(Reading time: 12 - 24 minutes)

"சரிம்மா!"-அவ்வறையின் விளக்குகளை அணைத்துவிட்டு வெளியேறினாள் மித்ரா.சிறிதும் உறக்கம் வரவில்லை அவளுக்கு!!மிகுந்த குழப்பத்திற்குள் தள்ளப்பட்டாள்.

மனிதனுக்கு பல்வேறு சூழல்களில் இதுபோல் சிக்கல்கள் பிறக்கக்கின்றன.எந்த மார்க்கத்தினை கொள்வது?இது சரியா?இப்பணி ஆற்றலாமா?இவர் நல்லவரா?இது உண்மையா?என எண்ணற்ற வினாக்களை தன்னுள் உதிக்க செய்து மனிதன் தன் மனதினை யுத்தக்களமாய் உருமாற்றுகிறான்.காண்போருக்கோ!ஒன்றுமில்லாத துன்பத்திற்கு இவ்வளவு வலிகள் அவசியமா என்று தோன்றும்!!நினைவில் கொள்ளுங்கள்...கார்மேகம் கூடி பொழியும் மழையினால்,மயிலானது தன் நீண்ட தோகையினை விரித்து ஆடும்!ஆனால்,விருட்சத்தில் வாசம் செய்யும் பட்சிகளுக்கோ அது துன்பத்தையே நல்கும்!துன்பங்கள் என்பது போதனைகள் வழங்குவதன் மூலம் கடக்க இயலாது!ஆழ் கடலில் எதிர் நீச்சல் போடுவேன் என்று எவரும் எளிதில் கூறலாம்!ஆனால்,அதனை எதிர்க்கும் மனத்துணிவு அத்துன்பத்தை எதிர்க்கொள்பவருக்கே உண்டு!!

நாட்கள் விரைந்து நகர்ந்தன....

மாயாவின் உடல்நிலை பரிபூரணமாக குணமடைந்தது!!!

"அக்கா!இன்னிக்கே நீங்க கிளம்பணுமா?"

"ஏன்மா?"

"கொஞ்ச நாள் இருந்துட்டு போங்கக்கா!"

"கவலைப்படாதே மித்ரா!நான் சீக்கிரம் வருவேன்!"-என்றாள் புன்னகையுடன்!

"ருத்ரா எங்கே?"

"ரூம்ல இருக்காரு!"

"நான் போய் சொல்லிட்டு கிளம்பட்டுமா?"-அனுமதி வேண்டினாள் அவள்.

"என்னக்கா?என்கிட்ட கேட்கிறீங்க?உங்களுக்கு இல்லாத..."-எதையோ கூற வந்தவள் சட்டென நிறுத்தினாள்.

"தேங்க்யூ!"-என்றவள் ருத்ராவின் அறை நோக்கி நடந்தாள்.வெளியே நின்று கதவை தட்டினாள்.ஆள் அரவமே இல்லை!!பின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

"ருத்ரா!"

"............."

"ருத்ரா!"

"............."-அவன் இல்லாததை உணர்ந்து திரும்பியவளின் கண்களில் தென்பட்டது அந்நாட்குறிப்பு!!எங்கோ கண்டதை போன்ற உணர்வு ஏற்பட,சென்று அதை எடுத்தாள்.

முதல் பக்கத்தில் கம்பீரமாய் வரவேற்றது மகேந்திரனது கையெழுத்து!!அதைக் கண்டு அதிர்ந்தவளின் கரம் நழுவ,அந்நாட்குறிப்பிலிருந்து கீழே விழுந்தது அந்தப் பென்டிரைவ்!!

சிறு நடுக்கத்துடனே அதை எடுத்தாள் மாயா.அதிலிருக்கும் செய்தி அறிய முனைந்தவள்,அதை அவனது அறையிலிருந்த தொலைக்காட்சியுடன் இணைத்தாள்.சில நொடிகளில் ஆரம்பித்த மறைக்கப்பட்ட வரலாறு அவளது கண் எதிரே ஒலிப்பரப்பாகி கொண்டிருந்தது.ஒவ்வொரு உண்மையும் வெளிச்சத்திற்கு வர தன்னிலை இழந்துக் கொண்டிருந்தாள் மாயா.அவளை அறியாமல் அவளது விழிகள் கசிய தொடங்க,அவளது பிடிவாதம்,வைராக்கியம் அனைத்தும் அவளது தந்தையின் முன் தோல்வியுற்றன.மனதில் அத்தனை வருடங்களாய் அடக்கி ஆண்ட வேதனைகள் யாவும் தடையை உடைத்து கண்ணீராய் வெளிவந்தன.

"ஏ..லூசு!ஹால்ல தான் அவ்வளவு பெரிய டிவி இருக்கே!இங்கே வந்து தான் பார்க்கணுமா?மனுஷனை நிம்மதியா குளிக்க...."-தலையை துவட்டியப்படி மித்ரா என்று எண்ணி குளியலறையில் இருந்து வெளி வந்தவன்,மாயாவை கண்டு திகைத்து நின்றான்.அவளது விழிகள் நிலைத்து நின்ற காணொளியை கண்டவன் மேலும் அதிர்ந்து போனான்.மகேந்திரன் சொடுக்கிய ஒவ்வொரு வார்த்தையும் மாயாவின் மனதின் தடையை உடைக்கவே செய்தன.

"மாயா?"-அவள் விழிகளில் நீர் திரண்டிருக்க,இடக்கரமோ மேசையை அழுந்தப் பற்றி இருந்தது.

"ஏன்?இதைப்பற்றி அப்பா என்கிட்ட பேச முயற்சி செய்யாத காரணம் என்ன?"-காணொளியில் மகேந்திரனின் முகத்தையே அவள் நோக்க,அவளின் முகத்தினை பார்த்திருந்தான் ருத்ரா.கனத்த மௌனம் சில நொடிகள் நிலவியது.

"மாயா!நீ பேசாம வா!"-அவளது தோளினை பற்றி ஆறுதல் கூற முயன்றவனின் சட்டையை சற்றே ஆக்ரோஷமாகப் பற்றினாள் மாயா.

"ஏன்?என்கிட்ட இதை அவர் சொல்லலை?"-அவள் உடல் நடுக்கத்தினை அவன் உணராமல் இல்லை.

"அவர் சொல்லி இருந்தாலும்,அதைப் புரிஞ்சிக்கிற நிலைமையில நீ இல்லை மாயா!அவர் எத்தனையோ முறை இதைப்பற்றி சொல்ல முயற்சி பண்ணும் போதெல்லாம் அதை நீ உதாசீனம் செய்து போனதை இந்த டைரி மூலமா படித்து தெரிந்துக்கிட்டேன்.அவர் சொல்ல தயாரா இருந்தார்.நீ கேட்கலை!அதான் உண்மை!!அப்படியே கேட்டிருந்தாலும்,உங்க அம்மா மேலே இருந்த காதலால் அவர் பொய் சொல்றாருன்னு தான் நீ நம்பி இருப்ப!எந்த ஒரு உண்மையும் காலம் தாழ்ந்து வெளியே வரும் போது தான் மாயா அதோட அருமை தெரியுது!"-அவனது குரல் தழுதழுத்தது.

"நான் தப்பு பண்ணிட்டேன்!பெரிய தப்பு பண்ணிட்டேன்!"-மனம் குற்றத்தால் குறுகுறுக்க,ஒரு சங்கடமான சூழலே அங்கு நிலவியது எனலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.