(Reading time: 18 - 35 minutes)

ட்டு மணிக்கெல்லாம் காலை உணவை தயார் செய்திருந்தாள் நர்மதா… இந்த வீட்டிற்கு அவள் புதியவள் என்பதால், எதெது எங்கே இருக்கிறது என்பதை அறியாததால், கொஞ்சம் சுலபமான சமையலாக இட்லியும் சாம்பாரும், கூட சட்னியும் செய்திருந்தாள்…  ஆனால் அதற்கே கோமதி வருத்தப்பட்டார்…

என்ன நடந்ததென்றால், நர்மதா கொடுத்த காஃபியை எடுத்துக் கொண்டு கோமதி விஜியை எழுப்பினார்… ஆனால் கட்டிலை விட்டு எழுந்ததுமே விஜி தலைசுற்றி கீழே விழப்போனார்… அவரை பிடித்து படுக்க வைத்த கோமதி, செல்வாவை அழைத்து விஷயத்தை சொல்ல, இவர்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருக்கும் டாக்டரை அழைத்தனர்… அவர் பரிசோதித்து விட்டு பிபி அதிகமாக இருப்பதாக் கூறி, தேவையான மருந்துகளை கொடுத்து, அவர்களுக்கு ஓய்வு தேவை என்று சொல்லிவிட்டு சென்றார்…

விஜிக்கு உடல்நலம் சரியில்லை என்றதும், நர்மதா தானே சமைப்பதாக சொல்லிவிட்டு செல்ல, “வேணாம்மா.. இன்னைக்கு ஒருநாள் ஹோட்டல்ல ஆர்டர் செஞ்சுக்கலாம்..” என்று கோமதி தடுத்தார்…

“எங்க ரெண்டுப்பேருக்குன்னா பரவாயில்ல… உங்களுக்கு எப்படி அத்தை, அதுவும் விஜி அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லை… அதனால வீட்ல செய்ற சாப்பாடு கொடுக்கறது தான் நல்லது..” என்று சொல்லி காலை உணவை தயாரித்தாள்..

செய்த உணவை டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டிருந்த போது… “என்னம்மா முதல் நாளே நீ வேலை செய்ற மாதிரி ஆயிடுச்சேம்மா.. காலையில நீ காஃபி போட்டதே எனக்கு கஷ்டமா இருந்துச்சு… இதுல சமையலும் நீயே செய்ற மாதிரி ஆயிடுச்சே…” என்று கோமதி மனதில் உள்ள வருத்தத்தை வெளிப்படையாக கூறினார்.

“இருக்கட்டும் அத்தை… அம்மாக்கு உடம்பு சரியில்லன்னா, நான் தான் வீட்ல சமைப்பேன்… அதனால எனக்கு எந்த கஷ்டமும் இல்ல…. நீங்க ஃபீல் பண்ணாதீங்க….”

“நீ என்ன சொன்னாலும் எனக்கு கஷ்டமா இருக்கும்மா.. உங்க அம்மா, அப்பா பார்த்தா என்ன நினைப்பாங்க… ஏற்கனவே சில சங்கடங்கள் ல்லாம் நடந்துப் போச்சு… இதுல வந்த இரண்டாவது நாளே உன்னை வேலை வாங்கறதா நினைக்க மாட்டாங்களா..??

ஆனா இதுவரைக்கும் இப்படி ஒரு சூழ்நிலை வந்ததே இல்லம்மா… விஜி ஒரு தலைவலி, காய்ச்சல்னு கூட படுத்ததில்லை… எனக்கு டாக்டர் செக்அப் செய்யும் போதெல்லாம் அவளையும் செல்வா செக்அப் செஞ்சுக்க சொல்வான், பிபி சுகர்ல்லாம் அவளுக்கு நார்மலா தான் இருக்கும்… இன்னைக்கு ஏன் அப்படி ஆச்சுன்னே தெரியல… இதை வெறும் கல்யாண வேலைப் பார்த்ததால வந்த களைப்புன்னு சொல்ல முடியாது… ராஜா கல்யாணத்துல என்னை விட விஜி தான் ஆர்வமா இருந்தா… இந்த கல்யாணம் எந்த பிரச்சனையுமில்லாம நடக்கனும்னு சொல்லிக்கிட்டே இருப்பா… ராஜா கல்யாணம் நின்னது தான் அவளுக்கு வேதனைன்னு நினைக்கிறேன்… அதான் அவளுக்கு உடம்பு முடியாம போச்சு…

இருந்தும் நான் ஒருத்தி… அவளுக்கும் வயசு ஐம்பதுக்கு மேல ஆச்சு, பாவம் தனியா எல்லாம் பார்த்துகிறாளேன்னு, கூட ஒத்தாசைக்கு ஒரு ஆள் போட்ருக்கனும்… இப்போ உனக்கு கஷ்டமில்லாம இருந்திருக்கும் பாரு… ஆனா இன்னைக்கு ஒருநாள் பொறுத்துக்கோம்மா… நாளைக்கே சமையலுக்கும் ஆள் போட்டுட்றேன்…”

“அத்தை நானும் இப்போதைக்கு வேலைக்குப் போகப் போறதில்ல… நாள் பூரா வீட்ல எந்த வேலையும் செய்யாம சும்மா இருக்கறது எனக்கும் ஒரு மாதிரி இருக்கும்… அதனால இந்த சமையல் வேலை செய்யறதுல எனக்கு ஒன்னும் கஷ்டமே இல்ல… அம்மாவோ அப்பாவோ இங்க இருந்திருந்தா கூட இதை தான் சொல்வாங்க… அதனால அதுக்காகல்லாம் நீங்க வருத்தப்படாதீங்க… விஜி அம்மாக்கு பிபி தான அதிகமாயிருக்கு… அவங்களுக்கு சீக்கிரம் சரியாகி வரப் போறாங்க… அப்புறம் நாங்க ரெண்டுப்பேரும் எல்லாத்தையும் பார்த்துக்கிறோம்… அதுவரைக்கும் சமைக்கறதுல எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல… அதனால சமையலுக்கெல்லாம் ஆள் போட வேண்டாம்…”

“சரிம்மா… விஜிக்கு சரியாகற வரைக்கும் கூடமாட காய்கறி அறிய, கடைக்குப் போகன்னு உதவிக்காவது ஆள் போட்டுப்போம்… விஜி சரியாகி வந்தாலும் உதவிக்கு ஒர் ஆள் இருக்கறதுல தப்பில்லையே…”

“சரி உங்க இஷ்டம்… வாங்க சாப்பிடலாம்… விஜி அம்மா எழுந்ததும் அவங்களுக்கு சாப்பாடு கொடுத்துக்கலாம்…”

“இரும்மா செல்வாவும் வரட்டும், சேர்ந்தே சாப்பிடலாம்..” கோமதி சொல்லிக் கொண்டிருந்த போதே, செல்வா படியிறங்கி வந்தான்…. அவன் தயாராகி வந்ததிலேயே அவன் அலுவலகத்திற்கு செல்லப் போகிறான் என்பதை கோமதி அறிந்துக் கொண்டார்.

“செல்வா… ஆஃபிஸ்க்கு கிளம்பிட்டியா..??”

“ஆமாம்மா..”

“ஏண்டா உனக்கு நேத்து தான் கல்யாணம் ஆகியிருக்கு… இன்னைக்கு ஆஃபிஸ்க்கு போறன்னு சொன்னா என்னடா அர்த்தம்..?? ராஜா என்ன சொன்னான்… வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… நீ நர்மதாக்க்கூட நேரம் செலவளின்னு சொன்னானா இல்லையா..??” அவர் சொல்லிக் கொண்டிருக்க, செல்வா நர்மதாவை பார்த்தான்… அவளோ அமைதியாக நின்றிருந்தாள்.

“அம்மா நீங்க சொல்றது புரியுதும்மா… ஏற்கனவே கல்யாண வேலையில என்னோட ஆஃபிஸ் வேலையெல்லாம் பெண்டிங்ல நிக்குதும்மா.. நேத்து திடிர்னு எங்க கல்யாணம் நடந்துடுச்சு… அதனால ஆஃபிஸ் வேலையை அப்படியே விட முடியுமா..?? என்னத்தான் அண்ணன் சொன்னாலும், என்னோட வேலையை நான் தானம்மா பார்க்கனும்…”

“அதுக்காக கல்யாணம் ஆனதும் இவளை கோவிலுக்கு கூட கூட்டிட்டுப் போகாம ஆஃபிஸ் கிளம்புறது நல்லா இல்லடா..”

“அம்மா ஒரு முக்கியமான வேலை இருக்கும்மா ஆஃபிஸ்ல… அதுக்கு கண்டிப்பா நான் போகனும்மா… கோவிலுக்கு நர்மதாவை சாயந்திரம் வந்து அழைச்சிக்கிட்டு போறேம்மா..

“இங்கப்பாரு செல்வா… உங்க கல்யாணம் நடந்த சூழ்நிலைக்கு, இன்னைக்கு நீ ஆஃபிஸ் கிளம்பி போறதும், இவ சமையல் பன்றதும் நல்லாவாடா இருக்கு… சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு நர்மதாவ வெளியக் கூட்டிட்டுப் போ… முடிஞ்சா ரெண்டுப்பேரும் ஹனிமூனுக்கு போய்ட்டு வாங்க…. அப்போ தான் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க முடியும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.