(Reading time: 13 - 26 minutes)

அமேலியா - 26 - சிவாஜிதாசன்

Ameliya

நீண்ட நேரமாக புல்தரையில் சிலையென நின்றபடி சிந்தித்துக்கொண்டிருந்தாள் அமேலியா. அவளது விழிகள் அவ்வப்போது புகைப்படத்தைப் பார்த்தன. நேரமாக நேரமாக குளிர்பனி அதிகமாய் பொழிந்தது. அந்த கடுமையான குளுமையைக் கூட அமேலியாவால் உணரமுடியவில்லை.

சுற்றிலும் பேரமைதி. உலகில் வாழும் மனிதர்களெல்லாம் மறைந்துவிட்டதாய் வேடிக்கையாய் எண்ணினாள். வேடிக்கையான எண்ணங்களில் இருந்து கற்பனை பிறக்கிறது. அந்த கற்பனை கனவுகளாய் உருமாறுகிறது. கனவுகள் ஆசைகளில் கலந்து நமக்கு ஏமாற்றங்களை பரிசளிக்கின்றன.

இப்படியெல்லாம் கூட தனக்கு சிந்தனை வருமா என அமேலியா அதிசயித்தாள். வேதாந்த சிந்தனைகளை சிந்திப்போம் என அவள் நினைத்ததே இல்லை. இந்த சிந்தனைக்கு காரணம் என்னவாயிருக்கும் என அமேலியா யோசித்தாள். சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டாள். தன்னைச் சுற்றி நிலவும் ஆழ்ந்த அமைதியே சிந்திப்பதற்கான அடிகோல் என அவளுக்கு புரிந்தது.

புல்தரையில் மெல்ல நடந்தாள். நிலவின் சிறு ஒளியில் நிழலாடிய ஊஞ்சலை வருடிப் பார்த்தாள். அவளின் இதழ்கள் அவளையறியாமல் புன்னகைத்தன. பின்பு, என்ன நினைத்தாளோ தெரியவில்லை, ஊஞ்சலில் அமர்ந்து மெல்ல ஆடினாள். அவளது விழிகள் நிலவையே நோக்கிக்கொண்டிருந்தன.

விழிகளை மூடி, நிலவை நோக்கி பயணம் போவது போல ஊஞ்சலில் ஆடினாள். வானில் பறந்து சென்று நிலவில் நுழைந்து விட்டதைப் போன்ற உணர்வு அவளுக்குள் எழுந்தது. திடீரென, அவளுக்குள் ஓர் எண்ணம்.  கண்களைத் திறந்தாள். ஊஞ்சலில் ஆடுவதை நிறுத்திவிட்டு வெற்றிப் புன்னகையை இதழில் ஓடவிட்டாள்.

வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். நிலா நிம்மதியான உறக்கத்தை கொண்டிருப்பதை எண்ணி சற்று நிம்மதி அடைந்தவள், பூனை போல் மாடியில் ஏறி வசந்தின் அறையைக் கடந்து அடுத்த பெரிய அறைக்குள் நுழைந்தாள். அவளது இதயம் அதிகமாக படபடத்தது. 

இருளை விரட்ட விளக்கினை போட்டவளின் விழிகளில் ஆச்சர்யம் படர்ந்தது. ஓவியம் வரைவதற்கான ஏற்பாடுகள் அங்கு முன்னமே செய்து வைக்கப்பட்டிருந்தன. ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் அருகேயிருந்த மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 'தான் நிச்சயம் ஓவியம் வரைவோம்' என வசந்த் நம்பிக்கை வைத்திருக்கிறான் என அமேலியா புரிந்துகொண்டாள்.

ஆபாசம் இல்லாத ஓவியமாக இருந்திருந்தால் நிச்சயம் அமேலியா மறுத்திருக்க வாய்ப்பில்லை. தனக்குப் பிடிக்காத நபராயினும் தன்னிடம் உதவி என எதிர்பார்த்தால் நிச்சயம் அவள் செய்திருக்கவே விரும்புவாள். ஆனால், அவள் வாழ்ந்த மார்க்கம், பெண் என்பவள் தன்னுடைய அழகும் வனப்பும் தன் கணவனுக்கு மட்டுமே தெரியவேண்டும் என வலியுறுத்தியது. அதனால் வேறு ஆண்களின் பார்வை தங்கள் மேல் விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே பெண்கள் தங்கள் உடலை கருப்பு நிற அங்கியால் மறைத்துக்கொண்டார்கள்.

ஆனால், தற்போது அவள் செய்யப்போகும் காரியத்தை கடவுள் ஏற்றுக்கொள்வாரா என மனதில் சிறு பயம் உருவெடுத்தது. பின்பு தனக்குள்ளாகவே சமாதானம் செய்துகொண்டவள், மேசையிலிருந்த சிறு கத்தரிக்கோலை எடுத்து புகைப்படத்தில் இருந்த பெண்ணின் உடலை வெட்டிவிட்டு தலையை மட்டும் சிறிது நேரம் பார்த்தாள். பின்பு, மெல்ல ஓவியம் வரையத் தொடங்கினாள். அவ்வப்போது ஓவியப் பெண்ணின் தலையை ஒருமுறை நோட்டமிட்டவள், சிறிது நேரம் வரைவதை நிறுத்திவிட்டு யோசனையோடு அங்கும் இங்கும் நடந்தாள்.

அந்நேரத்தில் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு இருமல் சப்தம் காற்றோடு கலந்து வந்தது. அமேலியா அதிர்வுற்று அறையை விட்டு வெளியே வந்தாள். நாராயணன் இருமும் சப்தம் பலமாக கேட்டது. பதறியபடி படியில் கீழே இறங்கி ஓடிய அமேலியா நாராயணனின் அறைக் கதவைத் திறந்தாள்.

படுக்கையில் இருந்தபடியே கடுமையாக இருமிக்கொண்டிருந்த நாராயணன் அமேலியாவைக் கண்டதும் சற்று அதிர்ந்துதான் போனார். உடனே சுதாரித்த அவர், அமேலியாவைப் பார்த்து தண்ணீர் கொண்டு வரும்படி சைகையால் கூறினார்.

உடனே, அமேலியா சமையலறைக்குச் சென்று தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்தாள். நாராயணனின் கை நடுக்கத்தில் தண்ணீர் பாட்டில் தவறி விழுந்தது. அமேலியா நாராயணனை கைத்தாங்கலாக தூக்கிப் பிடித்து தண்ணீர் குடிக்க உதவி செய்தாள். நாராயணன், பதட்டம் தணிந்து மெல்ல மெல்ல சுயநினைவிற்குள் புகுந்தார். ஒரு நொடி இறப்பை சந்தித்துவிட்டு வந்ததை போல் உணர்ந்தார்.

அமேலியாவின் முகத்தை நோக்கிய அவர், "ரொம்ப நன்றிம்மா. நீ இன்னும் தூங்கலையா?" என கேட்டார்.

அவர் என்ன கூறுகிறார் என்பதை காதில் வாங்கிக்கொள்ளாத அமேலியா, "இப்போ உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா?" என சைகையில் கேட்டாள்.

"நல்லாதான் இருக்கேன். நீ போய் தூங்கு"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.