(Reading time: 16 - 31 minutes)

அமேலியா - 25 - சிவாஜிதாசன்

Ameliya

ரண்டு மணி நேர பயணத்திற்குப் பின் மேகலாவும் நாராயணனும் தாமதமாக வீடு வந்து சேர்ந்தார்கள். வரும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தலைவலிக்குள்ளானார்கள்.

நாராயணன் மிகவும் களைப்போடு காணப்பட்டார். உணவு கூட தேவையில்லை உறக்கம் கொண்டால் போதும் என அவர் மனம் எண்ணியது. அந்த யோசனையுடனேயே தன் அறைக்குச் சென்றார்.

"நான் ரெஸ்ட் எடுக்குறேன்மா தொந்தரவு பண்ணாதீங்க"

"அப்பா கொஞ்ச நேரம் பொறுங்க சாப்பாடு செஞ்சிடுறேன்"

"இல்லமா சுத்தமா முடியல ரெஸ்ட் எடுத்துட்டு வந்து சாப்பிடுறேன். நீங்க சாப்பிடுங்க" என்றபடி நாராயணன் அறையின் கதவை சாத்தினார்.

நிலா வீட்டினுள் வந்ததும் தன் பிரியமான பொம்மையை தேடுவதில் மும்முரமானாள்.

"அம்மா! என்னுடைய சிண்ட்ரெல்லா பொம்மையை பாத்தியா?"

"சூடு வைக்க போறேன் பாரு. வாங்கி கொடுத்த பொம்மையை தொலைச்சிட வேண்டியது, அப்புறம் யாராச்சும் பாத்தீங்களான்னு கேள்வி கேக்க வேண்டியது. பொம்மை மட்டும் கிடைக்கல உன்ன கிரைண்டர்ல போட்டு அரைச்சிடுறேன் பாரு"

தன் அம்மாவின் வசவுகளை காதில் வாங்கியபடி பொம்மையைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் நிலாவின் கண்களில் அமேலியா தூக்கி எறிந்த கசங்கிய போட்டோ தென்பட்டது. அதை எடுத்து பிரித்துப் பார்த்தாள்.

அந்நேரத்தில் உறக்கம் கலந்த கண்களுடன் தன் அறையை விட்டு வெளியே வந்தான் வசந்த்.

"நிலா இங்க வா"

நிலா சில நொடிகள் வசந்தை நோக்கிவிட்டு படியில் ஏறி மேலே சென்றாள்.

"எதுக்கு மாமா கூப்பிட்ட?"

"உன்கிட்ட ஒரு உதவி வேணும்"

"எனக்கு சாக்லேட் வேணும் அதுவும் ஒரு பாக்ஸ்"

"இன்னும் நான் சொல்ல வேண்டிய விஷயத்தையே சொல்லல அதுக்குள்ள சாக்லேட் வேணும்னு கேக்குற"

"என்கிட்டே நீ உதவி எதிர்பாக்குறேன்னா அது கண்டிப்பா வீட்டுல யாருக்கும் தெரியக்கூடாதுனு அர்த்தம். அதுக்கான பீஸ் தான் இந்த சாக்லேட்"

"அடிப்பாவி, நீ என் அக்காவா பொறந்து நான் உனக்கு தம்பியா வந்திருக்கணும்டி"

"விஷயத்தை சொல்லு மாமா. என் பொம்மையை வேற காணும்"

நிலாவின் முன்னால் வசந்த் முழங்காலிட்டு அமர்ந்து அவள் கன்னங்களை வருடியபடி, "அமேலியா அக்கா இருக்காங்கல்ல"

"ஆமா"

"அவங்க ஒரு ஓவியம் வரஞ்சி கொடுக்கணும்"

"என்ன ஓவியம்?"

"சமையல் அறைல இருக்கு பாரு ஒரு போட்டோ. அந்த போட்டோல இருக்க பொண்ண தான் வரையணும்"

"இந்த பொண்ணா மாமா" என கைகளில் இருந்த போட்டோவை வசந்தின் முன்னால் நீட்டினாள் நிலா.

"இது எப்படி உனக்கு கிடைச்சிது? ஏன் இப்படியொரு அழகான போட்டோவை கசக்கி வச்சிருக்க" என நிலாவை முறைத்தான் வசந்த்.

"நான் எதுவும் பண்ணலை மாமா. கீழ இருந்துச்சி எடுத்து பார்த்தேன் அவ்வளவு தான்"

வசந்த் அமேலியாவை எண்ணிப் பார்த்தான். அவள் தான் இப்படி செய்திருக்கவேண்டும் என்று எண்ணியவன் நீண்ட பெருமூச்சை விட்டெறிந்தான்.

"இந்த போட்டோ தான் ஓவியமா வேணும் நிலா"

"இவ்வளவு தான இப்போவே முடிச்சிடுறேன் சாக்லேட் வாங்க வெளியே போக ரெடியா இரு" என்று கூறியபடி மாடியில் இருந்து கீழிறங்கி அமேலியாவைத் தேடி ஓடினாள்.

"அக்கா! அக்கா!"

மேகலா இருந்த அறையை நோக்கி சென்றாள் நிலா. மேகலா துணியை மடித்து வைத்துக்கொண்டிருந்தாள்.

"அம்மா அக்காவை பாத்தியா?"

"அவளை ஏன் தேடுற? அதை முதல்ல சொல்லு"

"அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது" என கூறிவிட்டு அங்கிருந்து ஓடினாள் நிலா.

வீடெங்கும் தேடியும் அமேலியா கிடைக்கவில்லை. நிலா வாசலைத் தாண்டி வெளியே சென்று அமேலியாவைத் தேடினாள். சிறு வெளிச்சத்தின் நடுவே புல்தரையில் வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அமேலியா. அவளருகே நிலா சென்றாள்.

"அக்கா உன்னை எங்கே எல்லாம் தேடுறது" என்றபடி அவள் முன்னால் அமர்ந்தாள் நிலா.

'என்ன வேணும்?' என்பது போல் நிலாவின் தலையை மெல்ல வருடிவிட்டாள் அமேலியா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.