(Reading time: 16 - 31 minutes)

"இதுல மாற்றம் இருக்காது வசந்த்"

அதற்கு மேல் ஓவியரிடம் பேசுவது வீண் வேலை என எண்ணிய வசந்த், "பரவாயில்ல சார், உங்களை தொந்தரவு பண்ணதுக்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்

மீண்டும் காரில் பயணம். ஆனால், செல்லவேண்டிய பாதை தெரியவில்லை. டென்ஷன் அதிகமானதால் லேசாக தலைவலி உண்டானது. காரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

சூடாக காஃபி குடித்தால் மனம் சற்று நிம்மதி அடையும் என்று எண்ணிய வசந்த், அருகில் இருந்த கஃபேக்கு சென்று காஃபியை ஆர்டர் செய்தான். அங்கே மிதமான கூட்டம் நிரம்பியிருந்தது. அவர்களின் மேல் பார்வையை வீசியபடி காஃபிக்காக காத்திருந்தான் வசந்த். காஃபி வந்ததும் அதைப் பருகியபடியே மனதில் சுழன்றடித்த கேள்விகளுக்கு விடை காண முயற்சித்தான்.  

சட்டென்று ஏதோ தோன்ற தன் பர்ஸை திறந்து எதையோ தேடினான். இரண்டு மாதங்களுக்கு முன்பு சாதாரண ஓவியர் ஏதேனும் வாய்ப்பு இருந்தால் தொடர்புகொள்ளுங்கள் என வசந்த்திடம் தன்னுடைய விசிட்டிங் கார்டை. கொடுத்திருந்தார். பர்ஸிலிருந்து எடுத்த அந்த கார்டையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தான் வசந்த்.

அந்த ஓவியர் இருக்கும் விலாசம் பத்து கிலோமீட்டர் தொலைவில் தானிருந்தது. வசந்த் யோசிக்கவில்லை, அடுத்த நிமிடமே அந்த ஓவியரின் விலாசத்தை நோக்கி விரைந்தான்.

ஓவியரின் இருப்பிடத்தை அடைந்த வசந்திற்கு, அந்த வீதி இருள் சூழ்ந்தும் ஆள் நடமாட்டமில்லாமலும் இருந்ததால், 'நாம் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கோமா' என்று சற்று குழப்பத்துடன் ஓவியரின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான். கதவு திறக்கவில்லை. மீண்டும் பெல்லை அழுத்தினான், பலனில்லை.

மேற்கொண்டு அங்கிருப்பது நேரத்தைக் கடத்தும் செயல் என எண்ணியவன் அங்கிருந்து புறப்பட இரண்டு அடிகள் வைத்து முன்னேறிய நேரம் கதவு திறக்கப்பட்டது.

"யாரது?"

"லூயிஸ், என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"

"ஞாபகம் இருக்கு. உங்க பேரு வசந்த் தானே?"

"சரியா சொன்னிங்க" என்று சந்தோசத்தோடு அவரிடம் கை குலுக்கினான் வசந்த்.

"உங்களுக்கு சான்ஸ் கொடுக்க வந்திருக்கேன்"

"இந்த நேரத்திலயா? என்னால நம்பவே முடியல" என்று ஆச்சர்யத்தோடு கேட்டான் லூயிஸ்.

"ஆமா"

"உள்ள வாங்க"

வசந்த் வீட்டினுள் சென்றான். பெரிய வசதிகள் எதுவும் அந்த வீட்டினுள் இல்லை. சாதாரண வீட்டை விட கீழ்நிலையில் தான் அந்த வீடு இருந்தது. அதுவே ஓவியரின் நிலையையும் காட்டியது.

"என்ன சாப்பிடுறிங்க?"

"நோ தேங்க்ஸ். எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்"

"சொல்லுங்க"

தன்னிடமிருந்த புகைப்படத்தை ஓவியரிடம் நீட்டினான் வசந்த்.

"இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கா"

"உண்மை தான். அவளை நீங்க வரஞ்சி கொடுக்கணும்"

"எப்போ?"

"இன்னைக்கே"

"இது நடக்குற காரியமா?"

"அதுக்கு தான் உங்களை தேடி வந்திருக்கேன். உங்களால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணுங்க. நான் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு வரேன். அதுக்குள்ள ஓவியத்தை வரஞ்சி கொடுங்க"

லூயிஸ் சற்று தயக்கத்துடன், "இதுக்கு நீங்க பணம் கொடுப்பீங்களா?"

வசந்த் தனது பர்ஸில் இருந்து சிறிது பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான். "இப்போதைக்கு இத வச்சிக்கோங்க. மீதியை நாளைக்கு தரேன்"

"தப்பா நினைச்சுக்காதீங்க என்னுடைய நிலைமை அப்படி"

"பரவாயில்லை நீங்க வேலையை ஆரம்பிங்க நான் கிளம்புறேன்" என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றான் வசந்த். 

ஓர் இரவில் ஓவியத்தை அழகாக வரைவது அவ்வளவு எளிதானது கிடையாது. நன்கு பயிற்சி கொண்ட ஓவியாரால் மட்டுமே முடியும் என்பது வசந்திற்கு தெரியும். லூயிஸ் வரையும் ஓவியமும் டைரக்டருக்கு பிடிக்கவில்லையென்றால் ஷூட்டிங் தள்ளிப்போகும். அந்த இடைவெளியில் வேறொரு அனுபவம் வாய்ந்த ஓவியரை தேடிப் பிடித்து மீண்டும் ஓவியத்தை வரைந்துவிடலாம் என்றெண்ணியவாறு வீட்டை நோக்கி காரை செலுத்தினான் வசந்த்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.