(Reading time: 18 - 35 minutes)

19. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

றையில் செல்வாவை காணவில்லை என்றதும், குளித்துவிட்டு தலையில் துணியை கட்டியப்படி அறையில் இருந்து வெளியே வந்தாள் நர்மதா…  படியிறங்கி வீட்டை சுற்றிப் பார்க்க, எங்கேயும் செல்வா தென்படவில்லை…  செல்வா மட்டுமல்ல.. வீட்டில் யாரும் எழுந்தது போல் தெரியவில்லை…

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் நேற்றே சென்றிருக்க, கோமதி இருக்கச் சொல்லியும் இவளது பெற்றோர்களும் நேற்று இரவே சென்றுவிட்டனர்… என்னத்தான் இவளுக்கும் செல்வாவிற்கும் நேற்று திருமணம் முடிந்திருந்தாலும், நேற்று நடந்த சில சங்கடங்கள், அவர்களுக்கு ஒரு சந்தோஷமான சூழலை தரவில்லை… இவளை விட்டுப்போக மனம் வராமலேயே நேற்று அவர்கள் கிளம்பிச் சென்றனர்… யமுனாவும் அவர்களுடனே சென்றுவிட்டாள்…

துஷ்யந்தும் ஏதோ ஊருக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றதால், இப்போது செல்வாவும் எங்கே என்று தெரியாத பட்சத்தில், இந்த நேரம் வீட்டில் இருப்பது, கோமதியும் விஜியும் தான்… இருவரும் ஒருவேளை தாமதமாக தான் எழுந்திருப்பார்களோ என நினைத்து சமயலறைக்குச் சென்றாள்…

ஃபிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தவள், காஃபித் தூளை தேடினாள்… காலையில் காஃபியோடு தான் இவளின் நாட்கள் தொடங்கும்…  இங்கே பில்டர் காஃபியா..?? இல்ல இன்ஸ்டன்ட் காஃபியா?? என்று தெரியாமல் குழம்பியவள், சிறிது நேர தேடலுக்குப் பின், இன்ஸ்டன்ட் காஃபித் தூளை கண்டுப்பிடித்தாள்..

சுடச் சுட காஃபி தயாரித்துக் கொண்டிருந்த போதே, அங்கு கோமதி வந்து சேர்ந்தார்… “என்னம்மா.. நீ காஃபி போட்ற… விஜி இன்னும் எழுந்து வரல..?”

“இல்ல அத்தை.. இன்னும் எழுந்து வரலைன்னு தான் நினைக்கிறேன்..”

அத்தை என்று நர்மதா உரிமையாய் அழைத்ததில் அவர் மகிழ்ந்தார்.. “எப்பவும் இந்நேரம் எந்திருச்சுடுவாளே..” யோசனையோடு சொன்னவர், “கல்யாண வேலையெல்லாம் இழுத்துப் போட்டு செஞ்சால்ல.. அதான் இன்னைக்கு எழுந்துக்க முடியாம இருந்திருக்கும்… நீயே காஃபி போட்டுக்கிற மாதிரி ஆயிடுச்சேமா.. அதுக்கு தான் அம்மா, அப்பாவை ஒருநாள் இருக்கச் சொன்னேன்… அவங்களும் இங்க தங்கறது நல்லா இருக்காதுன்னு போய்ட்டாங்க..” என்று வருத்தப்பட்டார்.

“பரவாயில்ல அத்தை… இதுல என்ன கஷ்டமிருக்கு… உங்களுக்கும் காஃபி போடவா..?? இல்ல டீ ஏதாச்சும் ஹெல்த் ட்ரிங்க்னு குடிப்பிங்களா..??”

“இல்லம்மா.. காஃபி தான், சக்கரை மட்டும் திட்டமா போடு..” என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் போய் உட்கார்ந்தார்… அவருக்கும் ஒரு கப்பில் காபியை கலந்தவள், இருவருக்கும் எடுத்துக் கொண்டு டைனிங் டேபிளை தேடிப் போனவள், அவருக்கு கொடுத்துவிட்டு தானும் பருகத் தொடங்கினாள்…

“அப்புறம் செல்வா இன்னும் தூங்கறானாமா…??” சட்டென்று அவர் கேட்ட கேள்வியில், திருதிருவென்று விழித்தாள்… அவனை தான் அறையில் காணவில்லையே… எங்கே சென்றிருப்பான் என்று இவளுக்கு எப்படி தெரியும்…?? காலையில் எழுந்துப் போனானா..?? இல்லை இரவே வேறு எங்காவது படுத்துவிட்டானா..?? இவளே அது தெரியாமல் தான் எழுந்ததிலிருந்து அதையே யோசித்துக் கொண்டிருக்கிறாள்… இப்போது இவர்களுக்கு என்ன பதில் சொல்வது..??

“ புதுசா வீட்டுக்கு வந்திருக்க, உன்கிட்ட போய் கேக்கறேன் பாரு… செல்வா ஜாகிங் போயிருப்பான்… அவன் கிளம்பும் போது நீ தூங்கிட்டிருந்திருப்ப… அதான் சொல்லாம போயிருப்பான்…

இங்கப்பாரும்மா… உங்க கல்யாணம் எந்த சூழ்நிலையில நடந்தது… உடனே உங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடும்னு எதிர்பார்க்கறது தப்பு… அதுக்கு கொஞ்ச நாள் ஆகும்… அதனால நானோ விஜியோ ஏதாவது தப்பா நினைப்போம்னு நீ பயப்படாத என்ன..??” என்று அவர் சொன்னதும் சரி என்பது போல் அவள் தலையை ஆட்டினாள்…

“செல்வா, ராஜா ரெண்டுப்பேருமே காலையில 5 மணிக்கெல்லாம் எந்திருச்சுடுவாங்கம்மா…. பெரியவன் தன்னோட ரூமுக்குள்ளேயே எக்ஸசைர்ஸ், யோகால்லாம் செஞ்சுப்பான்… செல்வா வெளிய ஜாகிங் போய்ட்டு அப்படியே எக்ஸசைர்ஸ்ல்லாம் முடிச்சுட்டு வருவான்… அதெல்லாம் முடிச்சு வீட்டுக்கு வந்ததும், விஜி போட்ற காபியை குடிச்சிட்டு ஆஃபிஸ்க்கு கிளம்புவாங்க…”

“ஓ அப்படியா… நான் எப்பவும் 6 மணிக்கு தான் எந்திருப்பேன் அத்தை… அம்மா அதுக்கு அரைமணி நேரம் முன்னாடி எந்திரிப்பாங்க… அவங்க குளிச்சுட்டு வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு, காபி போடும் போது நான் எந்திருச்சுடுவேன்… அப்புறம் காஃபி குடிச்சிட்டு, அம்மாக்கு ஹெல்ப் செஞ்சுட்டு நானும் ஸ்கூல் கிளம்பி போய்டுவேன்… அதான் அதே பழக்கத்துல எழுந்து வந்தேன்… நாளையில இருந்து சீக்கிரம் முழிச்சுக்குறேன் அத்தை…”

“எதுக்கும்மா… செல்வாக்கும் சரி ராஜாக்கும் சரி, அந்த ஒன்றரை மணி நேரம் அவங்களோட தனி உலகம், அது முடிஞ்சதும் தான் வெளி உலகத்துக்கு வருவாங்க… விஜியே 6 மணிக்கு தான் எழுந்து வருவா… அதுக்கப்புறம் அவ காஃபி போட்டுட்டு என்னை எழுப்புவா… அதுக்கப்புறம் தான் செல்வாவும் ராஜாவும் வருவாங்க…. வீட்டு வேலை செய்யல்லாம் ஆள் இருக்காங்க… என்ன சமையல் மட்டும் விஜி செய்வா.. ஏன்னா அவ இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து அவ சமையல் சாப்பிட்டு எல்லோரும் பழகிட்டோம்… அதனால நீ எப்பவும் போல எழுந்திரு ஒன்னும் பிரச்சனையில்லை…” அவர் நர்மதாவிடம் சொல்லிக் கொண்டிருந்த போதே செல்வா ஜாகிங் முடித்துவிட்டு அங்கு வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.