(Reading time: 12 - 24 minutes)

19. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

ன்றும் தான் வணங்கும் இறைவனின் ஆராதனை சில தினங்களாக தடைப்பட்டு போன கவலை அவளது உள்ளம் முழுதிலும் நிரம்பி இருந்தது.என்று தான் தன் இல்லம் நோக்கி பயணப்படுவோம் என்ற எண்ணம் அவளது மனம் முழுதிலும் வேதனையை நிரப்பி வேடிக்கைப் பார்த்தது.அன்று அர்ஜூன் அளித்த சிறு பெட்டியை திறந்துப் பார்த்தாள் மாயா.ஏதோ ஒரு அன்னிய நிலத்தில் சிக்கியதாய் ஒரு உணர்வு அவளுக்குள்!!தன் சாம்ராஜ்ஜியம் நீங்கி வந்தது போல் மனதில் ஒரு வேதனை!!

"அக்கா!"-ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தவள் சட்டென அச்சிறு பெட்டியை மூடி மறைத்து வைத்தாள்.

"என்னக்கா?எழுந்துட்டீங்களா?குரல் கொடுத்திருக்கலாமே!"

"பரவாயில்லைம்மா!இவ்வளவு பாட்டி இங்கே தான் இருந்தாங்க!நீ ஏதோ வேலையா இருக்கிறதா சொன்னாங்க!அதான் டிஸ்ட்ரப் பண்ணலை!"

"ம்...கொஞ்சம் வேலை தான்!சரி...நீங்க சாப்பிடுங்க!"-என்று காலை சிற்றுண்டியை அவளுக்கு அளித்தாள்.புன்னகையோடு அதைப் பிரித்தவள் திடுக்கிட்டாள்.வழக்கமாய் அவள் உண்பது போல இனிப்பு வகை இருந்தது அதில்!!

"இது என்ன?"

"மாமா தான்!நீங்க தினமும் எதாவது ஸ்வீட் பண்ணி,ஈஸ்வரனுக்கு படைத்துவிட்டு,அதையே சாப்பிடுவீங்கன்னு சொன்னார்.அதான் ஸ்வீட் பண்ணி,படைத்துவிட்டு கொண்டு வரேன்!"

"எதுக்காக இதெல்லாம்?"

"நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போதே கவனிப்பேன்.நீங்க சரியாவே சாப்பிட மாட்டீங்க!நான் கூட சமையல் பிடிக்கலையோன்னு நினைத்தேன்.மாமா இப்போ இந்த விஷயத்தை சொல்றாரு!"-அவள் சில நொடிகள் மௌனம் காத்தார்.

"எனக்காக சிரமப்பட வேண்டாம்மா!நான் யாருக்கும் சிரமம் கொடுக்க விரும்ப மாட்டேன்!"

"நமக்கு நெருக்கமானவங்களுக்கு செய்யுற உபகாரம் சிரமமாக்கா?"-அவளால் மித்ராவின் வினாவிற்கு விடையளிக்க இயலவில்லை.

"ஏ...மித்ரா!என் மொபைல் பார்த்தியா?"-ருத்ராவின் குரல் செவிகளில் ஒலித்தது.

"வரேன் மாமா!"-என்றவள்,மாயாவிடம் திரும்பி,

"நீங்க சாப்பிடுங்க!நான் வந்துடுறேன்!"என்று எழுந்துச் சென்றாள்.

"இவனுக்கு எப்படி என்னுடைய பழக்க வழக்கம் எல்லாம் தெரியும்?"-தனக்குள்ளே வினா எழுப்பிக் கொண்டாள்.மெதுவாக அவ்வுணவை உண்டு,பாத்திரத்தினை மேசை மீது வைத்துவிட்டு ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கிப் போனாள் மாயா.

ஆனால் கவனமோ அதில் இல்லை.நேற்றைய தினம் அர்ஜூன் கூறிய ருத்ராவின் கடந்த காலத்திலே நிலைப்பெற்று இருந்தது.அதே சிந்தனையில் அவள் மூழ்கி இருக்க,மனதிற்கு பிரியமான ஏதோ பாடலை முணுமுணுத்தப்படி உள்ளே நுழைந்தான் ருத்ரா.அவள் 'என்ன?'என்பது போல நிமிர்ந்துப் பார்த்தாள்.சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டவன்,அலமாரியில் எதையோ தேடினான்.தேடிய புத்தகம் கையில் அகப்பட்டதும் அலமாரியை மூடி துணிந்தவன் சட்டென அச்செயலை நிறுத்தினான்.அங்கு முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கியமான பொருள் காணவில்லை.

"இதை தான் தேடுறீயா?"-மாயாவின் குரல் கேட்டு திரும்பினான் அவன்.மெத்தையின் மேல் அந்த ஆல்பத்தினை எடுத்து வைத்தாள் அவள்.துள்ளி திரிந்த அவன் முகம் அப்படியே சோர்ந்துப் போனது!மெல்ல ஒவ்வொரு அடியாய் அவளை நோக்கி முன்னேறினான் அவன்.அவள் முகத்திலோ எச்சலனமும் இல்லை.புகைப்பட தொகுப்பினை கையில் எடுத்தான் ருத்ரா.

"மாயா?இது உன்கிட்ட எப்படி?"-மெல்லியதாய் ஒலித்தது அவன் குரல்.

"கங்கா ரொம்ப அழகா இருக்கா ருத்ரா!"-என்றாள் புத்தகத்தை புரட்டியப்படி!அவனது சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.

"ஏன் நிற்கிற உட்காரு?"-அவன் முகம் ஏதோ சிந்தனையை பிரதிபலித்தது.

"என்னால நிற்க முடியாது!காலில் அடிப்பட்டிருக்கு!"-அவள் கூறியதும் நாற்காலியில் அமர்ந்தான் அவன்.

"அர்ஜூன் சொன்னான்!எல்லாத்தையும் சொன்னான்!நீ அவசரப்பட்டிருக்க கூடாதுன்னு தோணுது!உன் காதலை நீ சொல்லாம கொஞ்ச நாள் பொறுமையா இருந்திருந்தா கங்கா நிச்சயம் உனக்கு கிடைத்திருப்பா!அவக் கூட நீ சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம்.எனக்கும் தர்மசங்கடமான சூழல் உருவாகி இருக்காது!"

".............."

"காதல் நிறைய பேரை யோசிக்க விடாம செய்யுது!முதல்ல என் அப்பாவை பார்த்தேன்.இப்போ உன்னைப் பார்க்கிறேன்!"

"................."

"உனக்கும் எனக்கும் எந்தப் பகையும் இல்லை.சொல்லப்போனா நான் உனக்கு கடன் பட்டிருக்கேன்!உன் கடந்தக்காலம் என் கடந்தக்காலத்தை விட ரொம்ப மோசமானது!ஆனா,நீ எதிர்ப்பார்க்கும் ஆறுதலை என்னால தர முடியாது!என் பிடிவாதத்தை நான் யாருக்காவும்,எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்!தேவையில்லாத ஆசைகளை வளர்த்து மறுபடியும் ஏமாற்றத்தை சந்திக்காதே!"-அவள் அறிவுரை வழங்க அவன் நிறுத்தும்படி சைகை செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.