் பிரின்ஸ் என்றே அழைக்கப்பட்டான்.

“ஹர்ஷவர்தன்” நீட்டி முழக்கி தான் அழைத்தாள் ஹரிணி. அவன் பெயரை அவனுக்கு அடிக்கடி நினைவூட்டினாள்.

இருவரும் முறைத்துக் கொண்டிருந்தாலும் அவனின் திறமையை அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

அன்று அனாடமி வகுப்பில் இதயம் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். கேடாவர் இதயத்தை எவ்வாறு டிசக்ஷன் செய்வது என்று கற்பித்தார்.

அந்த டேபிளில் இருந்த நால்வரும் இதயத்தைப் பார்த்ததும் சிறிது நேரம் மௌனமாகினர்.

“ஒரு காலத்தில் இந்த இதயம் துடிச்சிட்டு இருந்திருக்கும் இல்லையா” ஹேமந்த் சொல்லவும் எல்லோருக்குமே ஒரு மாதிரி ஆகி விட்டது.

“இந்த இதயத்துக்குள்ள எத்தனை பொண்ணுங்க பேர் எழுதியிருக்குன்னு திறந்து பார்த்திரலாம்” ஹர்ஷா இலகுவாக சொல்லவும் ஹரிணியும் உள்ளூர அவனை மெச்ச தான் செய்தாள்.

இருந்தாலும் அவன் ஒன்று சொல்லிவிட்டால் அதற்கு எதிர்ப்பாய் ஏதாவது தெரிவிக்க வேண்டும் இல்லையா.

“எல்லோரும் ஒன்னும் ப்ளர்ட்டா (FLIRT) இருக்க மாட்டாங்க. ஒரே பெண்ணை மனசில் நினச்சு கடைசி மூச்சு வரை வாழ்ந்திருக்கலாம் இல்லையா” வேண்டுமென்றே ப்ளர்ட் என்ற வார்த்தையை அழுத்திச் சொன்னாள் ஹரிணி.

கடந்த ஆறு மாதமாக அவளும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள். எல்லோரிடமும் கலகலப்பாய் உற்சாகமாய் பேசும் ஹர்ஷவர்தன் வகுப்புப் பெண்களிடத்திலும் இலகுவாக பேசினான்.

அவன் வடக்கே வளர்ந்தவன் ஆகையால் அவன் எதேச்சையாக கைக்குலுக்குவதைக் கூட  பெண்கள் சீரியசாக எடுத்துக் கொண்டு கற்பனைகளில் மிதந்து கொண்டிருந்தனர்.

ஒரு முறை ரஞ்சனியும் அப்படி பிதற்றவே ஹரிணி இன்னும் கடுப்பானாள்.

அந்தக் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் மாதம் ஒரு முறை அருகில் இருந்த கிராமங்களுக்கு சென்று மெடிகல் கேம்ப் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பொதுவாக மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்று இந்த காம்ப் நடத்தப்பட்டது.

ஹர்ஷா அங்கு சேரும் முன்பிருந்தே ஹரிணி இரண்டு மாதங்களாக அந்த கேம்ப் சென்று தன்னால் ஆன உதவிகளை சீனியர் மாணவர்களுக்குப் புரிந்தாள்.

“கிடைக்கிறதே ஒரு சண்டே. நாம பர்ஸ்ட இயர். நமக்கு அங்க என்ன தெரியும்”

“ஒரே போர்ன்னு ஷைலா அக்கா சொல்லிருக்காங்க”

“மெஸ்ல சண்டே மட்டும் தான் நான் வெஜ் போடுவாங்க. நான் மிஸ் செய்ய மாட்டேன்பா” சங்கீதா, ரேவதி இன்னும் மற்றவர்களும் சொல்ல ரஞ்சனிக்கும் செல்ல விருப்பமில்லாமல் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.