(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 03 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

மெளனத்திற்குத்தான் எத்தனை சக்தி ! உதடுகளைப் பிரிக்காமல் நீ உணர்த்திடும் கண்களில் மொழி, இதழ்களின் பூட்டை விலக்கலாமே ! ஒரே நினைவுத் தூறலில் நனைகிறோம் நாம், ரசனைகள் மட்டுமா ரகசியங்களும் ஒத்துப்போகின்றன நமக்குள். வருகிறேன் என்று நீ உறுதியளிக்கும் வரையில் படபடத்த இதயம், நீ வரப்போகும் அந்த சில மணித்துளிகளுக்காகவே காத்திருக்கிறேன்.

ப்படியே உட்கார்ந்திருந்தா என்னடா அர்த்தம். வா வந்து வேலையைப் பாரு இறப்பு நமக்கு விதித்த கொடும் தண்டனைடா, ஆனா எதையும் கடந்து போறதுதான் வாழ்க்கை நமக்கு விதித்திருக்கும் இலக்கு. நண்பனின் ஆறுதல்கள் எதுவும் கமலை தேற்றப்போவதில்லை அது அசோக்கிற்கே தெரியும்.

மாயா ..... மாயா.... என்று அவன் மனம் அரற்றிக்கொண்டு இருக்கிறதே, கமல் என்று ஆசையோடு அவள் அழைக்கும் அந்த ஒலி மட்டும்தான் இப்போதைக்கு அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

நீ ஊரில் இருந்து வந்து ஒருவாரம் ஆகுது இன்னமும் இப்படி இருட்டு அறைக்குள்ளேயே இருந்தா என்னடா அர்த்தம்.

நான் என்ன பண்ணப்போறேன் அசோக் மாயா இல்லாம என்னாலே வாழ்க்கையை நினைச்சிக் கூட பார்க்க முடியலை, நானும் தற்கொலை பண்ணிக்கலாமான்னு கூட சிலசமயம் தோணுது.

முட்டாள் மாதிரி பேசாதே கமல், மாயாவோட இறப்பு தற்கொலைன்னு நீ நினைக்கிறியா ?

கமல் மின்சாரம் தீண்டியதைப் போல அதிர்ந்தான். அசோக் நீ என்ன சொல்றே ? மாயா தற்கொலை செய்துக்கலையா ? அப்போ அவளை யாராவது கொலை செய்திட்டாங்களா ?

எனக்கு இந்த சந்தேகம் ஆரம்பத்தில் இருந்தே இருக்கு, ஒரு நல்ல காதலனா அவளோட கொலைக்கான காரணத்தை கண்டுபிடிச்சு அவங்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கணும் கமல்.....!

மாயாவோட கேஸை யார் விசாரிக்கிறா ?

என்னோட நண்பர் வீராதான் இந்த கேஸை விசாரிக்கிற அதிகாரி, நான் என்னோட சந்தேகத்தை அவர்கிட்டே சொன்னேன், எனக்கும் சந்தேகம் உண்டு, ஆனா மாயாவுக்கு சொந்தமானவங்க யாராவது மாயாவின் இறப்பில் சந்தேகமின்னு புகார் கொடுத்தால் மேற்கொண்டு விசாரணையைத் தொடங்கலான்னு சொன்னார். அதைநீதான் தரணும். மாயாவோட இறப்பு செய்தி கேட்ட பிறகு நான் அவங்க வீட்டுக்குப் போனேன் அங்கே மாயாவோட காரியதரிசி வினிதா மூலமா சில விவரங்கள் கிடைத்தது. இறப்பதற்கு முதல்நாள் நடனநிகழ்ச்சி ஒன்றிற்கு ஒப்பந்தம் செய்ய வந்தவர்களிடம் தான் இனி ஆடப்போவதில்லை, திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபடப் போவதாய் சொல்லியிருக்கிறாள், வந்த நல்லவாய்பை இழந்துவிட்டதாக சொல்லி பெரிய ரகளையாம் அவங்க வீட்டில் ! எனக்கென்னவோ அதன் பிறகுதான் ஏதோ நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதிலும் அவங்க அத்தையையும், அவங்க பையன் சந்துருவையும் பார்த்தாலே நல்லவங்களா தெரியலை,

மாயாவுக்கு அம்மா அப்பாவிற்கு பிறகு அத்தைதான் எல்லாமே, சின்னவயசிலே இருந்தே வளர்த்தவங்க அதனால எதிர்க்க முடியலைன்னு சொன்னாங்க எனக்கென்னவோ நீ சொல்றதும் சரின்துதான் தோணுது. மாயாவோட பணத்தின் மேலதான் அவங்களுக்கு குறி ! நான் அவங்க மேல கம்ப்ளைண்ட் கொடுக்கவா ?

அவசரப்படாதேடா, வீரா நமக்கு உதவுவார், உங்க இரண்டு பேருக்கும் உண்டான காதல் யாருக்கும் தெரியாது. இப்போ எந்த உரிமையில் நீ கேஸ் தர முடியும். அப்படியே தந்தாலும் இறந்து போன மாயாவின் காதலர் என்று நாளை பேப்பரில் வரும் ஆளாளுக்கு யூகம் செய்து எழுதுவார்கள். அது மாயாவுக்கு மட்டும் அல்ல உனக்கும் தான் அசிங்கம்.

அசிங்கமா ? கைப்பற்றி காலமெல்லாம் காப்பாற்றுவதாக இருந்த வாக்கில் இருந்தே நான் தவறி இருக்கிறேன், அதுவே பெரிய அசிங்கம், மாயா பொருட்டு என்ன நேர்ந்தாலும் என் உயிரே போனாலும் நான் கவலைப் படப் போவதில்லை, நீதான் எனக்கு உதவவேண்டும் அசோக்.

பொறுமையா இரு, அவசரம் ஆதாயம் தராது, நான் வீராவை அழைத்து வருகிறேன், அவரும் நமக்கு இதில் உதவிடக் கூடும். அவர்கள் தான் கொலையாளி என்றோ நடந்தது கொலை என்றோ வெளியில் சொல்ல நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை, அது கிடைக்கும் வரையில் பொறுமை அவசியம். கொஞ்சம் ரெஸ்ட் எடு !நண்பனை அமைதிப் படுத்திவிட்டு வெளியேறினான் அசோக். அசோக்கின் பேச்சில் சமாதானம் அடையவில்லை மனம் முழுக்க மாயா....மாயா...என்றே கூவிக்கொண்டு இருந்தது, தவறுதான் மாயா தவிப்போடு இருந்த உன்னைத் தனித்து விட்டு சென்றது தப்புதான். அதற்கு இத்தனை பெரிய தண்டனையா மாயா எனக்கு,, அந்த மணம் வீசும் புன்னகையை இனி நான் எப்போது காணப்போகிறேன்.

சிகப்பும் வெள்ளையென காவலர்களைப் போன்ற சுவரைக் கொண்ட அந்தக் கட்டிடம் தலையாக காவல் நிலையம் என்ற பெயர் பலகையை சுமந்திருந்தது. பலவிதமான உணர்ச்சிக்குரல்கள் கையில் விலங்கில்லாமலே இருவர் அமர்ந்திருந்தனர், சாயம் போயிருந்த உட்சுவற்றில் ஆங்காங்கே அலங்காரத் தோரணங்களைப் போல சிலந்திகள் வலை பின்னியிருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.