(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 02 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

நீ முகம் திருப்பும் நேரமெல்லாம் இறந்து பிறக்கிறேன் நான். இருளைப் போர்த்திக்கொண்டு வெளிச்சத்தில் மறைந்து நிற்கிறாய். உன் நிழலுக்கும் எனையீர்க்கும் சக்தியுண்டு, நீ பேசாமல் இருந்ததை விடவும் இப்போது இன்ப அவஸ்தையாய் உணர்கிறேன். இமையென்னும் மாளிகைக்குள் புகுந்து விழிப்படுக்கையில் என்னை விழ்த்திவிடும் அழகான ராட்சசி நீ !

ட்சணா வேகமாய் தன் கறுப்பு சில்க் புடவையின் சுருக்கங்களை நீவிவிட்டு சற்றே சாய்ந்திருந்த நெற்றிப்பொட்டை சீராக்கினாள். மஞ்சளும், சந்தனமும் கலந்தாற்போன்ற நிறம் அவளின் உடைக்கு பாந்தமாய் பொருந்தியிருந்தது. நேரம் மாலை ஏழு மணி வெளியே அடர்ந்து போகாமல் இருட்டு மெல்ல தன் அலங்காரத்தை பூமிக்கு வழங்கிக்கொண்டு இருக்க, இலேசான ஒப்பனையுடன் ரிசப்ஷன் அருகில் வந்தாள். ஏய் உனக்கு இன்னைக்கு நைட் ஷிப்ட் இல்லை எங்கே கிளம்பீட்டீங்க....

லட்சணா ஒரு லட்சணமான புன்னகையுடன் அசோக் கூட வெளியே போகிறேன். இரண்டு மணி நேரத்தில் வந்திடுவேன் அதுவரையில் மேகலா பார்த்துக்கொள்ளவதாய் சொல்லியிருக்காங்க. மூணாம் நம்பர் வார்டு பேஷண்டுக்கு மயக்கம் தெளிச்சிடும் இன்னும் ஒரு மணிநேரத்தில் சாப்பிட டயர் சொல்லியிருக்கிறேன் கொடுத்திட்டாங்களான்னு ஒரு ரவுண்ட் பார்த்துட்டு வந்திடறீயா ப்ளீஸ்

ஒகே டார்லிங் ஆனா சீப் வந்து கேட்டா என்ன சொல்றது ? இது ஒண்ணும் காலேஜ் இல்லைம்மா உனக்கு பதில் நான் அட்டெண்ஸ் போட ?

அதெல்லாம் பர்மிஷன் வாங்கியாச்சு, நான் வர்றேன் நீலா அசோக் காத்திருப்பார் என்று சின்ன தலையசைப்புடன் மருத்துவமனையில் இருந்து இறங்கியவள் எதிர்சாரியில் நின்ற அசோக்கைக் கண்டதும் கையை உயர்த்தினாள்.

லேட்டாயிடுச்சா ? போகலாமா ?

கிட்டத்தட்ட ஆனா இப்போ கோவிக்க முடியாதே ஆனா கல்யாணத்திற்கு அப்பறம் இப்படி காக்க வைக்காதே தாயே? காரின் முன் இருக்கையில் ஏறியபடியே, ஏன் அப்போ என்ன செய்வீங்களாம். அடிப்பீங்களா ?

அசோக் சிரித்தபடியே அப்போ லைசென்ஸ் இருக்கே என்ன வேணா செய்யலாம் ரொம்ப லேட் பண்ணா எல்லார் முன்னாடியும் உன்னைக் கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணிடுவேன். அப்போ நீயாவே சீக்கிரம் வந்திடுவே இல்லையா ?

சரியான ஆள்தான் நீங்க ? ஏஸியின் சில்லிப்போடு, திடுமென்று கண்ணாடிக் கதவை இறக்கினான், காற்றில் அவள் முடிக்கற்றைகள் முகத்தில் அலைந்ததை ரசித்தான், அதை மறு கையாய் ஒதுக்கியும் விட்டான். கல்யாணத்திற்கு முன்னாடி இப்படி வெளியே வர்றது ஒரு கிக்தான் இல்லையா லட்சு !

உங்களுக்கு என்ன நான் அம்மாகிட்டே விவரத்தை சொல்றதுக்குள்ளே வெட்கம் பிடுங்கித் தின்னுது. இன்னும் மூன்றுமாதங்கள் தானே அசோக் அதற்குள் இந்த அவசர சந்திப்புகள் தேவைதானா ?

உனக்கு பிடிக்கவில்லையென்றால் இப்போதே வண்டியைத் திருப்பி உன்வீட்டில் விட்டுவிடுகிறேன் டியர்.

அப்படியில்லை.....

பின்னே எப்படியாம் ஆசைதானே சில விஷயங்கள் இந்த வயதின் குறும்பு லட்சு அதைக் கட்டுப்படுத்தாதே பிறகு மனம் அதற்கு ஏங்கும் பார் கல்யாணத்திற்கு பிறகு மனைவியாய் நீ தரப்போகும் முத்தத்திற்கு காத்திருந்தாலும், காதலியின் இதழ் சுவையை நேற்றைய இரவு உணர்ந்தது புது அனுபவம்தானே... கண்ணடித்து அவன் பேசவும்,

கண்றாவி இப்படித்தான் பேசுவீர்கள் என்று தெரியும் இதனால் தான் உங்களுடன் வரவேயில்லை என்று, கிளுக்கிச் சிரித்துவிட்டு நாளை கட்டாயம் கோவிலுக்கு வரப்போவதில்லை பாருங்கள் என்றாள் கண்டிப்புடன்

பார்க்கலாம். என்னாலும் சரி உன்னாலும் சரி நம்மை ஒருவரையொருவர் பார்க்காமல் இருக்க முடியாது, இந்த வீண் பிகுவிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது இப்படி ஏதாவது வம்பளந்து கொண்டே வரும் அசோக் தன்னை மருத்துவமனையில் இருந்து பிக்கப் செய்துகொண்ட நேரத்தில் இருந்து ஏதும் பேசாமல் இருப்பது பெரும் தவிப்பை உண்டு பண்ணியது லட்சணாவிற்கு ! காரில் வரும்போதும் சரி இப்போது ஓட்டலில் அமர்ந்திருக்கும் போதும் சரி அதே கனத்த மெளனம், முன்பொருமுறை இப்படித்தான் சினிமாவிற்குப் போவதாக சொல்லிவிட்டு கார்டன் அமைந்த ஓட்டலுக்கு அழைத்துச்செல்லும் போது உன்னோடு செலவிடும் நேரங்கள் சொற்பமே என்றால் சொர்கம் லட்சணா, அதை நான் ஒரு இருட்டு அறைக்குள் யாரோ அழுவதையும் சிரிப்பதையும் பார்த்துக்கொண்டு செலவழிக்கப் போவதில்லை அதனால் இரண்டரை மணி நேரங்கள் உன்னுடைய பேச்சை மட்டுமே கேட்கப்போகிறேன் என்று கூறியவன் முதலில் என்ன சாப்பிடுகிறாய் என்று அவளிடம் வினவியதும்,

மணாளனின் விருப்பமே மங்கையின் பாக்கியம் என்று லட்சணா குறும்பாய் பேச,

அடக்கடவுளே நீ இந்தகாலத்து அனுஷ்கா மாதிரியிருப்பேன்னு பார்த்தா அந்தக்காலத்து அஞ்சலிதேவி மாதிரியில்லே பேசுறே ? என்று காதை திருகியது எல்லாம் மறந்தவன் போல அமைதியோடு அமர்நதிருந்தவனிடம் மெல்ல பேச்சைத் துவக்கினாள் லட்சணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.