(Reading time: 11 - 22 minutes)

“வர்ஷா காதுல ஸ்டார்ட் ஆகுற மாதிரி என்ன சாங் இருக்கு” சைந்தவி உலுக்கவும் தன்னிலை அடைந்தாள் வர்ஷினி.

“காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன்

விழியோடு தான் விளையாடுவேன் உன் மடிமீது தான் கண்மூடுவேன்”

வர்ஷினி எதிரில் இருந்தவனை நேர்கொண்டு இப்போது பார்த்து அவளின் உள்ளதை சொல்லியே விட்டிருந்தாள். அவளை மடி சாய்த்து தாலாட்ட தானே அவனின் கரங்களும் பரபரத்தன.

அந்தாக்ஷரி முடிந்திருக்க அன்றைய விழா மிகுந்த கோலாகலமாக நிறைவு பெற்றதில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

அந்தாக்ஷரி டிராவில் முடிந்திருக்க தங்கள் அணியை காப்பாற்றிய கணேஷை எல்லோரும் கொண்டாட பெண் வீடு பக்கதினரோ வர்ஷினியை பாராட்டிக்கொண்டிருந்தனர்.

“ஸ்ரீதர் போகலாமா. டைம் ஆச்சு. எப்படி போறது” வர்ஷினி அங்கிருந்து விலகி ஸ்ரீதரை தேடிப் பிடித்துக் கேட்டாள்.

“பெரியப்பா கிட்ட கேக்குறேன் இங்கேயே இரு” என்று அவளிடம் சொல்லிவிட்டு தனது பெரியப்பாவை தேடிச் சென்றான்.

அப்போது அங்கே கணேஷ் ஈஸ்வரமூர்த்தியிடமும் ஸ்ரீதரின் பெரியப்பாவிடமும் விடைப் பெற்றுக் கொண்டிருந்தான்.

“பெரியப்பா நானும் வர்ஷினியும் நியுயார்க் திரும்ப போக கேப் அரேஞ் செய்து தரீங்களா” ஸ்ரீதர் அங்கே வந்து கேட்கவும் கணேஷ் விழிகள் சட்டென பளிச்சிட்டன.

“நானும் நியுயாக் சிடி தான் போறேன். இவங்கள நானே டிராப் செய்திடறேன்” கணேஷ் முன்வந்து சொல்ல ஸ்ரீதரின் பெரியப்பாவிற்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது.

என்ன இருந்தாலும் அந்நிய நாட்டில் வர்ஷினியையும் ஸ்ரீதரையும் எப்படி தனியே அனுப்புவது என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கணேஷ் தானே முன்வந்து அவர்களை அழைத்துச் செல்வதாக சொல்ல நிம்மதி அடைந்தார்.

“ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்” பெரியவர்கள் இருவரும் சொல்ல ஸ்ரீதரிடம் தனது கார் நம்பர் மற்றும் அடையாளத்தை சொல்லி வாயிலில் காத்திருக்கும் படி சொன்னான் கணேஷ் ராம்.

ஜானவியும் சைந்தவியும் வர்ஷினிக்குப் பிரியா விடை கொடுத்தனர்.

“உன்னை மேரேஜ்ல ரொம்ப மிஸ் பண்ணுவேன் வர்ஷா” ஜானவி வர்ஷினியை அணைத்துக் கொண்டாள்.

“வர்ஷா நீ வந்தது எங்களுக்கு ரொம்ப ஜாலியா இருந்துச்சு. பங்க்ஷனை ஒரு கலக்கு கலக்க முடிஞ்சது” இப்போது சைந்தவி முறையாயிற்று.

“அப்புறம் இந்தா இது கல்யாண வீட்டு கிப்ட் அன்ட் ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ்” என்று சொல்லி பெரிய பெரிய டப்பாக்களை வர்ஷினி கையில் திணித்தாள் சைந்தவி.

“எல்லாத்தையும் நீயே வச்சு சாப்பிடு. அந்த தடியன் ஸ்ரீதருக்கு கொடுக்காத” ஜானவி சைந்தவி தொலைவில் ஸ்ரீதர் வருவதைப் பார்த்து வர்ஷினியிடம் சொல்லி சிரித்தனர்.

அதற்குள் அங்கே வந்த ஸ்ரீதர் வர்ஷினியை அவசரப்படுத்தினான்.

“நமக்கு சிடி போக  லிப்ட் கிடைச்சிருக்கு போக. சீக்கிரம் வா” என்றவன் அவள் கைகள் கொள்ளாமல் அள்ளி வந்த கிப்ட் மற்றும் ஸ்வீட் டப்பாக்களை பார்த்து உதவி செய்யும் நோக்கத்தில் கை நீட்ட வர்ஷினி அவனை தடுத்தாள்.

“உனக்கு குடுக்க கூடாதுன்னு சைந்தவி சொல்லிருக்கா. நீ டச் செய்யாதே” வர்ஷினி அவனை மிரட்டலாய் சொல்ல ஸ்ரீதர் அவளிடம் வாக்குவாதம் செய்ய முற்படுகையில் கணேஷ் ராமின் சார் வாசலை கடந்து சற்று ஓரத்தில் ஒதுங்கி நிற்கவும் ஸ்ரீதர் ஓடிச் சென்று அது ராமின் கார் தானே என்று உறுதி செய்து விட்டு வர்ஷினியிடம் அங்கே வருமாறு சைகை செய்தான்.

“இதெல்லாம் பின் சீட்லே வச்சுட்டு நீ உட்காரு நான் முன்னாடி உட்கார்ந்துக்கிறேன்” ஸ்ரீதர் காரின் கதவை திறந்து வர்ஷினியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவனது பெரியப்பா அழைக்கவும் முன் சீட்டில் அமர்ந்திருந்த ராமிடம், “சார் டூ மினிட்ஸ் பெரியப்பா கூப்பிடுறார் வந்திடறேன். நீங்க கொஞ்சம் வர்ஷினிக்கு ஹெல்ப் செய்ய முடியுமா ப்ளீஸ்” என்றவன் பதிலுக்கு கூட காத்திராமல் அவனது பெரியப்பாவை நோக்கி விரைந்தான்.

அதுவரை யாருடைய கார்  என்று வர்ஷினிக்கு தெரிந்திருக்கவில்லை.

“இந்த ஸ்ரீதர் இருக்கானே ஜானவி அக்கா பேக் கொண்டு வந்து தருவதுக்கு முன்னாடி இழுத்துட்டு வந்துட்டான். இப்போ எப்படி இதை எல்லாம் சீட்ல வச்சுட்டு உட்காருவேன். பேசாம அவன் தூக்கிட்டு வரேன்னு சொன்ன போதே அவன்கிட்ட தள்ளியிருக்கணும்” உள்ளுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தவள் கையில் இருந்த பெட்டிகளை ஒரு கரம் மெல்ல எடுத்து காரின் சீட்டில் வைத்துக் கொண்டிருக்க வர்ஷினியின் தேகம் ஏனோ சிலீர் என்று சில்லிட்டது.

அது வரை எதிரில் நின்று கொண்டிருப்பவன் ராம் என்று அவள் அறிந்திருக்கவில்லை.

ஒரே ஒரு பெரிய கிப்ட் பாக்ஸ் மட்டும் மிஞ்சியிருக்க அதை தானே உள்ளே வைக்க அவள் எத்தனிக்க அதே நேரம் குனித்து உள்ளே பெட்டியை அடுக்கிய ராம் நிமிர சட்டென அவன் மீது மோதினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.