(Reading time: 19 - 37 minutes)

பெண்கள் அனைவரும் மண்ணில் நடமாடும் தேவதைகளோ என்று எண்ணும் வண்ணம் வண்ண வண்ண பட்டுப் புடவைகள் டிசைனர் சேலைகள் என்று ஜொலித்தனர்.

“நிஜமாவே நம்ம கிளாஸ் பொண்ணுங்க தானா” முதாலம் ஆண்டு மாணவர்கள் தான் மிகுந்த ஆச்சரியம் கொண்டனர்.

மற்ற மாணவர்கள் அனைவரும் பான்ட்ஸ் ஷர்ட் என்றிருக்க ஹர்ஷா தன் உயரத்திற்கு கம்பீரமாக குர்தா பைஜாமா அணிந்திருந்தான்.

ஆடம்பரமாக இல்லாமல் எளிமையான சில்க் காட்டன் தான் என்றாலும் அவனது தோற்றமும் நிமிர்வும் அவன் ராஜகுமாரன் தான் என்று சொல்லாமல் சொன்னது.

“நமக்கு ஜூனியர் பையனா வந்து சேர்ந்துட்டான். ஹ்ம்ம் சைட் கூட அடிக்க முடியாது” சீனியர் மாணவியர் சிலர் கூறியது அவன் செவிகளில் விழ மிகுந்த கர்வத்தோடு வலம் வந்தான்.

ஆடிடோரியம் உள்ளே இசை மழை பொழிய வெளியே வான் மழை நானும் இணைத்து கொள்கிறேன் என்று பொழிய அந்த இனிய மாலைப் பொழுதை மிகவும் ரசித்தபடியே வெளியே வந்தான் ஹர்ஷவர்தன்.

வண்ண விளக்குகள் ஒளிர அதில் ஜொலித்த மழைத்துளிகளை அணுஅணுவாய் ரசித்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹரிணி.

அவளைப் பார்த்தவன் ஒரு கணம் இமை தட்டவும் மறந்தான். அன்று புடவை அணிந்திருந்தாள். அடர் பச்சை நிறத்தில் சிவப்பு ஜரிகை கரையிட்ட காட்டன் புடவை.

தலை முடியை நுனியில் லேசாக பின்னலிட்டு விட்டிருந்தாள். பெயருக்கு ஒரு ஜான் அளவு மல்லிகையை சொருகி இருந்தாள். ரஞ்சனியின் வற்புறுத்தலின் பேரில். ஒப்பனைகள் ஏதும் செய்திருக்கவில்லை அவள்.

“அம்மா” அவன் உதடுகள் உச்சரித்தன. ஏதோ ஒர் உணர்வு உந்த  ஹரிணி திரும்பிப் பார்க்க அங்கே ஹர்ஷா நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் அவள் முதல் முறையாக சிநேகமாகப் புன்னகைத்தாள். அவள் தான் மழையைக் கண்டால் மழலை ஆகி விடுவாளே.

அவளை நோக்கி மெல்ல நடந்தவன் மூளையில் அவள் ஹரிணி என்று உரைத்தது.

அவள் அருகில் வந்தவன் அவளை மேலும் கீழுமாகப் பார்த்தான். அவளும் அவனைத் தான் பார்த்தாள். அந்தப் பார்வையில் அவன் தோற்றத்தை கண்டு மயக்கம் துளியும் இல்லை. ஓர் லயிப்பு ஓர் ஆச்சரியம் .. ஹும்கும் மருந்துக்கும் இல்லை.

அன்று முதல் முறை கேம்ப் போன போது அவள் விழிகளில் அவனுக்கான ஆச்சரியத்தைப் பார்த்திருக்கிறான். அன்றும் ஹார்ட் டிசக்ஷன் போது அவள் மெச்சுதலாய் பார்த்தாள்.

“அம்மா உன்னை பிரின்ஸ் ன்னு எப்போவாவது கூப்பிட்டு இருக்கேனா” அன்னையின் மொழிகள் அவன் செவிகளில் ஒலித்தன.

“இவள் மற்றவர்களை விட வித்தியாசமானவள். எல்லோரும் பட்டு டிசைனர் என்று அணிந்திருக்க இவள் சாதரண காட்டன் புடவை அணிந்து கொண்டு நிற்கிறாள். அதுவே என்னை இவளிடம் இழுத்து வந்திருக்கிறது என்று இவளுக்கு தெரியுமா. இதே புடவை இதே கலர் இதே டிசைன். காற்றில் பறக்கும் இந்த முந்தானை, சிறு பிராயத்தில் கண்ணாமூச்சி விளையாட்டில் நான் ஒளிந்து கொள்ளும் ரகசிய இடமாக இருந்திருக்கிறது. நான் விளையாடி களைத்து வருகையில் என் வேர்வை துடைத்து விட்டிருக்கிறது, குளிரில் நான் லேசாக நடுக்கம் கொள்ள எனக்கு கதகதப்பை கொடுத்திருக்கிறது, கூட்டத்தில் நான் தொலைந்து போகாமல் இருக்க என்னைப் பிடித்து வைத்திருக்கும் நங்கூரமாய் இருந்திருக்கிறது. இவளுக்குத் தெரியுமா என் அம்மாவின் புடவைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த புடவை இது. எப்படி இவளுக்குத் தெரிந்தது. அதையே கட்டிக் கொண்டு என் கண் முன் நிற்கிறாள்”

அவன் மனதில் ஓடிய எண்ணங்களை அவன் முகம் நவரச பாவனைகளாய் ஒளிபரப்ப இப்போது அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“ஹாய் ஹாரர்ணி” வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தான். முதலில் கவனிக்காதவள் பின் அவன் சொன்னதை உணர்ந்து முறைத்தாள்.

“சரியா தான் பேர் வச்சிருக்கேன். ஹாரர்ணி..ஹஹா ஹாஹா” அவள் ஹாரர் மூவியில் வரும் பேய் போல இருக்கிறாள் என்று சொல்லி கேலி செய்தான்.

தான் சாதாரண காட்டன் சாரி கட்டியிருப்பதால் தான்  தன்னை கேலி செய்கிறான் என்று எண்ணியவள் அவன் மேல் இன்னும் அதிகமாய் ஆத்திரம் கொண்டாள்.

அவனை மிகவும் அலட்சியமாக ஓர் பார்வை பார்த்தவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு விருட்டென சென்று விட்டிருந்தாள்.

ஏனோ அவள் சேலையில் இருந்த அந்த தோற்றம் அவன் மனதில் ஆழப் பதிந்து போனது.

தேர்வுக்கான ஸ்டடி லீவ் முன் கடைசி ப்ராக்டிக்கல் வகுப்பு அன்று  மதியம் நடந்தது.

“எல்லோரும் அவரவர் டேபிள் மேட்ஸ் ப்ளட் க்ரூப் டெஸ்ட் செய்ய போறீங்க” பேராசிரியர் ரத்தத்தின் க்ரூப் பற்றியும் அதை எப்படி பிரித்து கண்டறிவது என்பதையும் செயல் விளக்கம் அளித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.