"நீ போட்ருக்க டிரஸ் பாத்தா காபி சாப்பிட போனது போல தெரியலன்னு சொன்னேன்"
"காபி சாப்பிட்டுவிட்டு முக்கியமான ஒருத்தரை பார்க்க போயிருந்தேன்"
"நடுராத்திரில யாருப்பா அந்த முக்கியமானவரு? பொம்பள பிள்ளையா?"
"அதெல்லாம் இல்லைப்பா" வெறுப்போடு வார்த்தைகளை உதிர்த்தான் வசந்த்.
"வேறு எதுக்கு தான் அந்த முக்கியமானவரை பார்க்க போன?"
"விளம்பர விஷயமா ஓவியரை சந்திச்சிட்டு வரேன். அந்த ஓவியம் இருந்தா தான் விளம்பர படத்தையே எடுக்க முடியும்" என கூறிவிட்டு தன் அறையை நோக்கி விரைந்தான் வசந்த்.
வசந்த் சென்ற நொடி முதல் ஏராளமான கேள்விகள் நாராயணன் மனதில் எழுந்தன.
அமேலியா ஹாலில் இல்லாதது, அவள் ஆடையில் இருந்த வண்ணம், வசந்த்திற்கு தேவையான ஓவியம், கனவில் வந்த வசந்தின் காதலி என எல்லாவற்றிற்கும் தொடர்பிருப்பது போல் நாராயணனுக்கு தோன்றியது. சட்டென வசந்தின் காதலி முகம் அவர் நினைவுக்கு வந்தது. அது பரிட்சயமான முகம். அதிர்ச்சியோடு அந்த முகத்தை நினைவு கூர்ந்தார். ஆம். அது அமேலியா!
நீண்ட நேரத்தின் முடிவில் ஓவியத்தை முழுமையாக வரைந்து முடித்தாள் அமேலியா. திருப்தியான மனதோடு ஓவியத்தை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்தவள், சரியாகத்தான் வந்திருக்கிறது என நிம்மதி அடைந்தாள்.
கடிகார முள் விடியற்காலை நான்கு மணியைக் கடந்து சென்று கொண்டிருந்தது. உறக்க விழிகளோடு தன் படுக்கைக்கு வந்த அமேலியா நிலாவை கட்டியணைத்துக்கொண்டு உறங்கினாள்.
அமேலியாவின் உடல் வேகமாக குலுங்கியது. திடுக்கிட்டு விழித்தவளின் முன்னால் மேகலா நின்றுகொண்டிருந்தாள். பூஜை அறையில் இருந்து காற்றில் மிதந்து வந்த மணியோசை அமேலியாவின் உறக்கத்தை மேலும் கலைத்தது. கண்களைக் கசக்கியபடி பூஜை அறையை நோக்கினாள்.
கையில் தீபாராதனையோடு நாராயணன் வெளியில் வந்தார். காலையில் நீண்ட நேரம் உறங்குவது நாராயணனுக்கு பிடிக்காது என அமேலியாவிற்கு நன்றாக தெரியும். உடனே எழுந்து படுக்கையை எடுத்துக்கொண்டு மேகலாவின் அறைக்குள் சென்று மறைந்தாள்.
அமேலியா மறைந்திருந்த அறையை ஓரக்கண்ணால் பார்த்தபடி, மேகலாவின் முன்னால் தீபாராதனையை காட்டினார் நாராயணன். தீபத்தை பக்தியோடு கண்களில் ஒற்றிக்கொண்டாள் மேகலா.
"வசந்த் என்ன பண்ணுறான்?"
"இப்போதான்பா எழுந்தான்"
"நேத்து எப்போ வந்தான்?"
"வழக்கத்தை விட சீக்கிரமாவே வந்துட்டான் அப்பா"
"அப்படியா?" என்று கேள்விக்குறி பார்வையோடு மேகலாவை பார்த்துவிட்டு, மீண்டும் பூஜை அறையை நோக்கி சென்றார் நாராயணன்.
தன் அப்பா கேட்ட கேள்விகள் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் புதிராகவும் இருந்தது மேகலாவுக்கு குழப்பத்தை உண்டாக்கியது.
பாத்ரூமில், கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவாறு பல் துலக்கிக்கொண்டிருந்தான் வசந்த்.
'லூயிஸ் வரைஞ்சி கொடுக்குற ஓவியம் நிச்சயம் டைரக்டரை திருப்திபடுத்தாது. பயங்கரமான வசவு வார்த்தைகளை வாங்க வேண்டியிருக்கும். நாலு பேரு முன்னாடி திட்டு வாங்குனா ரொம்ப கேவலமா இருக்கும். அப்போ வேற எந்த இடத்துல திட்டு வாங்குறது? கார் பார்க்கிங் செய்யிற இடத்துலயே திட்டு வாங்கிக்கலாமா?' என தன் முகத்தை சில நொடிகள் நோக்கினான் வசந்த்.
'அவார்ட் வாங்க ஆசைப்பட்டேன். இப்போ திட்டு வாங்குறதுக்கு லொகேஷன் பார்க்க வேண்டியதா போச்சு. எல்லாம் என் நேரம்' என சலித்துக்கொண்டவன், 'எல்லாத்துக்கும் காரணம் அந்த ஈராக்காரி' என எண்ணியவன், 'அவளை ஏண்டா சொல்லுற? தடிமாடு போல வளந்திருக்க, உனக்கு எங்கே போச்சு புத்தி?' என தனக்குத்தானே பேசிக்கொண்ட வசந்த் குளிக்க ஆரம்பித்தான்.
அரை மணி நேர குளியலை முடித்து ஆடையை உடுத்திக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான் வசந்த். தன் அலுவலக பையை அடுத்த அறையில் வைத்தது நினைவுக்கு வரவே, அங்கே சென்று தனது பையை எடுத்துக்கொண்டு திரும்பிய பொழுது, அமேலியா வரைந்த ஓவியம் அவனை பார்த்துக்கொண்டிருந்தது.
தான் கண்ட காட்சியை நம்ப முடியாமல் விழிகள் இரண்டும் பிதுங்கி கீழே விழுந்து விடுவதைப் போல் ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்துப் பார்த்தான். அது போன்ற ஓவியத்தை மற்றவர் வரைவது நிச்சயம் சாத்தியமற்றதாகவே அவனுக்குத் தோன்றியது. இமைகொட்டாமல் ஓவியத்தின் அழகையே ரசித்துக்கொண்டிருந்தான்.
துளியும் ஆபாசமில்லாமல், ரோஜாச் செடிகளின் நடுவே அந்தரத்தில் ஊஞ்சலாடும் தேவதை ஒருத்தி நிலவினை நெருங்கிக்கொண்டிருந்தாள். அவளின் கொள்ளைகொள்ளும் அழகிய முகத்தை ரோஜா மலர்கள் ரசித்துக் கொண்டிருப்பதாய் அந்த ஓவியம் அமைந்திருந்தது.