(Reading time: 5 - 9 minutes)

53. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ட்சேஷ்வரின் விழிகள் மிரண்டு நின்றிட, தன் கரம் எதிரே உள்ள கரத்தில் பட்டு எழுப்பிய ஓசை, அவரின் செவிகளுக்குள் ரீங்காரமிட, சட்டென தன் கரங்களை உருவிக்கொள்ள முயன்றார் அவர் குற்ற உணர்ச்சியுடன்….

அவரின் தரை கவிழ்ந்த பார்வை அங்கிருப்பவர்களுக்கு அவரின் தவறினை உணர்த்த, யாருமே குரல் எழுப்பவில்லை….

சில நிமிடத்திற்குப் பிறகு,

“என்ன காரியம் செய்யுற தட்சா?...”

இஷானின் மீது தட்சேஷ்வரின் கரங்கள் படாதவாறு தடுத்திருந்த பிரம்மரிஷியின் குரலில் கோபம் அதிகம் வெளிப்பட்டது…

தகப்பனின் கேள்விக்கு பதில் வார்த்தை பேசாது தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்த தட்சேஷ்வரின் முன் வந்து நின்றான் இஷான் வேகமாக…

“என்னை அடிச்சா உங்க கோபம் போயிடும் தானப்பா?...”

“………………..”

“இத தான் நான் உனக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்தேனா தட்சா?.... தோளுக்கு மேல வளர்ந்த பையனை அடிக்கிற பழக்கம் என்ன பழக்கம்டா?... சொல்லு… யார் சொல்லிக்கொடுத்தது உனக்கு அதை?...”

பிரம்மரிஷி குரலில் ஒரு அழுத்தம் திருத்தத்தோடு கேட்டிட, தட்சேஷ்வர் பதில் உரைக்கவில்லை….

அவரின் மௌனம் பார்த்த இஷான்,

“அடிங்கப்பா… பரவாயில்லை…. நான் வாங்கிக்கிறேன்… என்னை அடிச்சா தான் உங்க கோபம் போகும்னா நான் வாங்கிக்கிறேன்… அடிங்க…”

இஷானின் வார்த்தைகள் முள்ளாய் தட்சேஷ்வரை காயப்படுத்த, அவரோ மௌனம் காத்தார்…

“பாருடா…. நீ பெத்த மகன் பேசுற வார்த்தையைப் பாரு… அடிக்க கை ஓங்கினது தகப்பன் என்ற ஒரே காரணத்துக்காக, ஒரு சாதாரண மனுஷன் என்பதையும் மறந்து, ஒரு போலீஸ்காரன் என்பதையும் மறந்து, தடுக்குற சாக்குல உன் கையை பிடிக்கக்கூட நினைக்காம சிலையாட்டம் நிக்கிறானே பாரு… நல்லாப்பாரு…. இதுதாண்டா அவன் உனக்கு குடுக்குற மரியாதை… ஆனா நீ என்ன செஞ்ச?....”

சுளீரென்ற வலியினை சட்டென தன் தேகம் முழுவதும் உணர்ந்தார் தட்சேஷ்வர்…

கணவனின் நிலையை காண சகிக்காது, அவரின் தர்மபத்தினி, பிரம்மரிஷியிடம் ஏதோ பேச முனைய, அவர் தனது கையமர்த்தி பிரசுதியை தடுத்தார்…

“உன் புருஷனை நான் எதுவும் இனி கேட்கமாட்டேன்மா… எப்ப என் பேச்சுக்கு அவன் மரியாதை கொடுக்குறதில்லைன்னு தெரிஞ்சதோ அன்னைக்கே நான் அவனை விட்டு விலகியிருக்கணும்… அதை விட்டுட்டு, இன்னமும் அவன் முன்னாடி நின்னுட்டிருக்கேனே, இத விட கே….வ….”

பிரம்மரிஷியை மேற்கொண்டு சொல்லவிடாது, அவரின் பாதங்கள் பணிந்தார் தட்சேஷ்வர் கண்ணீருடன்…

“இல்லப்பா… அப்படி சொல்லாதீங்க… தப்பு பண்ணினது நான் தான்… உங்க பேச்சுக்கு மறுவார்த்தை பேசாதவன், சமீப காலமா, உங்க பேச்சை கொஞ்சமும் நான் கேட்கலை… அதையும் நான் வேணும்னு செய்யலைப்பா….”

அவர் தன் தகப்பனிடம் கெஞ்சி மன்றாட, மகனின் தலையில் பாசத்துடன் வருடி விட்டவர்,

“எழுந்திரு தட்சா…” என்றார்…

“என்னை மன்னிச்சிடுங்கப்பா…”

“மன்னிப்பு நீ எங்கிட்ட கேட்கணும்னு அவசியம் இல்ல…. ஆனா நீ ஏன் ஜெய்யை ஒதுக்குறேன்ற காரணத்தை இங்க இருக்குறவங்ககிட்ட சொல்ல வேண்டிய காலமும், இப்போ அவசியமாகி வந்திருக்கு தட்சா…”

“அப்பா……………”

“நான் தான் தட்சா சொல்லுறேன்… உன் மனசுல புதைஞ்சு கிடக்குற காரணத்தை சொல்லு எல்லார்கிட்டயும்…”

தகப்பன் கேட்பது அவருக்கு ஆச்சரியத்தை உண்டாக்க, விழி ஆடாமல் பார்த்தார் தட்சேஷ்வர் பிரம்மரிஷியை…

ஆம்… தட்சேஷ்வரின் குணம் மாறிய காலத்தில் பிரம்மரிஷி ஊரிலேயே இல்லை… எனினும் அதை அருகில் இருந்து பார்த்தவர் போல் தன் தகப்பன் கேட்டிட, அந்த மகனோ ஏதும் சொல்லாமல் திகைப்புடன் நின்றிருந்தார்….

“ஜெய்க்கு சதியை கல்யாணம் பண்ணி கொடுக்குறதுல அப்படி என்னதான்ப்பா உங்களுக்கு பிரச்சினை?.... சொல்லுங்க… எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்…”

இஷான் உடும்பாக கேட்க, தட்சேஷ்வர் மூச்சுக்கூட விடவில்லை…

“சொல்லுங்கப்பா… ஜெய்யை நீங்க இந்த அளவு வெறுக்க அப்படி என்ன காரணம்?... அவன் என்ன பாவம் செஞ்சான் உங்களுக்கு?...”

“…………………………”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.