(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 18 - தேவி

vizhikalile kadhal vizha

செழியன் மறுநாள் காலை ஊருக்கு கிளம்பி சென்றான். முதல் நாள் காதல் சொல்லிட்டு, அடுத்த நாள் காதலிய பார்க்க கூட முடியாமல் இருக்கும் நிலைமை தன்னை தவிர வேறு யாருக்கும் வராது என்று நொந்தவனாக கிளம்பி சென்றான்.

இன்னும் நான்கு நாட்கள் கல்லூரி திறக்க இருப்பதால், மலர் வீட்டில் தான் இருந்தாள்.

என்ன முயன்றும் அவளால் செழியனின் நினைவு வருவதை கட்டுபடுத்த முடியவில்லை. எங்கே அம்மாவோ, ஆச்சியோ கண்டுபிடித்து விடுவார்களோ என்று எண்ணியவள், உணவு உண்ணும் நேரம் தவிர, தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

முதல் நாள் அதை சாதாரணமாக எண்ணிக் கொண்ட வள்ளி மற்றும் அவள் மாமியார், அடுத்த நாளும் தொடரவே, அன்று இரவு உணவிற்கு வந்த மலரிடம், வடிவு,

“ஏன் புள்ள.. ரெண்டு நாளா உன் அறைக்குள்ளே அடைஞ்சு கிடக்கியே.. ஏன்.. மேலுக்கு சுவம் இல்லியா கண்ணு..?”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஆச்சி.. “

“பொறவு ஏன்.. அங்கனையே  அடைஞ்சு கிடக்க..?”

“கொஞ்சம் வேலை இருக்கு ஆச்சி.. அதோட இனிமேல் திரும்பவும் வேலைக்கு போவனும் .. அதான் கிடைக்கிற நேரம் தூங்கிக்க்கலாம்னு ரூம்லே இருக்கேன்..”

அது சரிதான். ஆனாக்க உன் மூஞ்ச பார்த்த சடைவா (சோர்வா) இருக்க மாதிரி தெரியலியே.. நல்லா பளா பளான்னு இருக்கு. “

“ஆச்சி.. அது வெளிலே அலையாம. .வீட்டிலேயே இருக்கேன்ல.. அதான் முகம் பளபளப்பா ஆயிருக்கும்.. “

“என்னவோ சொல்லுத.. நானும் கேட்டுகிடுதேன்.. “

இதனை கதையும் அவள் அப்பாவை வைத்துக் கொண்டு வடிவு பேசிக் கொண்டு இருந்தார்.

மலர் மனதிற்குள் தன் பாட்டியை “இந்த ஆச்சிக்கு வேற நேரமே கிடைக்கலியா.. என் கதை கேக்குறதுக்கு.. இப்போ அப்பா கிட்டே வேறே சமாளிக்கனுமே.. ஆச்சி... உன்னை .. எனக்கும் நேரம் வரும்.. அப்போ நல்லா மாட்டி விடுறேன்.. “

என்று திட்டிக் கொண்டு இருந்தாள்.

அவள் எண்ணியது போல் அவள் அப்பா

“அம்மா.. அதான் புள்ள சும்மாதான் படுத்து கிடக்கேன்னு சொல்லுதால்லே.. விடுங்க.. ரெண்டு நாளிலே சரியயிடுவா..” என்று தன் மகளை பார்த்துக் கொண்டே சொன்னார்..

மலர் எல்லோருக்கும் செல்லம் என்றாலும், அவளின் அப்பாவிற்கு ரொம்ப செல்லம்.. அவரின் உயிர் அவள்தான்.. மலரும் எல்லோரிடமும் ஏட்டிக்கு போட்டியாக பேசுபவள் தன் அப்பாவிடம் மட்டும் உடனே சரிப்பா என்று விடுவாள்.

மலரின் அம்மா வள்ளிக்கும், ஆச்சி சுந்தரவடிவிற்கும் கொஞ்சம் வருத்தமே.. பாரு காரியம் சாதிப்பதற்கும், வம்பு வளர்க்கவும் அம்மாவும், ஆச்சியும் வேணும்.. செல்லம் கொஞ்ச அவள் அப்பாகிட்டே போறத... என்று தான் பொறுமுவார்கள்..

அதே சமயம் அவளின் பிடிவாதத்தை தளர்த்தக் கூடிய ஒரே நபரும் அவள் அப்பா தான்..

அதனால் தான் தன் ஆச்சி அப்பா எதிரில் வைத்து பேசி விட்டார்களே என்று சங்கட பட்டாள்.

அவள் எண்ணியது போல் . வேலனும் அவர் அம்மாவின் பேச்சை கவனித்தார்தான்.. முதலில் வழக்கம் போலே இருவரின் வம்பு சண்டை என்று எண்ணியிருந்தவர், மலரின் பளபளப்பு பற்றிய பேச்சு வரவும், தன் மகளை உற்று கவனித்தார்.

என்னதான் தன் மகள் தனக்கு உலக அழகி என்றாலும், அவளின் அதிகபடியான மினுமினுப்பு அவரை யோசிக்க வைத்தது.. கடந்த சில நாட்களாக மலரின் நடவடிக்கையில் சில பல மாற்றம் ஏற்பட்டு , அது அவரின் கண்ணிலும் பட்டது.

அதிக நேரம் தனிமையில் இருப்பது, ஏதோ யோசனையில் இருப்பது என்பதை எல்லாம் பார்க்கும் போது ஒருவேளை செல்ல மகளின் மனதில் எதாவது ஆசை இருக்குமோ என்று எண்ணினார்.. ஆனால் அப்படி இருந்தால் தன்னிடமோ, மனைவியிடமோ மறைக்க கூடியவள் அல்ல தன் மகள் என்றும் தோன்றியது.

இன்றைய பேச்சுக்கு பின், மகளிடம் பேச வேண்டும் என்று முடிவு எடுத்தவராக,

“மலர், சாப்பிட்டு வாம்மா.. கொஞ்ச நேரம் வாசல் ஊஞ்சலில் உட்கார்ந்து இருக்கலாம்..” என்று அழைக்க,

“சரிப்பா.. “ என்று தன் பாட்டியை திட்டிக் கொண்டே சொன்னாள் மலர்.

இருவரும் ஊஞ்சலில் அமரவும், உள்ளே மாமியாரும், மருமகளும் ஒன்றாக சீரியல் பார்க்க உட்கார்ந்தார்கள். எதில் ஒற்றுமையோ இல்லியோ. சீரியல் விஷயத்தில் இருவரும் சமாதான புறாவை பறக்க விட்டு விடுவார்கள்.

அதனால் அப்பா மகள் பேசுவதை அவர்கள் கவனிக்கவில்லை.

மலரின் அப்பா..

“மலர்.. எதுவும் பிரச்சினையாம்மா.. அப்பா இருக்கேன்.. எத நினைச்சும் கவலைப்படக் கூடாது.. சரியா..”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைப்பா.. இந்த பாட்டி சும்மனாச்சுக்கும் எதாவது கிளப்பி விட்டுட்டு இருக்கு .. ஏனப்பா.. இந்த பாட்டியா எப்படி இத்தனை வருஷம் சமாளிசீன்களோ...?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.