(Reading time: 8 - 16 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 09 - வத்ஸலா

vs

காதலித்து, அப்பாவை கேட்காமல் அவரது அனுமதி இல்லாமலேயே ராகுலை மணந்து கொண்டாள்தான். இருந்தாலும் கிட்டத்தட்ட பதிமூன்று பதினாலு வருடங்களாக இவள் அப்பாவை நினைக்காத நிமிடம் இல்லையே!!! பார்க்கவேண்டும் அவரை!!! பேசவேண்டும் அவரிடம்!!! தவித்தது சுஹாசினியின் உள்ளம்.

‘அவர் என்ன உனக்கு மட்டும்தான் அப்பாவா??? எனக்கும் அவர்தான் அப்பா. சொல்லப்போனா அவர் முதல்லே எனக்குதான் அப்பா. அப்புறம்தான் உனக்கு. எனக்கு அப்பாகிட்டே பேசணும்’ ஹரிணியை பிடித்து உலுக்காத குறையாக கத்தினாள் சுஹாசினி.

‘பார்க்கலாம்..என்றாள் ஹரிணி படு நிதானமாக. ‘எனக்கு எப்போ தோணுதோ, நான் எப்போ நினைக்கறேனோ  அப்போதான் நீ அப்பாகிட்டே பேச முடியும்..’

இவர்கள் இருவர் பேசுவதையும் உன்னிப்பாக பார்த்திருந்தான் கவனித்திருந்தான் ஸ்ரீநிவாசன்.

‘பார்க்கலாம். அதையும் பார்க்கலாம். நீ சொல்லலைன்னா என்னாலே அப்பாவை கண்டு பிடிக்க முடியாதுன்னு மட்டும் நினைக்காதே..’ இது ஹாசினி.

‘ரொம்ப சந்தோஷம் கண்டு பிடிச்சுக்கோ. ஏதோ ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கிறோமே. கொஞ்ச நேரம் சந்தோஷமா இருப்போம்னு உங்க வீட்டுக்கு வந்தேன். இங்கேயும் எனக்கு போட்டியா வந்திட்டான் அந்த  விவேக். நான் கிளம்பறேன். இனி என்னாலே இங்கே நிம்மதியா இருக்க முடியாது..’ சொல்லிவிட்டு வாங்கி வந்திருந்த பரிசை ஸ்ரீனிவாசனின் கையில் கொடுத்துவிட்டு...

‘ஹாப்பி பர்த்டேடா செல்லம்..’ சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினாள் ஹரிணி.

‘நான் எப்போ நினைக்கறேனோ  அப்போதான் நீ அப்பாகிட்டே பேச முடியும்..’ மிக அழுத்தமாக சொன்னாள் ஹரிணி. அப்போது அறிந்திருக்கவில்லை அவள். இனி தான் நினைத்தாலுமே அவரை பார்த்துவிடுவது கடினம், அவரிடம் பேசுவது கடினம் என்று  என்று அறிந்திருக்கவில்லை அவள்.

விவேக் காரை செலுத்திக்கொண்டிருந்த சாலையின் இன்னொரு கோடியில் வந்துக்கொண்டிருந்த தாமோதரனுக்கு என்ன தோன்றியதோ மறுபடியும் மகள் ஹரிணியை அழைத்தார்.

சுஹாசினியின் முன்னால் அழைப்பை ஏற்க விரும்பவில்லை ஹரிணி. சட்டென துண்டித்தாள் அழைப்பை. அவளது அப்பாவுக்கு மனதின் ஓரத்தில் சுளீரென வலித்தது. பல நேரங்களில் ஹரிணி அப்படிதான்.

நிச்சியமாக இது அவள் வேலையினால் மட்டுமல்ல. அலட்சியம். அப்பாவின் மீது அப்படி ஒரு அலட்சியம். இது நன்றாகவே புரிந்தது அவருக்கு. இப்போது அவர் சாலையை கடந்தாக வேண்டும்.

‘இரண்டு மகள்கள் இருந்தும் எனக்கென யாரும் இல்லை. அப்பா என்று எனை அன்பாய் அழைக்க ஒரு உள்ளம் இல்லை’ உள்ளுக்குள்ளே மருகிக்கொண்டே நடந்தார் தாமோதரன்.

கண்ணுக்கு எட்டும் தூரத்தில். ‘அப்பா ப்ளீஸ் வாங்கப்பா..’ மறுபடி மறுபடி மனதிற்குள் கெஞ்சியபடியே விவேக் செலுத்திக்கொண்டிருக்க வந்துக்கொண்டிருந்தது அவன் கார்.

சாலை முழுதும் இங்கமங்கும் வாகனங்கள். ஏதேதோ யோசனைகளுடனே சாலையை கடக்க முயன்றார் தாமோதரன். அப்போது.. அங்கே .. விவேக்கின் காருக்கு முன்னால் வேகமாக சென்ற அந்த கார் அவர் மீது மோதி இடித்து தள்ள, அவர் தடுமாறி சாலையில் விழ

க்ரீசிட்டன பல வாகனங்கள்!!! ‘க்...ரீ...ச்... பிரேக்கை அழுத்தினான் விவேக்!!!’

‘விபத்தா??? அய்யோ!!! விபத்தா??? விழுந்தது வயதானவரா??? மொத்தமாக பதறினான் விவேக். ‘இறைவா!!! காப்பாற்று!!!’ சில வருடங்களுக்கு பிறகு உள்ளம் ஏனோ அவன் தனிச்சையாய் இறைவனை தேடியது. காரை சற்றே ஓரமாக நிறுத்திவிட்டு படபடக்கும் இறங்கி ஓடினான் அவரை நோக்கி.

சாலையில் குப்புற விழுந்திருந்தார் தாமோதரன். சுற்றிலும் கூட்டம் கூட ஆரம்பித்திருக்க, அவரை மோதிய அந்த கார் ஓட்டுனர் பயந்து போய் அவர் அருகில் அமர்ந்திருக்க, எது இவனை செலுத்தியது என்றே அறியாமல் ஓடி சென்று அவர் அருகில் மண்டியிட்டான் விவேக்.

அவரை நிமிர்த்தி அவர் தலையை மடியில் சாய்த்துக்கொண்டான் அவன். தனது அப்பாவின் உருவத்தின் மொத்த பிரதிபலிப்பாய் இருப்பவரை தன்னையும் அறியாமல் மடியில் சாய்த்துக்கொண்டான் அவன்.

விழுந்த அதிர்ச்சியில் அப்படியே மயங்கி கண்மூடி கிடந்தார் அவர். நெற்றியில் பட்ட காயத்தின் ரத்தம் முகத்தில் வழிந்துக்கொண்டிருந்தது. முகத்தில் அங்கங்கே காயங்கள்

முகத்திலும் மனதிலும் பதற்றமே மேலோங்கி இருக்க தாமோதரனை பார்த்தான் விவேக். அந்த நிலையில் அப்பாவின் பிரதிபிம்பம் ஒன்று தன் மடியில் கிடப்பதை சத்தியமாய் உணர முடியவில்லை அவனால்.

அங்கே அவர் மீது மோதிய அந்த எல்லாரும் ஒன்று சேர்ந்து திட்டிக்கொண்டிருக்க அது எதையுமே கவனிக்கும் நிலையில் இல்லை விவேக்.

‘சுவாசம் இருக்கிறதா இல்லையா இவருக்கு..’ தவிப்புடன் அவரின் நாடியை பரிசோதித்தான் விவேக். அவரை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்பதே அவனது இப்போதையே தவிப்பாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.