(Reading time: 11 - 22 minutes)

அவள் மோதிய வேகத்தில் சற்றே தடுமாறவும் சட்டென அவளது இடையில் கரம் கொடுத்து தாங்கிப் பிடித்தவனை அனிச்சை செயலாக தள்ளி விட்டவள் நிமிர்ந்து முகம் பார்க்க அங்கே அவள் முகத்தின் மிக அருகில் இருந்தவனைக் கண்டதும் பாவை நெஞ்சில் பூக்குவியல் பூகம்பம். ஒரு கையால் கிப்ட் பாக்ஸை பிடித்தவள் மறுகரத்தால் அவனது புஜத்தில் தனது கைகையை ஊன்றி  நின்றாள்.

“அர்ஷு” அவன் காதலை எல்லாம் மொத்தமாக அவளது அழகிய பெயர் சுருக்கத்தில் திணித்து அவள் செவி வாயிலில் சமர்ப்பித்தான்.

அவனை முதன்முதலில் பார்த்த போது அவளுக்கு அவன் மீது ஈர்ப்பு மட்டுமே. பின்பு அது மெல்ல விஸ்வரூபம் எடுத்து அவளை காதலில் மூழ்கடித்த பொழுதில் இருந்து விதவிதமான கற்பனைகளில் அவள் திளைத்துக் கொண்டு தான் இருந்தாள்.

ஆனால் அக்கற்பனை எல்லாம் ஒன்றுமே இல்லை என்னும் வண்ணம் இந்த நிகழ்வு அவன் அழைப்பு இவள் நெகிழ்வு அவளை மொத்தமாய் சாய்த்து அவன் மார்பில் சாய வைத்தது.

“ராம்” ஓர் சொல்லில் ஓர் செயலில் நான் என்றும் உன்னுடையவள் என்று அவனுக்கு உறுதி சொன்னாள் பெண்ணவள்.

விழா நடந்த அரங்கத்தின் வாயிலில் இருந்து சற்று முன்னே பக்கவாட்டில் காரை நிறுத்தியிருந்ததால் மற்றவர் பார்வையில் இருந்து மறைவிலேயே இருந்தனர் என்றாலும் சூழ்நிலை உணர்ந்து சுதாரித்துக் கொண்டான் கணேஷ் ராம்.

அவளை மெல்ல அணைத்து காரின் உள்ளே அமர்த்தியவன் காரின் கதவை மூடவும் அங்கே ஸ்ரீதர் வந்து சேரவும் சரியாக இருக்க அவனுடன் பேசியபடியே காரை செலுத்தினான்.

சிறிது நேரம் ஸ்ரீதர் தான் வளவளத்துக் கொண்டிருந்தான். பின்பு அவன் கண் மூடி சாய்ந்து விட அங்கே மௌனம்  தவழ்ந்து உள்ளே நுழைந்து சூழ்ந்து கொண்டது.

மெல்ல ஸ்டீரியோவை ஓட விட்டான் கணேஷ் ராம்.

இனிய இசையில் ராஜா தாலாட்ட வானத்து நிலவு இவர்களின் காதலுக்கு நானே சாட்சி என்று மகிழ்ந்து அந்த காரின் ஜன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்த்து ஆனந்தம் கொண்டது.

“மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்” பாடல் அவர்களின் நிலையை உணர்த்தவே அங்கு ஒலித்ததோ. அந்த இனிமையை இருவரும் திகட்ட திகட்ட அனுபவித்தனர்.

நேரம் போனதே தெரியவில்லை இருவருக்கும். அதற்குள் வர்ஷினியின் இருப்பிடம் வரவே அங்கே காரை நிறுத்தினான் ராம்.

காரின் கதவை திரந்து இறங்க முற்பட சட்டென விழித்துக் கொண்ட ஸ்ரீதர் தான் சென்று உதவி செய்வதாக சொல்லி கதவை திறந்து கொண்டு இறங்கினான்.

காரில் இருந்த ஸ்வீட் பாக்ஸ் கிப்ட் எல்லாத்தையும் வர்ஷினி எடுத்துக் கொடுக்க ஒவ்வொன்றாய் கொண்டு சென்று வர்ஷினி தங்கியிருந்த வீட்டினில் கொண்டு வைத்தான்.

அவன் அங்கிருந்து சென்றதும் விழிகள் நான்கும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டு பிரியவே மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தன.

அடுத்த நாள் வர்ஷினியும் ஸ்ரீதரும் பாஸ்டன் செல்லவிருந்த நிலையில் இனி எப்படி கண் கொண்டு பார்ப்பேன் என்று தவித்தாள் அவள்.

“அர்ஷுமா இப்படியே என்னோட வந்துடேன். நீயும் நானும் முடியவே முடியாத பாதையில் பயணித்துக் கொண்டே இருப்போம்” கணேஷ் ராம் உள்ளுக்குள் புலம்பினான்.

“ஓகே வர்ஷினி நாளைக்கு பார்க்கலாம். குட் நைட்” என்று ஸ்ரீதர் அங்கே வந்து சொல்லவும் சரி என்று தலையாட்டி விட்டு கார் கண்ணில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க வொர்க் செய்றீங்களா ஸ்டுடண்ட்ஸா” கணேஷ் ஸ்ரீதரிடம் வினவினான்.

“ஸ்டூடண்ட்ஸ் தான். இங்க ப்ராஜக்ட் செய்ய வந்தோம்”

“எங்க என்ன ப்ராஜக்ட்”

ஸ்ரீதர் பதில் கூறும் முன்னே அவனின் மொபைல் அடிக்க இந்தியாவில் இருந்து அவன் குடும்பத்தினர் உரையாடினர்.

அன்றைய நிச்சயதார்த்த விழா பற்றி பேசிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர். அதை கேட்க கேட்க ராமிற்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது.

என்றேனும் வாழ்வில் மறக்கக் கூடிய நாளா... அந்த நொடிகளை நினைத்துப் பார்த்து அதிலே லயித்துக் கொண்டிருந்த ராம் ஸ்ரீதரின் குரலில் களைந்தான்.

“இதோ இங்க தான் சார். தாங்க் யூ சோ மச் சார். சி யு சார்” நன்றி சொல்லி இறங்கி சென்று மறைந்ததும் தான் ராமிற்கு உரைத்தது.

“அவங்களை பத்தின விவரங்களை கேட்காமலே போய்விட்டோமே, அடுத்த முறை என் அர்ஷு கிட்டேயே நேரா கேட்டுக்கிறேன்” என்று நினைத்தவன் தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

வீட்டிற்கு வந்ததும் இரவு உடைக்கு மாறி காபி மேக்கரில் காபியை கலந்து அதை உறிஞ்சியபடியே பால்கனியில் வந்தமர்ந்தான். கையில் அலைபேசியை எடுத்தவன் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு ஓர் முடிவக்கு வந்தவனாக அவளின் எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.

இதயம் துடிக்கும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.