(Reading time: 11 - 22 minutes)

11. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

இதயத்தின் வலது அறையில் இருக்கும் சைனஸ் நோட் என்ற பகுதி தான் இதய துடிப்பிற்கான பவர் பட்டன் ஆகும்

யார் பாடியது என்று அனைவரும் திரும்பிப் பார்க்க வர்ஷினியின் மீதான பார்வையை அகற்றமால்  புன்னகைத்துக் கொண்டிருந்தான் கணேஷ் ராம்.

ஈஸ்வரமூர்த்தி பாடியது யார் என்று கண்டுகொண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். எப்போதும் அளந்தே வார்த்தைகளைப் பேசும் டாக்டரா இவ்வளவு அழகாய் பாடியது என்று அவருக்கு மிகுந்த வியப்பு.

ஈஸ்வரமூர்த்தி தனது மகனிடம் சைகை காட்ட ஆகாஷ் எழுந்து சென்று கணேஷின் கரங்களைப் பிடித்து அழைத்து வந்து சரியாக வர்ஷினியின் நேரெதிரிலே அமர வைத்தான்.

“டாக்டர், நீங்க சிங்கர்ன்னு எங்களுக்குத் தெரியாம போச்சே” ஈஸ்வரமூர்த்தி சொல்ல கணேஷ் சற்றே சங்கோஜமானான்.

“பெரிய சிங்கர் எல்லாம் இல்ல. மியுசிக் கேட்க பிடிக்கும். சும்மா ரெஸ்ட் டைம்ல ஹம் பண்றதோட சரி”

“உங்க சிங்கிங் டேலண்ட்ஸ் இப்போ நம்ம பக்கம் ரொம்ப தேவை டாக்டர். அந்தாக்ஷரி நாம தான் வின் செய்ய போறோம்” மாப்பிள்ளை பக்கத்தினர் உற்சாகமாக ஆரவாரம் செய்ய சைந்தவி வர்ஷினியின் காதைக் கடித்தாள்.

“வர்ஷா, அப்பா மாமா கூட பேசிட்டு இருந்த அந்த டாக்டர் அவங்க பக்கம் சேர்ந்து அவங்கள சேவ் பண்ணிட்டார். நாம விடக் கூடாது”

“விடக் கூடாது. என்னவனை இந்த ஜென்மம் மட்டுமில்லாமல் ஏழேழு ஜென்மங்களிலும் நான் விடவே கூடாது” மனதிலே நினைத்துக் கொண்டாள் வர்ஷினி.

தனக்கு நேர் எதிரில் அரம்ர்ந்திருக்கும் தன்னவனிடம் செல்ல துடித்த இதயத்தை அடக்க மிகுந்த சிரமம் கொண்டாள். நேரேடுத்து அவனைப் பார்த்து விட்டால் எங்கே அந்தக் கள்வன் விழி வழியே தன் இதயத்தைக் களவாடிக் கொண்டு போய்விடுவானோ என்று இமை அணை போட்டாள்.

“இன்னும் உன் இதயம் உன்னிடம் தான் இருக்கிறது என்று நினைப்பு வேறு உண்டோ உனக்கு” ஏளனம் செய்தது மனம்.

அருகில் அமர்ந்தவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் ராமின் கவனமெல்லாம் வர்ஷினி மீது தான் இருந்தது. அவள் தவிப்பைக் கண்டு கொண்டவன் மனம் ஸ ரி க ம ப த நி என்று சுருதி மீட்டியது

நல்லவேளையாக அந்தாக்ஷரி மீண்டும் தொடங்கவும் சற்றே ஆறுதல் பெருமூச்சு விட்டாள் வர்ஷினி.

அடுத்த பாடல் பாட வேண்டிய முறை பொண்ணு வீடு பக்கம் ஆகையால் வர்ஷினியை சீட்டு எடுக்க சொன்னாள் சைந்தவி. வர்ஷினி கையில் இருந்த சீட்டைப் பிரித்துப் பார்க்க சைந்தவி எட்டிப் பார்த்து “மல்லிகை” என்று உரக்க சொல்லும் முன் வர்ஷினி பாடலையே பாடத் தொடங்கியிருந்தாள்.

“மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

எந்நேரமும் உன் ஆசைப் போல் பெண் பாவை நான் பூ சூடிக் கொள்ளவோ”

வர்ஷினி பாட மூத்த தலைமுறையினர் அனைவரும் மலரும் நினைவுகளில் லயிக்க இளையவர்களோ அவள் ரசித்து பாடிய விதத்தில் மயங்கினர்.

பாடலின் நாயகனோ இமை தட்டாமல் பாடுபவளின் முக பாவனைகளை தனது மனதில் பதித்துக் கொண்டிருந்தான்.

“இத்தனை வருடங்களாக எங்கே இருந்தாய் பெண்ணே. வானின் நட்சத்திரங்களில் ஒளிந்து கொண்டிருந்தாயோ. பூக்களின் மகரந்தத்தில் மறைந்து கொண்டிருந்தாயோ” அந்தக் கணமே அவளை அள்ளிக் கொள்ள துடித்த மனதை வெகுவாய் பாடுபட்டு அடக்கினான்.

அடுத்து பல மலர்களின் பெயர்கள் வர இருப்பக்கமும் எல்லோரும் சளைக்காமல் பாடிக் கொண்டிருந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் பக்கம் ரோஜா என்று வந்ததும் ஹிந்தியில் ரோஜா என்று என்ன பாடல் இருக்கிறது என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க கணேஷ் மீண்டும் அவர்களை காப்பாற்றினான்.

“Roja jaaneman tu hi mera dil

Tujh bin tarse naina

Dilse na jaati hai yaadein tumhaari

Kaise tum bin jeena" 

கணேஷ் ராம் பாட மாப்பிள்ளை பக்கம் ஹுர்ரே என்று ஒரே ஆர்ப்பாட்டம்.

“நீ இல்லாமல் வாழ்வேது” என்ற பொருள் தாங்கி நின்ற அந்த வரியைப் பாடும் போது வர்ஷினி சட்டென்று நிமிர்ந்து எதிரில் அமர்ந்த தன் மன்னவனை விழி விரியப் பார்த்தாள்.

எப்போது அவள் இமைத் திரையை நீக்குவாள், எப்போது அந்த விழி வலையில் போய் சிக்கிக் கொள்ளலாம் என்று காத்துகொண்டிருந்த அவன் இதயம் இப்போது துள்ளி  குதித்தது.

அந்தாக்ஷரி அது பாட்டுக்கு போய் கொண்டிருக்க இங்கே  நான்கு விழிகளில் தனி சங்கீத ஆலாபனையை அரங்கேற்றிக் கொண்டிருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.