(Reading time: 19 - 38 minutes)

மேலும் எப்போதும் வெளிவேலைகளை எல்லாம் பார்த்துக் கொள்ளும் அப்பா, எதைக் கேட்டாலும் உடனே வாங்கித் தரும் அப்பா  முடங்கி விட்டது வேறு பெரிய இழப்பாக.

ஒற்றை ஆளாய் பொதிகளை சுமக்க முயன்று முடியாமல் பரிதவித்த அன்னைக்கு தோள் கொடுத்தாள் ஹரிணி.

வெளி வேலைகளை எல்லாம் மகள் கவனித்துக் கொண்டாள். அன்னைக்கு உதவியாய் சமையலிலும் தங்ககைகளை பள்ளிக்கு தயார் செய்வதிலும் உதவி செய்தாள்.

சொந்த வீடு இருந்ததால் வாடகை சிரமம் இல்லாமல் போகவே வீட்டைச் சுற்றி இருந்த இடத்தில் பூச்செடிகளோடு பாரதி மகளோடு காய்கறி தோட்டம் அமைத்தார்.

அதை மூன்றாக பிரித்து தன் சகோதரிகளின் பொறுப்பில் விட்டாள் ஹரிணி.

“அவங்க அவங்க பகுதியை தண்ணி ஊத்தி களை எல்லாம் எடுத்து பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு. நம்ம வீட்டுக்கு தேவையான காய் எல்லாம் நானே காசு கொடுத்து உங்ககிட்ட வாங்கிக்குவேன். மீதியை பக்கத்துக்கு வீட்ல போய் நீங்க வித்துக்களாம். அந்த காசு எல்லாம் உங்க உண்டியலில் நீங்க சேர்த்து வைத்து உங்களுக்கு பிடிச்சதை வாங்கிக் கொள்ளலாம்” ஹரிணி சொல்ல இளையவர்கள் மூவருக்கும் குஷியாகி விட்டது.

ஜெயராஜன் ஓர் சிவில் இஞ்சினியர். பக்கத்துக்கு நகரத்தில் ஓர் சிறிய கட்டுமான நிறுவனத்தில் நல்ல பணியில் இருந்து வந்தவர். தேவைக்கு ஏற்ப நல்ல வருமானம். அன்பான கணவன் சிறந்த தந்தை என்பர்தற்கு உதாரணமாய் இருந்தவர்.

பணியில் இருந்த போது ஏற்பட்ட விபத்து என்ற போதும் அது மிகச் சிறிய நிறுவனம் என்பதால் நிறுவன முதலாளி  கொடுத்த ஈட்டுத் தொகை மருத்துவச் செலவிற்கே சரியாக இருந்தது.

“நீங்கள் உயிரோடு பிழைத்து வந்தது தெய்வத்தின் அருள். வேற எதுவும் நினைக்காதீங்க. டாக்டர் சொன்னாரே காலப்போக்கில் தானே உணர்வு திரும்பிடும். அது வரை பிஸியோ தெரப்பி செய்யணும்னு” கணவருக்கு எடுத்துச் சொனனார் பாரதி.

ஆனாலும் ராஜன் மனதளவில் மிகவும் நொறுங்கிப் போனார். மனைவியும் மகளும் கஷ்டப்படுவதை எண்ணி தினம் மருகினார்.

“ஐடியல் மைன்ட் இஸ் டெவில்ஸ் வொர்க்ஷாப். அப்பாவை எப்போவும் பிஸியா வைத்திருக்கனும் விதுகுட்டி” ராஜனின் மனநிலை அறிந்து பாரதி மகளோடு கலந்தாலோசித்தார்.

வீட்டின் நிர்வாகத்தை கணவரிடம் ஒப்படைத்தார் பாரதி.

“அப்பா. இந்த சலான் எப்படி பில் பண்றது.... அப்பா காஸ் தீர்ந்து போச்சு. எப்படி பதிவு பண்றது....அப்பா புது ரேஷன் கார்ட் வந்திருக்காம். எப்படி போய் வாங்குறது...அப்பா அப்பா” என்று எல்லாவற்றிக்கும் ஹரிணி தந்தையை எதிர்ப்பார்க்க ராஜன் சற்று தெளிந்தார்.

காலச்சக்கரம் சுழல ஹரிணிக்கு எதை பற்றியும் சிந்திக்கவோ கற்பனை செய்யவோ நேரம் இருந்ததே இல்லை.

காலையில் எழுந்து பள்ளிக்கு தானும் கிளம்பி தங்கைகளையும் கிளப்பி விடுவாள். பாரதி இரண்டு வேளைக்கும் சமையலை முடிக்க ராஜன் மனைவிக்கு காய் நறுக்கி கொடுப்பது என தன்னால் ஆன உதவிகளை செய்தார்.

மாலையில் பள்ளி முடித்து வந்ததும் தங்கைகள் தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சி கூடவே சிறிது நேரம் விளையாடி விட்டு வர ஹரிணி வெளிவேலைகள் இருந்தால் அப்பாவின் சைக்கிளில் சென்று விட்டு திரும்பியதும் பாத்திரம் தேய்த்து பள்ளி சீருடைகளை துவைத்து காய போட்டு விட்டு அம்மா செய்து வைத்திருக்கும் பொரி உருண்டை கடலை மிட்டாய் என தின்பண்டங்களை தங்கைகளுக்கு எடுத்துக் கொடுப்பாள்.

பின் அன்னை வந்ததும் டியுஷன் எடுக்க அவர் சென்றுவிட தந்தையின் சிறு உதவியோடு இரவு உணவை தயார் செய்து வைப்பாள்.

எல்லோரும் உறங்கச் சென்று விட தனது வீட்டுப் பாடங்களை முடித்து நள்ளிரவு நேரத்தில் பாடங்களைப் படிப்பாள். ராஜன் மகளுக்குத் துணையாக பேப்பர் இல்லை ஏதேனும் வார இதழைப் புரட்டிக் கொண்டு உடன் விழித்திருப்பார்.

சில சமயம் படிக்கும் சிறு மேஜை மீதே ஹரிணி உறங்கிப் போவாள். ராஜன் மகளை அழைத்துப் பார்த்து அவள் அசையாது இருக்கவே செய்வதறியாது வருத்ததுடன் தானும் கண்ணயர்ந்து விடுவார்.

“தூக்கம் வந்தா பெட்ல போய் படும்மா” ராஜன் விடியலில் சொல்ல “எங்க படுத்தா என்ன அப்பா நல்லா தான் தூங்கினேன்” என்பாள் மகள். 

எப்போதாவது சுகீர்த்தி அக்காவிற்கு அவளாக முன்வந்து சிறு உதவிகள் புரிவாள். சுகீர்திக்கு எப்போதும் படிப்பில் முதலில் வர வேண்டும் என்று கொஞ்சம் வெறி என்றே சொல்லலாம். அதிலும் ஹரிணி தங்கை தானே நீ என்ன கம்மியா மார்க் வாங்கிருக்க. உன் அக்கா எப்போவும் பர்ஸ்ட் வருவாளே  என்று அனைவரும் சொல்ல தானும் அக்காவைப் போல பர்ஸ்ட் வாங்க வேண்டும் என்று புத்தகமும் கையுமாக இருப்பாள்.

தேர்வு சமயங்களில் தனது தோட்ட வேலையை தங்கைகளிடம் கொடுத்து விட்டு கிடைக்கும் பணத்தில் பங்கு தருவதாக சொல்லி விடுவாள்.

அதனால் ஹரிணி சுகீர்த்தியிடம் எந்த உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. தானே அனைத்து வேலைகளையும் செய்ய பழகிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.