(Reading time: 16 - 31 minutes)

"மாமா இந்த படத்தை உங்களை வரஞ்சி கொடுக்க சொன்னாங்க" என்று சைகையில் அமேலியாவிற்கு புரிய வைத்தாள்.

அமேலியாவின் புன்னகை மறைந்தது. நிலாவிடமிருந்து போட்டோவை பிடுங்கி தூர எறிந்து, "இது போன்ற படங்களை பார்ப்பதும் வரைவதும் தப்பு" என்பது போல் கோபத்தோடு அரபு கலந்த சைகை மொழியில் கூறினாள்.

"இது வரஞ்சி கொடுத்தா நிறைய சாக்லேட்ஸ் கிடைக்கும்"

அமேலியா எதுவும் பேசவில்லை. "நீ இது போன்ற படங்களை பார்க்ககூடாது" என நிலாவிடம் சைகையில் கூறினாள்.

நிலா சோகத்தோடு அங்கிருந்து புறப்பட்டாள். நிலாவின் சோக முகத்தை எண்ணி அமேலியாவின் மனம் கலங்கியது.

எல்லாவற்றையும் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வசந்த்திற்கு, 'தான் ஒரு மிகப்பெரிய தவறை செய்துவிட்டோமா' என உள்மனம் கூறியது.

'அமேலியாவை நம்பியது மிகப்பெரிய தவறு, முட்டாள்தனம்' என தனக்குள்ளாகவே கூறிக்கொண்டு .தன் அறைக்கு சென்றவன், இரவு ஆடையைக் களைந்து வேறொரு ஆடையை உடுத்தி வெளியில் செல்ல கிளம்பினான்.

"டேய்! இந்த நேரத்துல எங்கே போற?" என்றாள் மேகலா, உணவுகளை டைனிங் டேபிளில் அடுக்கி வைத்தபடி.

"வேலை இருக்கு அக்கா. நான் திரும்பி வரதுக்கு நேரமாகலாம்"

"டின்னர் முடிச்சிட்டு போடா"

"எனக்கு நேரமே இல்ல அக்கா ப்ளீஸ்" என்று ஓட்டமும் நடையுமாக சென்றவன், வாசலைத் தாண்டி கார் ஷெட் இருக்கும் இடத்திற்கு சென்றான். கார் ஷெட்டை அடையும்போது அவனது விழிகள் அமேலியாவை கோபத்தோடு நோக்கின. அமேலியாவோ வானில் தவழும் நிலவை ரசித்துக்கொண்டிருந்தாள்.

ழைய ஓவியரைத் தேடி காரில் வேகமாய் சென்றுகொண்டிருந்தான் வசந்த். அவன் திட்டமிட்டது நிறைவேறாமல் போனதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

'மடத்தனமா யோசிச்சிருக்கேன். அவகிட்ட உதவி எதிர்பாத்திருக்ககூடாது. அவ என்ன பெரிய பிகாஸோவா. இன்னும் இரண்டு நாள் தான் பாக்கி இருக்கு. அதுக்குள்ள ஓவியத்தை கொடுத்தாகணும் எனக்குன்னு வந்து மாட்டுது பாரு தலைவலி புடிச்ச வேலை' என தனக்கு தானே புலம்பிக் கொண்டான் வசந்த் 

சிறிது நேரத்தில் ஓவியரின் வீட்டுமுன் கார் தேங்கி நின்றது. கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தபடி காரை விட்டு கீழே இறங்கிய வசந்த், தலையே வெடித்துவிடும் அளவிற்கு இருந்த டென்ஷனை குறைக்க மூச்சுக்காற்றை நன்றாக இழுத்துவிட்டான். டென்ஷன் அதிகமாகும்போது அவ்வாறு செய்தால் சற்று நிவாரணம் கிடைக்கும் என எங்கேயோ எப்பொழுதோ படித்தது நினைவில் வந்தது. புத்தகத்தில் சொல்லியபடி அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. அவன் இதயத்துடிப்பு எகிறியபடியே இருந்தது.

ஓவியரின் வீட்டு காலிங் பெல்லை ஒலிக்கச் செய்தான். இரண்டு நிமிட இடைவெளிக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. ஓவியரின் மனைவி வசந்த்தை விசித்திரமாகப் பார்த்தாள்.

"தொந்தரவுக்கு மன்னிக்கணும் மேடம். அவசரமா ஓவியரை பார்க்கணும்"

"நீங்க காலைல வந்திருக்கலாமே" என்றாள் ஓவியரின் மனைவி. அவள் கேட்ட தொனியில் 'ஏன் இந்த நேரத்தில் வந்து தொந்தரவு செய்கிறீர்கள்' என்பது போலிருந்தது.

"ரொம்ப அவசரம் மேடம். அதான் வேறு வழி தெரியலை"

வசந்த்தை அமர சொல்லிவிட்டு.ஓவியரின் மனைவி மாடியில் உள்ள ஓர் அறைக்கு சென்றாள். அடுத்த நிமிடம் உறக்க விழிகளோடு கொட்டாவி விட்டபடி மாடியில் இருந்து கீழே இறங்கினார் ஓவியர்.

"ஹாய் வசந்த்"

"சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ் சார்"

"என்ன விஷயமா வந்திருக்கீங்க? அதுவும் இந்த நேரத்துல?"

"அவசரமா நீங்க ஒரு ஓவியத்தை வரஞ்சி கொடுக்கணும் சார்"

"ஓவியமா?"

"ஆமா சார், அன்னைக்கு நீங்க வரஞ்சி கொடுத்த ஓவியம் டைரக்டருக்கு பிடிக்கலை. அதுல  சில மாற்றங்கள் செஞ்சி அதே ஓவியத்தை நீங்க திரும்ப வரஞ்சி கொடுக்கணும்"

"நீங்க என்னுடைய ஈகோவை தொட்டு பாக்குறீங்க வசந்த். உண்மையிலேயே அந்த ஓவியத்தை நான் ரொம்பவே மெனக்கட்டு வரஞ்சி கொடுத்திருக்கேன். யாருக்கும் அப்படி நேரம் எடுத்து என் தூக்கத்தை தொலைச்சி வேலை செஞ்சதில்ல. ஆனா நீங்க அதை சர்வ சாதாரணமா நல்லா இல்லைனு சொல்லுறீங்க"

"நீங்க ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிங்க சார். ஆனா டைரக்டர் நீங்க வரஞ்சி கொடுத்த ஓவியத்துல உயிர் இல்லைனு நினைக்கிறார்"

"சாரி மிஸ்டர் வசந்த். இதுக்கு மேல நான் உங்க கூட விவாதிக்க விரும்பலை. அப்படி அந்த ஓவியம் உங்களுக்கு பிடிக்கலைன்னா, நீங்க வேற ஒரு ஓவியரை முயற்சி பண்ணுங்க"

"உங்களுடைய முடிவை நீங்க பரிசீலனை பண்ணி பாக்கணும் சார்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.