(Reading time: 10 - 20 minutes)

கண்ணாடி உடைந்திருந்த பீரோவில் பழுப்பு நிறப் பேப்பர்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது. பூனை ஒன்று முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம் சவால் விட்டபடி சுவாதீனமாய் போக்கு காட்டிக்கொண்டு இருந்தது. காவலர் ஒருவர் தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டு இருந்தார். அவரை நெருங்கி இன்ஸ்பெக்டர் இருக்கிறாரா ? என்று கேள்வி எழுப்பினான் அசோக்

உள்ளே ஒரு கேஸைப் பற்றி விசாரித்துக்கொண்டு இருக்கிறார். நீங்க என்ன விஷயமா அவரைப் பார்க்கணும்,

பர்சனல் அசோக் வந்திருக்கிறேன்னு சொன்னீங்கன்னா அவருக்குத் தெரியும்.

சரிங்க அவர் உள்ளே சென்ற மூன்றாவது நிமிடம், வீரா வெளியே வரும்போதே யூனிபார்மில் வியர்வைப் பூக்கள் பூத்திருந்தன. வாங்க அசோக் டீ சாப்பிடறீங்களா?

ஆச்சு ஸார். என்ன கேஸ்?

பொண்டாட்டி மேல சந்தேகமாம்? அவனும் கருப்பு, பொண்டாட்டியும் கருப்பு, பிள்ளை மட்டும் எப்படி சிவப்பா பொறக்குமின்னு குழந்தையைக் கொல்ல முயற்சி செய்து இருக்கிறான். அதான் நல்லா லெப்ட் அண்ட் ரைட் வாங்கினேன். இவர் ?

மாயாவோட கேஸ் விஷயமா வந்திருக்கோம். இது கமல், கமலநாதன் பர்னிசர்ஸ் முதலாளி மாயாவோட காதலன். வெகு விரைவில் இவங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிறதா இருந்தது. அப்படியிருக்க மாயா தற்கொலை செய்துக்கொள்ள காரணம் இல்லைன்னு அவன் அடித்துச் சொல்றான்.

வெல் மிஸ்டர் கமல் நான் கூட மாயாவின் நடனத்திற்கு தீவிர விசிறி. அவங்க நடனத்தில் உயிர்ப்பும் கண்ணியமும்..! இருக்கும். புகழோட உச்சியில் இருக்கும் ஒருத்தி திடுமென தற்கொலை செய்து கொள்கிறாள் என்றால், ஒன்று மனதளவில் பயங்கரமாக அடிபட்டு இருக்கவேண்டும். அசோக் உங்கள் காதலைப் பற்றிச் சொன்னபோது, மனதில் பசுமையாக காதல் இருக்கும் போது தற்கொலைக்கான மோட்டீவ் என்னவாக இருக்க முடியும் என்று குழம்பினேன். ஆனால் மாயாவின் தரப்பில் எந்த எதிர்ப்பும் இல்லாததால் வேறு வழியில்லாமல் போயிற்று. எனக்கு அந்த வீட்டில் உள்ளவர்கள் மேல் சந்தேகமாக இருக்கிறது. கமல் புகார் தருவதாக இருந்தால் கேஸை மறுபடியும் விசாரிக்க நான் தயார்.

ஆனால், முடிந்துவிட்டது என்று நீங்கள் மூடிய கேஸ் மறுபடியும் புகார் செய்வதால் .........உங்களுக்கு ஏதாவது வருத்தம்.

நியாயம் காப்பாற்றப்பட்டால் நல்லதுதானே.. முதலில் கமலை ஒரு புகார் எழுதித்தரச்சொல்லுங்கள். வீரா சொல்லவும் அசோக் கமலைப் பார்த்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்த பழுப்பு நிற காகிதத்தில் எழுதத் தொடங்கினான். நினைவுகளை தோண்டியெடுப்பதில்தான் இறந்த நிஜங்களை பிழைக்க வைக்கமுடியும்,

கமல் நிமிடங்களைக் கழிக்கவே வெகு சிரமப்பட்டான். எந்த வேலையிலும் மனம் ஈடுபடவில்லை, மாயாவுடனான அடுத்த சந்திப்பை அவன் அசைபோட்டான். . பெங்களூர் சந்திப்பிற்கு பிறகு, இரண்டொரு நாளில் மாயாவிடம் இருந்து அழைப்பு வந்தது கமலுக்கு !

மல் நான் மாயா பேசறேன்

வாட், ஏ சர்ப்பிரைஸ் என்ன திடீர்னு போன்?!

நத்திங் ! இன்னைக்கு வெள்ளிக்கிழமை நான் எப்போதும், திருத்தணி செல்வது வழக்கம் இன்று நீங்கள் வரமுடியுமா ? வேலையிருந்தால் வேண்டாம்.

வேலையில்லை, இருந்தாலும் பார்ப்பதாயில்லை, எப்போது வரவேண்டும்.

மூன்று மணிக்கு, நான் கலைவாணர் அரங்கத்திற்கு வருவேன் அங்கேயே பிக்-அப் பண்ணிக்கொள்ளுங்கள்.

அவசியம் வருகிறேன். என்றவன் இணைப்பைத் துண்டித்துவிட்டு, சத்தமில்லாமல் ஹேய் என்று கத்தினான். அவனின் மேல் ஈடுபாடு இருப்பதினால்தானே அவனை அழைக்கிறாள். காதலைச் சொல்லாமல் மறைமுகமாக பார்வைகளால், உரசல்களால் வெளிப்படுத்துவதில் சுகம் இருக்கத்தான் செய்தது. அந்த சுகத்தை அவன் அன்று அனுபவித்தான்.

சொன்னாற்போல் கலைவாணர் அரங்கில் இருந்து மாயாவை அழைத்துக் கொண்டு காரை திருத்தணிக்கு விரட்டினான் கமல். பேச்சு சற்றுநேரம் பொதுவாய்ச் சென்றது, சிலநேரம் அவள் தன் கையில் கொண்டு வந்திருந்த இசைத்தட்டை உயிர்ப்பித்தாள். நிச்சயம் இது உங்களுக்குப் பிடிக்கும், என் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்துக் குழம்பிக் கொண்டிருக்கும்போது, நான் இதைத்தான் கேட்பேன், அமைதியான அந்த மாலை வேளையில் அருமையான சாக்ஸ்ஸபோன் இசை ஒலித்தது. அதைக் கண்மூடி லயித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள் மாயா.....!

கமலும் அவளின் அந்த மோன நிலையைக் கலைக்கவில்லை, அருகாமையில் அமர்ந்து கொண்டிருக்கும் அவளை பார்வையாலேயே பருகினான். அந்த பொன் முகத்தில் குடி கொண்டிருந்த குழப்பமும், இசையும் மீறி அவளின் நெற்றிச் சுருக்கங்களும் அவள் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டு இருக்கிறாள் என்று தோன்றியது, கோவிலுக்குச் சென்றபிறகும், மலை ஏறி கடவுள் தரிசனம் முடித்த கையோடு இருவரும் ஒன்றாய் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.