(Reading time: 13 - 26 minutes)

'அப்பெண் நின்றுகொண்டு நிலவினை ரசிப்பதாய் தான் ஓவியம் வரைந்திருக்க வேண்டும். அமேலியா எதற்கு அவ்வாறு வரையவில்லை? அது மட்டுமில்லாமல் அந்தப் பெண்ணின் இடையை ஆடை கொண்டு மறைத்திருக்காளே' என சில கேள்விகளை மனதிற்குள் கேட்டுக் கொண்டான். ஆனாலும் இந்த ஓவியம் தான் எதிர்பார்த்ததை விட மிகவும் நன்றாகவே வந்திருக்கிறது என மகிழ்ச்சி அடைந்தான். 

ஓவியத்தை பத்திரமாக சுருட்டி வைத்தவன், சந்தோஷத்தில் துள்ளியாடியபடி எல்லோரும் சாப்பிடும் இடத்திற்கு வந்தான்.

நாராயணனும் நிலாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அமேலியாவோ அவர்களை விட்டு சிறிது தூரம் விலகி தரையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

வசந்தின் மகிழ்ச்சியைக் கண்டும் காணாதபடி இருந்த நாராயணன்,  "வசந்த்திற்கு சாப்பாடு போடுமா" என்று மேகலாவிடம் கூறினார்.

மேகலாவும் வசந்தின் தட்டில் இட்டிலிகளை அடுக்கினாள்.

"போதும் அக்கா போதும். சீக்கிரம் சட்டினி ஊத்து, அவசரமா போகணும்"

"மெதுவா சாப்பிட்டு போலாம்டா"

"முக்கியமான வேலை அக்கா. நிலா உனக்கு வரும்போது சாக்லேட்ஸ் வாங்கிட்டு வரேன்"

"நிஜமாவா மாமா?"

"ஆமா ஆமா" என அமேலியாவை நோக்கியவன், கண்களாலேயே அவளுக்கு நன்றி சொன்னான்.

அமேலியா பயந்து வேறு பக்கம் தலையை திருப்பிக் கொண்டாள்.

அக்காட்சியைக் கவனிக்கத் தவறாத நாராயணன், கண்களை இரண்டு பேரிடமும் மேய விட்டார்.

தன் அப்பா தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்ததும் வசந்த் அமைதியானான்.

மடித்து வைக்கப்பட்டிருந்த ஓவியத்தின் மீது தன் பார்வையை ஓடவிட்டவர், வசந்த்திடம் "என்ன இது?" என வினவினார்.

"ஓவியம் பா"

"அதுக்கு தானே ராத்திரில அலைஞ்சிட்டு வந்த. திடீர்னு காலைல இந்த ஓவியம் எப்படி முளைச்சிட்டு வந்துச்சி?"

நாராயணன் கேட்ட கேள்வி வசந்தை  திக்குமுக்காட வைத்தது.

"இது பழைய ஓவியம் அப்பா" என்று கூறிய வசந்த், சாப்பிட்ட கையை கழுவிக்கொண்டு, அடுத்த ஐந்து நிமிடத்திலேயே தனது அலுவலகத்தை நோக்கி காரில் விரைந்தான்.

தொடரும்...

Episode # 25

Episode # 27

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.