(Reading time: 16 - 31 minutes)

ஹாலில் படுக்கையை விரித்து அமேலியா படுத்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு உறக்கம் வரவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. கண்களை மூடிப் பார்த்தாள், புரண்டு படுத்தாள், எழுந்து அமர்ந்தாள். அவள் மனம் ஏதோ ஒருவித அழுத்தத்தில் இருந்தது மட்டும் அவளுக்கு புரிந்தது.

தலையணையைச் சுமந்தபடி நிலா அறையில் இருந்து வெளியே வந்தாள். அவள் முகம் சோகத்தால் வாடியிருந்தது. தன்னருகே வந்ததும் நிலாவை மடியில் அமர வைத்து 'ஏன் சோகமா இருக்கே?' என்பது போல் சைகையில் கேட்டாள் அமேலியா.

"பேசாதீங்க அக்கா. நீங்க மட்டும் ஓவியம் வரஞ்சி கொடுத்திருந்திங்கன்னா எவ்வளவு சாக்லேட்ஸ் கிடைச்சிருக்கும் தெரியுமா? எல்லாத்தையும் கெடுத்திட்டீங்க"

அவள் கூறியது அமேலியாவிற்கு புரியவில்லை. நிலாவின் தலையை வருடியபடியே இருந்தாள். அமேலியாவின் கையைத் தட்டிவிட்ட நிலா, அமெலியாவின் அருகே படுக்காமல் சற்று தள்ளி படுத்தாள். நிலாவின் கோபத்தை ரசித்த அமேலியா, அவளை சமாதானப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

'இப்பொழுது எது செய்தாலும் அவள் கோபத்தை அதிகரிக்கவே செய்யும், காலையில் பார்த்து கொள்ளலலாம்' என எண்ணியவளுக்கு தந்தையின் ஞாபகம் வந்தது. நிலாவை போல் தான் அவளும். சில நேரத்தில் தன் தந்தை மேல் கோபப்பட்டு பேசாமல் இருப்பாள். அந்நேரத்தில் யூசுப் அமேலியாவை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருப்பார். மறுநாள் அமேலியாவின் கோபம் தணிந்து தானாகவே தன் தந்தையிடம் பேசுவாள்.

'ஆஹா! என்ன இன்பமான தருணங்கள்!' நினைத்தபொழுதே அமேலியாவின் கண்களில் நீர் கசிந்தது. திடீரென அவள் மனம் முழுவதும் தன் சிறுவயது ஞாபகங்கள், பெற்றோர்களின் எண்ணங்கள் என படரத் துவங்கின. 'இப்பொழுது தன் தாய் தந்தையர் என்ன செய்துகொண்டிருப்பார்கள்' என்று எண்ணிய பொழுதே அவளது கட்டுப்பாட்டையும் மீறி அழுகை வந்தது.

அமேலியாவின் விசும்பல் சப்தம் கேட்டு, நிலா அமேலியாவிடம் வந்தாள். "அக்கா, என்ன ஆச்சு?" என்று அவள் கண்களைத் துடைத்துவிட்ட நிலா, "பரவால்ல அக்கா, சாக்லேட் அப்புறம் வாங்கிக்கலாம்" என்று சோகத்தோடு சொன்னாள்.

அவளைக் கட்டி அணைத்து அழுதாள் அமேலியா. அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை. மீண்டும் அவள் கண்ணீரை துடைத்த நிலா, ஹாலில் இருந்த விளக்கை போட்டாள். 

'ஏன் விளக்கு போட்டாய்?' என்பது போல் நிலாவை அமேலியா நோக்கினாள். 

அமேலியாவின் கையைப் பிடித்து தன்னுடன் வருமாறு அழைத்தாள் நிலா. 

'எங்கே கூப்பிடுற?' என்பது போல் சைகையில் கேட்டாள் அமேலியா.

"வாங்க அக்கா சொல்றேன்"

வேறு வழி இல்லாமல் நிலாவுடன் அமேலியாவும் சென்றாள். ஹாலில் வைக்கப்பட்டிருந்த டீவியில் போர்த்தி வைக்கப்பட்டிருந்த துணியை விலக்கினாள் நிலா.

அமேலியா வந்ததில் இருந்து தொலைக்காட்சியில் யாரும் நிகழ்ச்சி பார்ப்பதில்லை. அவள் வருவதற்கு முன் நாராயணன் எப்போவாது சில தொடர்களை பார்ப்பார் அதோடு சரி. அதன் பின் அந்த தொலைக்காட்சி பெரிய துணியால் மூடி வைக்கப் பட்டிருந்தது.

முதன் முதலாய் அந்த பெரிய தொலைக்காட்சியை பார்த்ததும் அழுது சிவந்திருந்த அமேலியாவின் கண்கள் அகல விரிந்தன. 

தொலைக்காட்சியை போட்டுவிட்டாள் நிலா. அரத பழசான ஆங்கில படமொன்று ஓடியது.  அமேலியா பிரம்மிப்போடு பார்த்தாள். அதுவரை அவள் கண்டிராத காட்சி அது. தொலைக்காட்சி ஒன்று இருக்கும், அதில் மனிதர்கள் நடிக்கும் காட்சிகள் ஓடும் என்று அவள் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.

"நான் அழும்போது டிவி தான் அக்கா பார்ப்பேன். அழுகை நின்னுடும். பாருங்க உங்களுக்கும் நின்னுடுச்சு"

நிலா கூறியது எதுவும் அமேலியாவின் காதில் விழவில்லை. திரைக் காட்சிகளிலேயே அவள் கண்கள் நிலைத்திருந்தன.

"ரொம்ப பழைய படம் அக்கா. இரு, நான் போய் மாமா ரூம்ல ஏதாச்சும் புது சிடி இருக்கானு பாக்குறேன்" என்றபடி வசந்தின் அறையை நோக்கி ஓடினாள் நிலா.

வசந்த் அறைக்குள் சென்ற நிலா அவன் சேகரித்து வைத்திருந்த சிடிக்களை எடுத்துக்கொண்டு கீழே வந்தாள். சிடி பிளேயரில் சிடி யைப் போட்டவள் அமேலியாவின் முகத்தை பார்த்தாள்.

அவள், அடுத்து என்ன வரப்போகிறது என்ற ஆவலோடு தொலைக்காட்சியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அலங்கோலமான ஆடைகளோடு பெண்ணொருத்தி பாட்டு பாடிக்கொண்டே ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தாள். அமேலியா அதிர்ந்தாள். 'இதையெல்லாம் பார்க்காதே' என்பது போல் நிலாவின் கண்களை மூடினாள். 'என்ன கண்றாவி இது. இங்கிருக்கும் பெண்களுக்கு சிறிது கூட கூச்சமே இருக்காதா அட கடவுளே' என எண்ணினாள் அமேலியா.

"இந்த மாதிரி பாட்டெல்லாம் உனக்கு பிடிக்காதா அக்கா" என கூறிய நிலா வேறு சிடியை தேடினாள். 'தி வார்' என்ற சிடி அவளிடம் சிக்கியது. அதை ஒரு முறை நோட்டமிட்டவள் பிளேயரில் போட்டாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.