(Reading time: 14 - 27 minutes)

21. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

செல்வா, நர்மதாவிற்கு திருமணமாகி ஒருவாரம் முடிந்திருந்தது… இன்னும் அவர்கள் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.. செல்வா தன் மனதை நர்மதாவிற்கு புரிய வைக்க முயற்சித்தாலும், நர்மதா அவனை பேச விடுவதாக இல்லை… ஏதாவது ஏட்டிக்குப் போட்டி பேசி அவனை வெறுப்பெற்ற தான் பார்ப்பாள்.. ஒருபக்கம் தன் சகோதரன் ஊரில் இல்லாததால் வேலைப் பளுவும் அவனுக்கு சேர்ந்திருந்தது… என்னத்தான் துஷ்யந்த் குன்னூரிலிருந்தப்படியே எல்லாம் கவனித்துக் கொள்வதாக சொல்லியிருந்தாலும், வெளியூர் சென்றிருக்கும் அவன் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் என்று செல்வாவே எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டான்… அதனால் நர்மதாவோடு நேரம் செலவளித்து தன்னை புரிய வைக்கவும் அவனுக்கு நேரமில்லை..

இந்த நேரத்தில் நர்மதாவை தேடி அவளுடன் பணிபுரியும் தோழி சௌமியா வீட்டுக்கு வந்திருந்தாள்… சௌமியாவை தோழி என்று சொல்லிட முடியாது… ஏனென்றால் பணிபுரியும் இடத்தில் நர்மதா, யமுனாவை பார்த்து அவள் எப்போதும் பொறாமை கொள்வாள்… அவர்களுக்கு முன்னரே அந்தப் பள்ளியில் அவள் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்… ஆனால் நர்மதாவும் யமுனாவும் வேலைக்குச் சேர்ந்ததும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும், பள்ளி தாளாளரும் இவர்கள் இருவருக்குமே அடிக்கடி பொறுப்பகள் கொடுப்பதும், முக்கியத்துவம் கொடுப்பதும் அவளுக்கு பொறாமையை உண்டாக்கியது. அதை வெளிப்படையாகவே மற்ற ஆசிரியர்களிடமும் அவள் தெரியப்படுத்தியிருக்கிறாள்… இது நர்மதா, யமுனா காதுக்கு எட்டியும், இருவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை… உடன் பணிபுரியும் ஆசிரியை என்ற முறையில் இருவரும் சௌமியாவிடம் நல்லவிதமாகவே பேசுவர்…

இதுவரையில் பணிபுரியும் இடத்தில் தான் நர்மதா, யமுனாவிடம் சௌமியாவிற்கு பொறாமை என்றால், இப்போது தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் நர்மதாவை பார்த்து சௌமியாவால் பொறாமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.. சௌமியாவிற்கு தான் முதலில் திருமணம் நிச்சயமானது… ஒரு பெரிய ஐடி கம்பெனியில் சில லட்சங்கள் வருமானம் உடைய வரன் அவளுக்கு அமைந்தது… திருமணமானதும் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும், இரண்டு படுக்கயறைகள் கொண்ட ப்ளாட்டில் தான் அவள் வசிக்கப் போகிறாள்… இதை நினைத்து அடிக்கடி சந்தோஷத்தில் தன்னோடு பணிபுரியும் தோழிகளிடம் பெருமையாக சொல்வாள்…

ஆனால் அதன்பிறகு தான் நர்மதாவிற்கு திருமணம் நிச்சயமானது.. அதுவும் ஒரு மாதத்திற்குள்ளேயே திருமணம்… அதுவும் மாப்பிள்ளை வீட்டைப்பற்றி கேள்விப்பட்ட போது தலையே சுற்றியது அவளுக்கு… நர்மதாவுடைய நல்ல மனசுக்கு தான், இப்படி ஒரு வரன் அவளுக்கு அமைந்திருக்கிறது, என்று உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் பேசும்போது சௌமியாவிற்கு நர்மதா மீது பொறாமை அதிகமாக ஆனது…

தன்னுடைய கல்யாண வேலைகளால் அவளால் நர்மதாவின் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை… ஆனால் திருமணத்திற்கு சென்று வந்த தோழிகள் அந்த திருமணத்தைப் பற்றியும், நர்மதாவின் புகுந்தவீட்டு செல்வ செழிப்பைப் பற்றியும் பெருமையாக பேசினார்கள்… மாப்பிள்ளை மாறியது கூட அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை… எனவே நர்மதாவை வீட்டில் போய் சந்தித்துவிட நினைத்தாள்…

திருமணத்திற்கு அழைப்பதை ஒரு காரணமாக வைத்து, அப்படியே நர்மதாவின் திருமணத்திற்கு வராததற்கும் மன்னிப்பு கேட்பது போல் வீட்டிற்கு செல்லலாம் என்று சௌமியா முடிவெடுத்து வந்தாள்.

திடிரென்று சௌமியா வீட்டுக்கு வருவாள் என்று நர்மதா எதிர்பார்க்கவில்லை… அதே சமயம் அவளை வரவேற்கவும் தயங்கவில்லை..

“ஹே சௌமியா.. வா. வா..  நீ வீட்டுக்கு வருவன்னு எதிர்பார்க்கல.. உள்ள வா..”

“கல்யாண வேலையில பிஸி நர்மதா.. அதான் உன்னோட மேரேஜ்க்கு வர முடியல.. சாரி..”

“பரவாயில்ல சௌமியா.. டீச்சர்ஸ்ல்லாம் சொன்னாங்க… ஆமா உன்னோட மேரேஜ் எப்போ..?”

“இந்த மந்த் லாஸ்ட் தான் மேரேஜ்.. அதான் இன்விடேஷன் கொடுக்க வந்தேன்..” என்று நர்மதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாலும், அவள் பார்வையோ அந்த வீட்டை மேற்பார்வையிட்டது.. ம்ம் இவளுக்கு தான் எவ்ளோ லக்.. அண்ணன் வேண்டான்னு சொன்னாலும், தம்பி இவளை கல்யாணம் செய்துக்கிட்டானே.. எப்படியோ இத்தனை சொத்துக்கு இவளும் சொந்தக்காரி தானே என்று மனமோ பொறுமியது.. இருந்தும் நர்மதாவிடம் அக்கறை உள்ளது போல காட்டிக் கொள்ள,

“உன்னோட கல்யாணத்துல நடந்த குழப்பத்தை கேள்விப்பட்டேன் நர்மதா.. கல்யாணம் நிக்கற அளவுக்குப் போயிடுச்சாம்… அண்ணனுக்கு பதிலா தம்பி உனக்கு தாலிக்கட்டினாராமே.. அதுவரைக்கும் பரவாயில்ல, கல்யாணம் நின்னு உன்னோட ஃப்யுச்சர் பாதிக்காம இருந்துதே..” என்றுக் கூறினாள்.. அதிலும் ஒரு கேளித்தன்மை ஒளிந்திருந்ததை நர்மதா உணர்ந்தாள்…

“ஏன் நின்னுக்கிட்டே பேசிக்கிட்டு இருக்க?? உக்காரு சௌமியா..??” நர்மதா சொல்லிக் கொண்டிருந்த போது கோமதியும் அங்கு வந்தார்.

வந்திருப்பவர் யார் என்ற ஆராச்சி பார்வையோடு கோமதி பார்த்ததும், “அத்தை இது சௌமியா.. என்னோட ஒன்னா ஸ்கூல்ல வொர்க் பண்ணா.. இவளுக்கு எனக்கு முன்னாடியே கல்யாணம் முடிவாகியிருந்துச்சு... இந்த மாசம் கடைசில கல்யாணம், அதான் இன்விடேஷன் வைக்க வந்திருக்கா..” என்று சௌமியாவை அறிமுகப்படுத்தினாள்.

“இது என்னோட மாமியார்..” என்று சௌமியாவிற்கும் கோமதியை அறிமுகப்படுத்தினாள்..

“வணக்கம் ஆன்ட்டி..”

“ம்ம் உக்காரும்மா..” என்றவர், நர்மதாவை பார்த்து, “உன்னோட ப்ரண்டுக்கு ஏதாச்சும் சாப்பிட கொடுத்தியாம்மா..??” என்றுக் கேட்டார்.

“இல்ல அத்த.. இப்ப தான் வந்தா.. தோ எடுத்துட்டு வரேன்..” என்று செல்லப் பார்க்க,

“எனக்கு சாப்பிடல்லாம் எதுவும் வேண்டாம் நர்மதா.. இந்த பார்மாலிடியெல்லாம் வேண்டாம்.. நீ உன்னோட ஹஸ்பண்டோட கண்டிப்பா என் மேரேஜ்க்கு வரனும்..” என்றவள், திருமணப்ப்பத்திரிக்கையை நர்மதாவிடம் நீட்ட..

“சௌமியா இதை அத்தை கையில கொடு…” என்று நர்மதா கூறினாள்.

பெரியவர்கள் இருக்க, அவர்களுக்கு மரியாதை கொடுத்து பத்திரிக்கையை அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்பதை நர்மதா அறிந்து வைத்திருப்பதை நினைத்து கோமதி மகிழ்ச்சி அடைந்தார்.

“ஓ சாரி.. இந்தாங்க ஆன்ட்டி.. நீங்களும் என்னோட மேரேஜ்க்கு கண்டிப்பா வரனும்..” என்று பத்திரிக்கையை அவரிடம் கொடுத்தாள்..

“ரொம்ப சந்தோஷம்மா.. என்னால கல்யாணத்துக்கு வர முடியும்னு உறுதியா சொல்ல முடியாது… கண்டிப்பா செல்வாவும் நர்மதாவும் வருவாங்க..”

“ஓகே ஆன்ட்டி.. அப்புறம் ஆன்ட்டி உங்க வீடு சூப்பரா கட்டியிருக்கீங்க..” என்றவள், பின் நர்மதாவை பார்த்து,

“நர்மதா உன்னோட ரூம் எப்படி… நான் இப்பவே என்னோட பியான்சிக் கூட சேர்ந்து என்னோட ரூம் எப்படி இருக்கனும்னு ரெண்டுப் பேரும் ப்ளான் செஞ்சு பில்டர்ஸ் கிட்ட சொல்லிட்டோம்.. நீயும் மேரேஜ்க்கு முன்னாடியே ஏதாச்சுன் ப்ளான் போட்டியா..??” என்றுக் கேட்டதும், நர்மதாவிற்கு அந்த கேள்வி சங்கடத்தை தர, கோமதிக்கோ இந்த பெண்ணுக்கு திருமணத்தில் நடந்தது தெரியுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.