(Reading time: 21 - 42 minutes)

சாரதா மகனிடம் எப்போதும் தமிழில் தான் பேசுவார். ஹர்ஷா முதன்முதலில் எழுத கற்றுக்கொண்டதே தமிழ் அகரம் தான். ராஜ் ஓரளவு தமிழ் கற்றுக் கொண்டுவிட்டிருந்ததால் வீட்டில் எப்போதும் தமிழ் தான் பேசுவது. மற்றபடி தந்தை மகன் கொங்கணியிலும் ஆங்கிலத்திலும் உரையாடிக்கொள்வர்.

முழுநிலவின் போது கடற்கரை செல்வர் மூவரும். அங்கு சாரதா மகனை மடியில் அமர்த்தி அவனுக்கு நிலாச்சோறு ஊட்டும் போது அதைக் கண்டு பூரித்துப் போவார்.

“என் மகன் எவ்வளவு பாக்கியசாலி. அவன் அம்மா மடியில் ஒய்யாரமாய் உட்கார்ந்து கொண்டு நிலாச்சோறு  சாப்பிடுகிறான். மாளிகையில் எனக்கு கேட்டதெல்லாம் கிடைத்த போதும் கிடைக்காத  இன்பம் இது” உணர்ச்சி பொங்க ராஜ் சொல்லும் போது சாரதாவும் நெகிழ்ந்து போவார்.

“என் அப்பாவிற்கு என்ன தான் பாசம் இருந்தாலும் இப்படி என்னை எப்போவாவது உப்பு மூட்டை தூக்கி வைத்திருப்பாரா” மகனை கொஞ்சி மகிழ்வார்.

“பணம். அது ஒரு போதை சாரூ. அது தான் இன்பம்ன்னு ஒரு மாயையில் இருக்கிறோம். உண்மையான சந்தோஷம் அன்பிலும் கருணையிலும் மற்றவருக்கு உதவி செய்வதிலும் தான் இருக்கு” மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறு சிறு உதவிகள் செய்யும் போது ராஜ் சொல்வதை ஹர்ஷாவும் கேட்டுக் கொண்டிருப்பான்.

மருத்துவமனை சிறு வயதில் இருந்தே ஹர்ஷாவிற்கு பழக்கமான ஒன்று. அவனது குறும்புகளும் சேட்டைகளும் அங்கிருந்த அனைவரையும் தங்கள் வலி பிணி மறந்து மகிழச் செய்தது.

ன்பது ஆண்டுகள் நீடித்த அழகிய பொற்காலம் ஒரே நாளில் போர்களமாய் மாறிப் போனது விதியின் சதி என்று சொல்வதா.

அன்று கணக்கு வழக்குகள் ஒப்படைக்க தாமதம் ஆக ஓரளவு இருட்டிய வேளையில் பணியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிய ராஜ் வழியில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் தடுமாறி விழ அருகில் இருந்த கல் மீது அவரது தலை மோதியது.

அப்போதைக்கு சிறிது ரத்தம் கசிய அதை துடைத்து விட்டபடியே வீட்டிற்கு வந்தவர் மனைவியிடம் அதைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல் விட்டு விட்டார்.

சில நாட்கள் கழித்து அடிக்கடி அவருக்கு மிகுந்த தலைவலி ஏற்பட மாத்திரை போட்டுக் கொண்டு சமாளித்தவர் ஒரு நாள் வலிப்பு வந்து மயங்கி விழவே சாரதா அதிர்ச்சி அடைந்தார்.

அன்று முதன்முதலில் அவரை படுக்க வைத்திருந்த அதே படுக்கையில் அவரை  மருத்துவர்கள் பரிசோதிக்க சற்று தூரத்தில் மகனை அணைத்தவாறே விசும்பிக் கொண்டிருந்தார் சாரதா.

“இட்ஸ் மாசிவ் செரிபிரல் ஹெமரேஜ். சாரதா சிஸ்டர் வி ஆர் சோ சாரி” மருத்துவர்கள் ஆறுதல் சொல்ல மகனை இறுக்கமாய் பிடித்துக் கொண்டார்.

‘பிரைன் டெத்’ என்று டாக்டர்கள் சொல்லிவிட கணவரது உறுப்புகளை தானம் செய்ய கையெழுத்து இட்டார் சாரதா.

ஜஸ்வந்த் சிங் மூலம் கணவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தார் சாரதா.

மகன் இறந்த செய்தி கேட்டு விரைந்து வந்த ராஜா விஷ்ணுவர்தன் நிலைகுலைந்து போனார்.

அது வரை இருந்த வீம்பு பிடிவாதம் எல்லாம் பறந்து போனது.

ஏன் மனிதர்களுக்கு புரிவதில்லை. அடுத்த நிமிடம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். உலகமே தலைகீழாக மாறிவிடலாம். இருக்கும் சிறு காலத்தை நல்ல முறையில் கழிக்க ஏன் யாரும் முன்வருவதில்லை. ஏன் வெறுப்பு, கோபம், துவேஷம்.

இதோ இன்று மகனுக்காக அழுது கரைந்து கொண்டிருப்பவர் அந்த மகன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்த தருணங்களை கண்டு ஆனந்தம் கொள்ளாமல்  எட்டி உதைத்து விட்டிருந்தாரே.

‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ போல தான்.

சாரதாவிடம் மன்னிப்பு கேட்டவர் தங்களது குல வாரிசுடன் அவர்கள் மருமகளாக ஜெய்பூர் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள சிறிது தயக்கம் கொண்டாலும் முன்பு கணவன் சொன்ன சொல் நினைவு வர சம்மதம் தெரிவித்தார்.

எட்டு வயதில் தந்தை இறந்து விட்டார் இனி அவர் வர மாட்டார் என்றளவில் உணர்ந்திருந்த ஹர்ஷா மிகவும் உடைந்து போயிருந்தான். அதிலும் அவன் அப்பா செல்லம் ஆயிற்றே.  

ஜெய்ப்பூரில் புதிய உறவுகள், பெரிய அரண்மனை, வேலையாட்கள், புரியாத மொழி இவற்றைக் கண்டு மிரண்டு அன்னையைக் கட்டிக் கொண்டான்.

மூத்த மகனுக்கு இரு பெண் குழந்தைகள் இருக்க இரண்டாவது மகனுக்கு வாரிசுகள் இல்லாத நிலையில் தனது ஒரே பேரனை அன்போடு அணைத்துக் கொண்டார் ராணி பத்மாவதி. ஆனால் பேரனின் தாய் என்ற நிலையில் தான் சாரதாவை வைத்தார். அவரை மருமகளாய் ஏற்றுக் கொள்ள அவரது கர்வம் இடம் கொடுக்கவில்லை.

இருப்பினும் ராஜா விஷ்ணுவர்தன் தனது இளைய மருமகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் அந்தஸ்து அனைத்தையும் சட்டரீதியாகவும் தார்மீக முறையிலும் நிறைவேற்றினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.