(Reading time: 21 - 42 minutes)

அவரின் அசைவில் சாரதா விழித்துக் கொண்டார். அவர் நிமிர்ந்து பார்க்க அந்நேரம் ஜன்னலின் வழியே வந்த கதிரவனின் ஒளி அந்த முகத்தாமரையை அழகாய் ஒளிரச் செய்தது.

‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ இந்த வரி தான் பொருத்தமாய் இருக்கும் சாரதாவின் முகத்தைக் கண்ட அம்மனிதரின் உணர்வுகளை விவரிக்க.

சாரதா உடனேயே தன்னை சீர் செய்து கொண்டு கொங்கணியில் யார் என்ன என்று விவரம் கேட்டார்.

“வாட்” என்று அவர் கேட்க வெளியூர் ஆள் போல என்று புரிந்து கொண்ட சாரதா அவரிடம் ஆங்கிலத்தில் கேட்டார்.

“என் பெயர் ராஜ். சர்பிங் போக கிளம்பியது ஞாபகம் இருக்கு. கடல் அலை பெருசா வந்து சுழற்றி அடிச்சது. பாலன்ஸ் தப்பி மூழ்கினேன். நீந்த முயற்சி செய்ய காலில் ஏதோ சிக்கி தடுக்க மயங்கிட்டேன் போல. அப்புறம் என்ன நடந்தது என்று தெரியல” ஆங்கிலத்தில் ராஜ் சொல்லவும் அவர் அங்கு வந்து சேர்ந்த விதம் எல்லாம் சாரதா விவரித்தார்.

“நீங்க யாரு உங்க ஊர் என்ன” சாரதா கேட்க ராஜ் அக்கணத்தில் தனது அடையாளத்தை வெளிபடுத்த தயக்கம் கொண்டார்.

“ஐ கான்ட் ரிமெம்பர்” என்று கண்ணைக் கசக்கிக் கொண்டார். இது நடிப்பு தான் என்று அவள் கண்டுகொண்டு விடக் கூடாது என்று மனதிற்குள் வேண்டினார்.

“பரவாயில்லை. அதிர்ச்சியில் இப்படி ஏற்படுவது உண்டு. நீங்க கொஞ்சம் நேரம் ஓய்வு எடுங்க. நான் சாப்பிட ஏதேனும் கொண்டு வரேன். டாக்டர் மதியம் வந்திருவாருன்னு நினைக்கிறேன்” சாரதாவின் கனிவு நிறைந்த பேச்சு ராஜின் மனதை இன்னும் அவர் பால் ஈர்த்தது.

மதியம் தலைமை மருத்துவர் வந்து பரிசோதித்து நகரின் மருத்துவமனையில் சில டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றார்.

“நீங்க ராஜ்ன்னு மட்டும் சொல்றீங்க. மத்த ஏதும் நியாபகம் இல்லைன்னு சொல்றீங்க. உங்களுக்கு டெஸ்ட் எடுக்க யார் பொறுப்பேற்று கொள்வது” மருத்துவர் வினவ ராஜ் சாரதாவை ஏறிட்டார்.

ஏனோ அந்தப் பார்வை சாரதாவை ஏதோ செய்தது.

“எனது பொறுப்பை நீ ஏற்றுக் கொள்வாயா” என்று சொல்லாமல் சொல்லியது அந்தப் பார்வை.

“டாக்டர், நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்” உடனே சொல்லிவிட்டிருந்தார் சாரதா.

நகரில் சென்று டெஸ்ட் அனைத்தையும் எடுத்து முடித்ததும் ரிபோர்ட்ஸ் எல்லாம் நார்மல் என்று வரவே அம்னீசியா என்று முடிவுக்கு வந்தனர்.

“விரைவில் நினைவு திரும்பும். கவலை பட வேண்டாம்” சாரதா தைரியம் சொன்னார்.

ஓர் ஓரத்தில் குற்றஉணர்வு ஏற்பட்டாலும் சாராதாவின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே ராஜ்க்கு முக்கியமாகப் பட்டது.

நாட்கள் செல்ல இன்னும் நினைவு திரும்பாத நிலையில் தான் அங்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்று ராஜ் தெரிவிக்க சரளா சிஸ்டர் அவரது கணவர் பணிபுரியும் கம்பனியில் கணக்கு எழுதும் வேலை ஒன்று காலியாக உள்ளது என்றும் தற்சமயத்திற்கு அதைப் பார்க்கலாம் என்றும் யோசனை கூற ராஜ் அவருக்கு மனதார நன்றி உரைத்தார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சரளா சிஸ்டர் சொன்ன வேலையில் சேர்ந்தார் ராஜ். அங்கேயே அருகில் ஓர் ரூம் வாடகைக்கு எடுத்து தங்கினார்.

‘காதல்’

இந்த ஒற்றைச் சொல் தான் ராஜவம்ச வாரிசான ராஜவர்தன் சிங் ராத்தோரை ஒரு சாதாரண கணக்கர் வேலையை செய்ய வைத்தது. மாட மாளிகையில் தங்கியவரை ஓர் சிறிய அறைக்குள் அடக்கி வைத்தது. வெறும் உல்லாசப் பயணங்களில் பொழுது போக்கிக் கொண்டிருந்தவரை ஓய்வு நேரத்தில் மருத்துவமனையில் உதவிகள் புரிய உந்தியது.

அரண்மனை சுகத்தில் திளைத்து வந்தவருக்கு உண்மையான சந்தோஷங்களை சாரதா அறிமுகம் செய்து வைத்தார்.

மருத்துவமனையில் உதவிகள் புரியும் போது நோயாளிகள் மனதார வாழ்த்துவது, கடற்கரை ஓரம் அமர்ந்து மாலை வேளைகளில் சாரதாவுடன் கதைப்பது என்று இந்த அனுபவத்தை ராஜ் வாழ்நாள் முழுக்க வேண்டும் என்று யாசித்தார்.

வேலையில் சேர்ந்த அன்றே அவரது அரண்மனையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜஸ்வந்த்திற்கு தகவல் சொல்லியிருந்தார். சில மாதம் வெளிநாட்டில் உல்லாசமாய் கழிக்க போவதாய்.

இளையவரான ராஜ்க்கு சற்றே செல்லம் அதிகம். பிஸ்னஸ் அனைத்தும் தந்தை மற்றும் அண்ணன்மார்கள் கவனித்துக் கொள்ள தாயும் அண்ணிகளும் மற்ற பொறுப்புகளை ஏற்றிருக்க ராஜ்வர்தனுக்கு பெரிதாக எந்த பொறுப்புகளும் இல்லாமல் போயிற்று. சில காலம் சுற்றித் திறந்து உல்லாசமாக இருக்கட்டும் என்று அவரது குடும்பத்தினரும் அனுமதித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.